செய்திகள்

இந்தியன்–2 விபத்து: டைரக்டர் சங்கர் விசாரணைக்கு ஆஜர்

Spread the love

சென்னை, பிப். 27–

இந்தியன் – 2 விபத்து தொடர்பாக டைரக்டர் சங்கர் இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

கடந்த பிப்ரவரி 19ம் தேதி பூந்தமல்லியில் ’இவிபி’யில் நடந்த இந்தியன்–2 படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து படப்பிடிப்பின் போது, அனைவருக்கும் பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று திரையுலகினர் வலியுறுத்தி வருகின்றனர்.

விபத்து குறித்து வேதனை தெரிவித்த நடிகர் கமல்ஹாசன் மற்றும் டைரக்டர் சங்கர் ஆகியோர், விபத்து நடக்கும் போது அவ்விடத்தில் தான் இருந்ததாகவும், மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் தெரிவித்திருந்தனர்.

இவ்விபத்து குறித்து விசாரிப்பதற்காக சங்கர், கமல் என சம்பவ இடத்தில் இருந்தவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் சங்கர் இன்று விசாரணைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில், துணை ஆணையர் நாகஜோதி முன்பு விசாரணைக்கு ஆஜரானார்.

அவரிடம் படப்பிடிப்புக்காகப் பிரம்மாண்டமாகப் போடப்பட்ட செட் மற்றும் அங்குப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு படப்பிடிப்பு தொடங்கியதா? உள்ளிட்ட பல கேள்விகள் கேட்டப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, கைது செய்யப்பட்ட கிரேன் ஆபரேட்டர் ராஜனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *