செய்திகள்

இந்தியா – இங்கிலாந்து 2வது டெஸ்ட்: ஆன் லைன் டிக்கெட்டுகள் சில மணி நேரங்களிலே விற்றுத் தீர்ந்தன

சென்னை, பிப். 8–

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிடு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் வீற்றுத்தீர்ந்தன.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5–ந் தேதி தொடங்கி இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. கொரோனா விதிமுறைகள் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 13–ந் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் 50% ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் 8–ந் தேதி (இன்று) டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் தொடங்கும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ். ராமசாமி தெரிவித்தார். ஆன்லைனில் பெறப்படும் ரசீதைக் கொண்டு 11 ஆம் தேதி விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் இருக்கும் பூத்தில் போட்டிக்கான டிக்கெட்டுகளை பெறலாம். இந்தச் சேவை பிப்ரவரி 11 ஆம் தேதி காலை 10 மணி முதல் இருக்கும் என்றும், மைதானத்தில் போட்டியை காண வரும் ரசிகர்கள் தனி மனித இடைவெளி மற்றும் முகக்கவசம் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டது.

5 நாள் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட், நாள் ஒன்றுக்கு ரூ.100, ரூ.150, ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு கட்டுப்பாடுகள் உள்ளதால் தேவையில்லாத கூட்ட நெரிசலை தவிர்க்க சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள கவுன்ட்டர்களில் டிக்கெட் விற்பனை செய்யப்படாமல் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி www.paytm.com மற்றும் www.insider.in ஆகிய இணையதளத்திலோ அல்லது பேடியம், இன்சைடர் செயலி மூலம் இன்று காலை 10 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியது. விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் 5 நாட்களுக்குரிய அனைத்து வகை டிக்கெட்டுகளும் விற்பனையானது. நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பின்னர் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருந்த ஏராளமான ரசிகர்கள் ஆன்லைனில் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *