செய்திகள்

இந்திய பாரம்பரிய கலைக் கலாச்சார கல்வியை வழங்க பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் திண்ணைப் பள்ளிக்கூட துவக்க விழா

Spread the love

காஞ்சீபுரம், அக். 10–

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அறிவுரையின்படி, கிராமப்புற சிறார்களுக்கு இந்திய பாரம்பரிய கலைக் கலாச்சார கல்வியை வழங்கும் நோக்கத்துடன் ஸ்ரீபெரும்புதூர் வட்டம், பிள்ளைபாக்கம் கிராமம், ஐயங்கார் தெருவில் அமைந்துள்ள கட்டிடத்தில் திண்ணைப்பள்ளிக்கூடம் துவங்கப்பட்டது.

இந்நிகழ்வில், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்திற்காக இப்பள்ளிக்கூடத்தை ஒருங்கிணைத்து நடத்தி வருபவரும் ஸ்ரீ சங்கரா கல்லூரி முதல்வருமான முனைவர் கலை.இராம. வெங்கடேசன் தலைமை தாங்கி, துவக்கிவைத்து உரையாற்றினார். அவர் பேசுகையில்,இந்த பாடசாலை, விடுமுறை நாட்களில் வாரம் ஒருமுறை இயங்கும். பெற்றோரின் விருப்பத்துடன் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு மனம், உடல், சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கான பயிற்சிகள், யோகா போன்ற உடற் பயிற்சிகள், மரபார்ந்த இசை முதலான கலைகள், நாட்டுப்புறக் கலைகள், திருக்குறள் முதலான நீதி இலக்கியங்கள், சிறார் பாடல்கள், நீதிக் கதைகள், மனக்கணக்குகள், நாடகம் முதலான படைபாற்றல் வெளிப்பாடு முதலானவை சொல்லித்தரப்படுகின்றன.

மரபான திண்ணைப் பள்ளிக்கூடங்களில் பலதிறன்களும் பெற்ற பல மேதைகள் உருவானது போல, கிராமப்புற மாணவர்கள் பல திறன்களோடு உருவாகி வருவதை ஊக்கப்படுத்துவதற்காக இப்பாடசாலை இயங்கவுள்ளது. இவ்வகுப்புகளை வாரந்தோறும் வெவ்வேறு ஆளுமைகள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், வல்லுநர்கள் நடத்தவுள்ளனர் என்றார்.

செளமியா ராமானுஜம், பிள்ளைப்பாக்கம் அரசுப்பள்ளி மேனாள் தலைமையாசிரியர் ஏழுமலை, கடுவஞ்சேரி அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் ரதிபாய், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் காசிநாதன் ஆகியோர் திண்ணைப் பள்ளிக்கூடத்தையும் மாணவர்களையும் வாழ்த்திப் பேசினர். அவ்விடத்தின் உரிமையாளரும் சமூக சேவகருமான மருத்துவர் பி.பி. கெளசிக் அவர்கள் ஸ்ரீ மடத்தின் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப்பொருட்களை வழங்கினார். முனைவர் ஜெ. இராதாகிருஷ்ணன் வரவேற்றார். . ஸ்ரீதர்ராஜன் நன்றி கூறினார்.

தொடர்ந்து, காஞ்சிபுரம் ரோட்டரி சங்கச் செயலர் மருத்துவர். வி.கே. ஜெயகரன் பல் மருத்துவம் குறித்த விழிப்புணர்வு வகுப்பை நடத்தினார். நல்லாசிரியர் திருமதி உண்ணாமலை மாணவர்களுக்கான நீதிக் கதைகள் கூறினார். முனைவர் எ. மணிகண்டன் மாணவர்களுக்கு ஓரிரு யோகா பயிற்சியளித்தார். நிறைவில் இறைவழிபாட்டுடன் திருவமுது படைக்கப்பெற்றது. இந்நிகழ்வில் அக்கிராமத்தைச் சேர்ந்த 29 மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *