செய்திகள்

எடப்பாடி சாதனை: 3–வது முறையாக விருது

வேலைவாய்ப்பு, வேளாண்மை, கல்வி, ஆளுமை திறன், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு

அனைத்து வகையிலும் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தேர்வு

எடப்பாடி சாதனை: 3–வது முறையாக விருது

‘இந்தியா டுடே’ பத்திரிகை வழங்குகிறது

சென்னை, நவ.27–

வேலைவாய்ப்பு, கல்வி, வேளாண்மை, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, ஆளுமை திறன் உட்பட அனைத்து வகைகளிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக பிரபல ‘இந்தியா டுடே’ பத்திரிகை தேர்வு செய்துள்ளது.

தொடர்ந்து 3–வது ஆண்டாக தமிழகத்துக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

டிசம்பர் 5–ந் தேதி இந்த விருது நேரில் வழங்கப்படுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சாதனைகளுக்கு கிடைத்த பரிசு இது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக முன்னேற்றத்துக்கும், தமிழக மக்களின் வளர்ச்சிக்கும் இரவு பகல் பாராது பாடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு கொண்டு வந்து 313 எம்.பி.பி.எஸ். சீட்களும், 92 பி.டி.எஸ். ‘சீட்’களும் கிடைக்க வழி செய்தார்.

குடிமராமத்து திட்டம் என்ற அற்புதமான திட்டத்தை கொண்டு வந்து தமிழகம் முழுவதும் உள்ள ஏரி குளங்களை தூர்வாரி அதிக அளவு தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுத்தார்.

வரலாற்று சாதனை

இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து வரலாற்று சாதனை படைத்தார்.

ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவ கல்லூரிகளை துவக்கினார். புதிய மாவட்டங்களை உருவாக்கினார். கொரோனா காலத்திலும் அதிக தொழில் முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக தமிழகத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்று பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தந்தார். காவிரி டெல்டா பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக்கினார். இதுபோன்று எண்ணற்ற சாதனைகளை படைத்தார்.

எடப்பாடி பழனிசாமியை மக்கள் பாராட்டி வாழ்த்தினார்கள். மக்கள் மனதில் இடம் பிடித்தார் எடப்பாடி பழனிசாமி. பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்து பல்வேறு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் 3வது முறையாக ‘இந்தியா டுடே’ விருது கிடைத்துள்ளது.

இந்தியா டுடே நிறுவனத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் தர வரிசைப் பட்டியலில் பெரிய மாநிலங்களுக்கிடையேயான சிறந்த மாநிலத்திற்கான விருதை இந்த ஆண்டும் (2020) தமிழ்நாடு பெற்று பெருமை சேர்த்துள்ளது.

இந்தியா டுடே ஆண்டுதோறும் மாநிலங்களுக்கிடையேயான சிறந்த மாநிலங்களை பல்வேறு வகைப்பாடுகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் சிறந்து விளங்கும் மாநிலத்தை தேர்வு செய்து பரிசு வழங்கி கௌரவித்து வருகிறது. 2020–ம் ஆண்டிற்கான பெரிய மாநிலங்களுக்கான இந்தியா டுடே விருதை தமிழ்நாடு மாநிலம் 2 ஆயிரம் புள்ளிகளில் 1263.1 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த செயல்பாடு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான வகைப்பாட்டில் முதல் இடத்தை பெற்றுள்ளது. மேலும் இந்த விருதை தமிழ்நாடு அரசு தொடர்ந்து 2018 முதல் 2020 வரை மூன்றாவது முறையாக பெற்று சிறப்பு சேர்த்துள்ளது.

வேலைவாய்ப்பு, ஆளுமை திறன் 3வது முறையாக விருது

இந்த விருதானது கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதிலும், வணிக சூழல் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை கருத்தில் கொண்டு மாநில அரசின் செயல்பாட்டை ஆய்வு செய்து விருது வழங்கப்படுகிறது. மேலும் மாநிலத்தின் பொருளாதாரம், வேளாண்மை, கல்வி, பொது சுகாதாரம், அடிப்படை வசதி, உள்ளடக்கிய வளர்ச்சி, சட்டம் மற்றும் ஒழுங்கு, ஆளுமைத் திறன், தொழில் முனைவோரை ஊக்குவித்தல், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பேணுதல் ஆகிய வகைப்பாடுகளின் அடிப்படையில் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்படுகிறது.

டிசம்பர் 5–ந் தேதி விருது

மேற்கண்ட வகைப்பாடுகளின் அடிப்படையில் செய்யும் போது மாநிலங்களுக்கிடையே ஒரு சிறந்த மாநிலத்தை தேர்வு செய்வதால் தேர்வு செய்யப்படும் மாநிலம் முன்னுதாரணமாக திகழ்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளைப் போன்றே இந்த ஆண்டும் நாட்டில் உள்ள பெரிய மாநிலங்களில் சிறந்த ஒட்டுமொத்த செயல்பாட்டிற்காகவும், உள்ளடக்கிய வளர்ச்சிக்காகவும் தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு பெற்று பெருமை சேர்த்துள்ளது.

முதலிடம் பெற்றதற்கான விருதினை வருகின்ற டிசம்பர் 5–ம் தேதியன்று இந்தியா டுடே நிறுவனத்தின் சார்பில் நேரில் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்ந்து உழைப்போம்: எடப்பாடி டுவிட்

விருது கிடைத்தது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:–

அரசு அதிகாரிகள், பணியாளர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பாலும், தமிழக மக்களின் ஒத்துழைப்பாலுமே “தொடர்ந்து 3-வது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு” தேர்வாகி சாதனை புரிந்துள்ளது. இவ்விருதினை அனைவருக்கும் அன்போடு சமர்ப்பிக்கிறேன். தொடர்ந்து தமிழக வளர்ச்சிக்கு ஒற்றுமையாக உழைப்போம்!

இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில் ஒட்டுமொத்த துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழ்நாட்டை முதலிடமாக தேர்ந்தெடுத்து கடிதம் அனுப்பியுள்ளது. ‘இந்தியா டுடே’ இதழ் நிர்வாகத்திற்கு தமிழக அரசு சார்பில், எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று டுவிட்டரில் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்திற்கு அடுத்தபடியாக இமாச்சல பிரதேசம் மாநிலம் இரண்டாம் இடத்திலும் பஞ்சாப் மாநிலம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. கேரளா 4–வது இடத்தையும், குஜராத் 5–வது இடத்தையும் பிடித்துள்ளது. பீகார் மாநிலம் 20–வதாக கடைசி இடத்தில் உள்ளது.

நீர் மேலாண்மை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கான கடிதத்தை இந்தியா டுடே இதழ் நிர்வாகம் தமிழக முதல்வருக்கு கடிதமாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *