செய்திகள்

2வது டெஸ்ட் போட்டியில் 317 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்

2வது டெஸ்ட் போட்டியில் 317 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

4வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தை சுருட்டியது

சென்னை, பிப். 16–

சென்னையில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணி 317 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இங்கிலாந்து அணி 1-–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் 13–ந் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

இதில் ‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 88 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 300 ரன்கள் எடுத்து இருந்தது. ரிஷாப் பண்ட் 33 ரன்களுடனும், அக்‌ஷர் பட்டேல் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற 2வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 95.5 ஓவர்களில் 329 ரன்கள் எடுத்து ‘ஆல்-அவுட்’ ஆனது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது பேட்டிங்கை நேற்று தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசத் தொடங்கினர். இதனை இங்கிலாந்து வீரர்களால் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாகத் தொடங்கினர். 59.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன் அடித்தது. அதிகபட்சமாக பென் போக்ஸ் 107 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணியின் ஆர்.அஸ்வின் 5 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா, அக்‌ஷர் பட்டேல் தலா 2 விக்கெட்டும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இதைத் தொடர்ந்து இந்திய அணி 195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2வது நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்தியா 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்தது.

நேற்று நடைபெற்ற 3வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா (70 பந்துகளில் 26 ரன்) 21.1வது ஓவரில் லீச் பந்து வீச்சில் அவுட்டானார். அதைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி களம் இறங்கி நிதானமாக ரன் குவிக்கத் தொடங்கினார். மறுமுனையில் ரிஷப் பண்ட், ரகானே என முன்னணி வீரர்கள் வெளியேறியதால், இந்திய அணி 86- ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து வந்த அக்சர் படேலும் 7 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து 7-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய அஸ்வின், விராட் கோலி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்தினர்.

கேப்டன் விராட் கோலி 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குல்தீப் யாதவ் 3 ரன்னும், இஷாந்த் சர்மா 7 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்ததாக களம் இறங்கிய சிராஜ், மறுமுனையில் சிறப்பாக ரன் குவித்து வந்த அஸ்வினுடன் சேர்ந்தார். அஸ்வின் 134 பந்துகளில் 1 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 100 ரன் அடித்தார். இது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு 5-வது சதமாகும். தொடர்ந்து ஆடிய அஸ்வின் 106 (148 பந்துகள்) ரன்களில் ஆட்டமிழந்தார். முடிவில் முகமது சிராஜ் 16 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் இந்திய அணி 85.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் எடுத்தது. இதன்படி இந்திய அணி இங்கிலாந்து அணியை விட 481 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணியின் சார்பில் மொயின் அலி மற்றும் ஜாக் லேஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், ஸ்டோன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்படி 482 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் டாம் 25 பந்துகளில் 3 ரன்களிலும், பர்ன்ஸ் 42 பந்துகளில் 25 ரன்களிலும், லீச் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார்கள். நேற்றைய ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 19 ஒவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் கேப்டன் ஜோ ரூட் 2 ரன்களும், லாரன்ஸ் 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி வீரர்களான அக்‌ஷர் படேல் 2 விக்கெட்டுகளும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணியை விட, இங்கிலாந்து அணி 429 ரன்கள் பின்தங்கி இருந்தது.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர்கள்

இதைத் தொடர்ந்து இன்று காலை 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. 25.1வது ஓவரில் அஸ்வின் வீசிய பந்தை அடிக்க முயன்ற லாரன்ஸ் (53 பந்துகளில் 26 ரன்) அவுட்டாகி வெளியேறினார். இதைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் களம் இறங்கினார். 37.6வது ஓவரில் அஸ்வின் வீசிய பந்தை ஸ்டோக்டஸ் (51 பந்துகளில் 8 ரன்) அடிக்க முயன்ற போது விராட் கோலி கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இதன் பின்னர் களம் இறங்கிய ஓலி போப் 20 பந்துகளில் 12 ரன் அடித்த நிலையில் அக்சர் படேல் வீசிய பந்தை அடித்த போது இஷாந்த் சர்மா கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். பின்னர் பென் போக்ஸ் களம் இறங்கி 9 பந்துகளில் 2 ரன் அடித்த நிலையில் குல்தீப் யாதவ் வீசிய பந்தை அடிக்க முயன்ற போது அக்சர் படேல் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 48.3 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 116 ரன் அடித்தது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் 90 பந்துகளில் 33 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார். இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் அஸ்வின், அக்சர் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.

அதன்பின்னர் ஆட்டம் தொடங்கியதும் கேப்டன் ஜோ ரூட்டுடன் கூட்டணி அமைத்தார் மொயின் அலி. ஆனால் அந்த கூட்டணி சில பந்துகளில் தகர்ந்தது. 49.2 ஓவரில் அக்சர் படேல் வீசிய பந்தை ஜோ ரூட் (92 பந்துகளில் 33 ரன்) அடிக்க முயன்ற போது ரஹானே கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். அதன் பின்னர் களம் இறங்கிய ஓலி ஸ்டோன் 5 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் அக்சர் படேல் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேற பிராட் களம் இறங்கினார். அவருடன் இணைந்து மொயின் அலி கடைசி நேரத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவிக்கத் தொடங்கினார். ஆனால் 54.2வது ஓவரில் குல்தீப் யாதவ் வீசிய பந்தை அடிக்க முயன்ற மொயின் அலி (18 பந்துகளில் 5 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 43 ரன்கள்) அவுட்டாகி வெளியேறினார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி 164 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி 317 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1–1 என்ற கணக்கில் இந்தியாவும், இங்கிலாந்தும் சமநிலையில் உள்ளது. அக்சர் படேல் 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக மொயின் அலி 43 ரன்களும், கேப்டன் ஜோ ரூட் 33 ரன்களும், லாரன்ஸ் 26 ரன்களும், பர்னஸ் 25 ரன்களும் அடித்தனர்.

முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி வீரர்கள் 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணி 317 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரசிகர்கள் ஆரவாரம்

கெரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியை காண ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதன்பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிலர் தளர்வுகளை அரசு அறிவித்ததால் 2வது டெஸ்ட் போட்டியை காண 50 சதவிகித ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். 2வது டெஸ்ட் போட்டியின் தொடக்கத்திலிருந்தே இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால் இந்திய ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் காணப்பட்டனர். இன்று 4வது நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டான போது அதை பார்த்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் எழுந்து நின்று கூச்சல் போட்டு ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *