செய்திகள்

கொரோனா தடுப்பூசி வழங்குவதில் உலகில் இந்தியா முதலிடம்:

பார்லிமெண்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது

கொரோனா தடுப்பூசி வழங்குவதில் உலகில் இந்தியா முதலிடம்:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பெருமிதம்

* வேளாண் சட்டம் குறித்து வதந்தி பரப்பினால் தடுக்க நடவடிக்கை

* விவசாயிகள் பேரணியில் வன்முறை துரதிர்ஷ்டவசமானது

*கொரோனாவை எதிர்த்து வலிமையுடன் போராடினோம்; லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றினோம்

புதுடெல்லி, ஜன. 29–

கொரோனாவுக்கு எதிராக இந்திய அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சிறப்பானனதாக இருந்தது. லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.

உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதால், கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இருந்தும் பல உயிர்களை இழந்துள்ளோம். கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கொரோனா தடுப்பூசிகள் இன்று உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்து வருகிறோம். தடுப்பூசி வழங்குவதில் இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது என்றும் பெருமிதத்தோடு கூறினார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தாமதமாக தொடங்கி, முன் கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்பட வில்லை. இதைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது இக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

‘‘இந்த ஆண்டு இந்தியாவிற்கு முக்கியமானது. இந்த தொடர் மிகவும் முக்கியமானது. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து பல்வேறு சவால்களை சந்தித்துள்ளது. சவால்கள் எத்தனை பெரிதாக இருந்தாலும், இந்தியாவை தடுத்து நிறுத்த முடியாது. பேரிடர்களை கடந்து நாம் ஒற்றுமையாக இருக்கிறோம். இந்தியா ஒன்றுபட்டு நிற்கும் போது எல்லாம் இலக்குகளை எளிதாக அடைந்துள்ளது. கொரோனாவை எதிர்த்து வலிமையுடன் போராடினோம். கொரோனாவுக்கு எதிரான போரில் பலரது உயிர்களை காப்பாற்றியுள்ளோம்’’ என்று கூறினார்.

ஊரடங்கு உணவுக்காக யாருக்கும் சிரமமில்லை

ஊரடங்கு காலத்தில் உணவிற்காக சிரமப்படும் நிலை யாருக்கும் ஏற்படவில்லை. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தால், பலரும் பயனடைந்துள்ளனர். அனைத்து சவால்களையும் இந்தியா எதிர்த்து போராடும். ஏழைகள் நல்வாழ்வு திட்டம் மூலம் 6 மாநில மக்கள் பயனடைந்துள்ளனர் என்றார்.

நமது கிராமப்புறங்களை வலுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களது விலை பொருள்களுக்கு உரிய விலையை பெறுவதை அரசு உறுதி செய்யும்.மத்திய அரச கொண்டு வந்த பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிறு, குறு விவசாயிகள் பலனடைந்துள்ளனர். கரோனா பொதுமுடக்கக் காலத்திலும் வேளாண் உற்பத்தி புதிய உச்சத்தைத் தொட்டது. இதையும் படிக்கலாமே.. உலகிற்கே இந்தியா முன்னுதாரணமாக உள்ளது என்றும் பெருமிதத்தோடு கூறினார்.

கொரோனாவை எதிர்த்துப் போராட்டி வெற்றிகரமாக தலைதூக்கி இருக்கும் நிலையில், உலக முதலீட்டாளர்களை இந்தியா கவர்ந்திழுத்துள்ளது என்றும் கூறினார்.

புதிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படாது

புதிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படாது. விவசாய சட்டங்கள் தொடர்பான தவறான தகவல்களை நீக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கிறது. சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.மிகப்பெரும் விவாதங்களை நடத்தியபிறகே நாடாளுமன்றம் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 3 புதிய வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது.

தற்போது மூன்று புதிய வேளாண் சட்டங்களை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக எந்த முடிவை எடுத்தாலும் அதனை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும். குடியரசு நாளன்று, மூவர்ணக் கொடி அவமதிக்கப்பட்டது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்திய அரசியலமைப்புச் சட்டமானது, அனைவருக்கும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த முழு சுதந்தரித்தை அளித்துள்ளது, அதே வேளையில் சட்டம் மற்றும் ஒழுங்கையும் அனைவரும் மதித்து நடக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்துகிறது என்றார்.

சிறு குறு விவசாயிகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பது தான் மத்திய அரசின் கொள்கை. இந்தியாவில் வேளாண் உற்பத்தி தற்போது சிறப்பான நிலையில் உள்ளது என்பது மகிழ்ச்சிக்கு உரியது.

சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி விவசாயிகளின் விளைபொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது; பயிர் காப்பீடு திட்டம் சிறு விவசாயிகளுக்கு பயன்படுகிறது என்றும் அவர் கூறினார்.

உணவு தானியம், பலமடங்கு கையிருப்பு

நாட்டின் உணவுதானியம் கையிருப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது, வேளாண் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; விவசாயிகளுக்கு உதவ அரசு உறுதிபூண்டுள்ளது; ஏழை விவசாயிகளை கைதூக்கிவிடவே வேளாண் சட்டம் கொண்டு வரப்பட்டது என்பதை தெளிவுபடக் கூறினார்.

வேளாண் சட்டங்களை எதிர்க்கும் கட்சிகள் முன்பு ஆதரித்தன; இந்த சட்டங்கள் மூலம், விவசாயிகளுக்காக புதிய சந்தைகள் திறக்கப்படும்; வேளாண் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பது நீண்ட காலமாக நிலுவையில் இருந்த கோரிக்கை.அது இப்போது கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டம் குறித்து வதந்தி பரப்பப்படுகிறது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

பேரணியில் அசம்பாவிதம் துரதிர்ஷ்டம்

வேளாண் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதற்கு மத்திய அரசு கட்டுப்பட்டுள்ளது; விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை துரதிர்ஷ்டவசமானது. அது கவலையளிக்கிறது; தேசியக்கொடி அவமதிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறிய ஜனாதிபதி சட்டம் ஒழுங்கை யாரும் கையில் எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தினார்.


ஜனாதிபதி உரையை 18 கட்சிகள் புறக்கணித்தன

காங்கிரஸ், சிவசேனா, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மதிமுக, கேரள காங்கிரஸ் (எம்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஆம் ஆத்மி, சிரோன்மணி அகாலி தளம் ஆகியவை 18 கட்சிகள்.


பிப்ரவரி 15 வரை

அந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 15-ம் தேதி வரை நடக்கிறது. 2021–-22-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். அதன்பிறகு இரண்டாம் அமர்வு மார்ச் 8-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *