நாடும் நடப்பும்

கோவிட் தடுப்பு மருந்து ஆய்வில் இந்தியர்கள்

2020 முடிய ஒரு மாதமே இருக்கும் நிலையில் கொரோனா மகா தொற்று முற்றிலும் தணியாத நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா? என்ற கேள்விக்கு பதில் தருவதில் அரசுகளுக்கு இருக்கும் குழப்பம் புரிகிறது.

முகக்கவசம் அணிவது, கைகளை நன்கு கழுவிக் கொள்வது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் ஓர் அளவு நல்ல பலன் தந்து கொண்டுதான் இருப்பதை உணர்ந்து விட்டோம். ஆனால் சற்றே நிலைமை சீராகி வரும் அறிகுறி தென்பட ஆரம்பித்த பகுதிகளில் மீண்டும் தொற்று பரவி வருவதால் பல்வேறு புதுப்புது அச்சங்கள் தோன்றுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் அலை துவங்கிவிட்டதாக அரசுகள் அறிவித்து விட்டது. வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் திரும்பி வர ஆரம்பித்ததால் தொற்று அதிகரித்து இருக்கலாம்.

இந்த அச்சங்களுக்கு தீர்வு தடுப்பு மருந்து உருவாக்குவதில் தான் இருக்கிறது. அதை உணர்ந்து அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரிட்டன் உட்பட பல நாடுகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பூர்வாங்க ஆய்வுகளில் வெற்றி கண்ட பல நாடுகள் அவர்கள் உருவாக்கிய மருந்தை அடுத்த கட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தி வருகிறார்கள்.

இன்றும் நம் நாட்டில் அன்றாடம் 40 ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். மொத்த பாதிப்படைந்தோர் எண்ணிக்கை சில நாட்களில் ஒரு கோடியை எட்ட இருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவும் கோவிட் மருத்துவ ஆய்வில் பின் தங்கவில்லை என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் அகமதாபாத், ஹைதராபாத், புனே ஆகிய இடங்களில் உள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ள 3 நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்களுக்கு தனது பாராட்டுகளை அவர் தெரிவித்தார்.

இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், அகமதாபாத்தைச் சேர்ந்த ஜைடஸ் பயோடெக் பார்க், புனேவில் உள்ள சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) ஆகிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்த 3 நிறுவனங்களின் மருந்துகளும் 2 மற்றும் 3 –வது கட்ட பரிசோதனையில் இருக்கும் நிலையில் மருந்து தயாரிப்பு பணிகளை பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

பிரதமராக பதவி ஏற்ற முதல் நாளில் இருந்தே படு சுறுசுறுப்பாக செயல்பட்டு வருபவர் மோடி என்பதை உலகமே அறியும். ஆனால் கொரோனா மகா தொற்றை எதிர்க்க ஊரடங்கை அவசர சட்டமாக பிறப்பித்த பிறகு பிரதமர் மோடி வெளி நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகிறார். குறிப்பாக வெளிநாடுகள் பிரயாணத்தை ரத்தும் செய்தார்.

ஆனால் நாடெங்கும் நடைபெறும் கொரோனா எதிர்ப்பு மருந்து தயாரிப்பின் அவசியத்தை உணர்ந்து எந்த நிலையில் இருக்கிறது என்பதை நேரில் கண்டு தெரிந்து கொள்ள இப்படி ஒரு சூறாவளி பிரயாணத்தை ஒரே நாளில் மேற்கொண்டு இருப்பது மலைப்பான ஒன்று, மகத்துவமான மிக அவசியமான ஒன்று என மக்கள் பாராட்டுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *