நாடும் நடப்பும்

பிரிட்டனுக்கு சுதந்திரம்

ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் அதாவது பிரிட்டிஸ் ஏகாதிபத்திய பேரரசின் கீழ் இருந்த 54 நாடுகள் தற்போது காமன்வெல்த் என்ற அமைப்பின் அங்கத்தினர்களாக இருப்பதை அறிவோம். இந்த நாடுகள் எல்லாம் ஒரு காலத்தில் ஆங்கிலேயர்களின் முடியாட்சியின் கட்டளைக்கு கீழ்படிந்து இருந்த அடிமை நாடுகள் என்பதும் தெரிந்ததே!

இந்தியா எப்படி 1947–ல் சுதந்திரம் பெற்றதோ, அதேபோன்று ஆஸ்திரேலியா, நியூசிலாந்து முதல் கனடா வரை பல நாடுகள் சுதந்திரம் பெற்றது. பிரிட்டானிய பேரரசிடம் இருந்து சுதந்திரம் பெற மேற்கொண்ட போராட்டம் அந்நாடுகளின் கசப்பான வரலாற்று பக்கங்கள் ஆகும்.

இன்று இங்கிலாந்தும் அதே கசப்பான அனுபவத்தை பெற்று விட்டது! இங்கிலாந்து எந்த நாட்டிடமும் அடிமைப்படவில்லை. ஆனால் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பின் சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்பட்டு இருந்தது.

இந்த ஐரோப்பிய யூனியனில் 27 அங்கத்து நாடுகள் உண்டு. இவற்றின் நிலப்பரப்பு 42 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவாகும்! இங்கு 45 கோடி மக்கள் வாழ்கிறார்கள்.

இந்தியாவின் பரப்பளவோ 33 லட்சம் சதுர கிலோ மீட்டர் மட்டுமே. ஆனால் வாழும் ஜனத்தொகையின் எண்ணிக்கையோ 130 கோடி பேராகும்!

ஆக 1947 வரை ஐரோப்பிய எல்லையில் ஒரு சிறு அங்கமாக இருந்த பிரிட்டன் உலகெங்கும் அதாவது ஆசியாவில் சூரியன் எழும்போது முதல் உதயம் பிரிட்டனின் கீழ் இருந்த ஆஸ்திரேலியா முதல் சூரிய அஸ்தமனமாகும் போது இங்கிலாந்தின் ராஜ்ஜியத்தில் இருந்த கனடா வரை இருந்தது. ஒரு வகையில் உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியமாக இருந்த ஆங்கிலேயர்களின் முடியாட்சி விஸ்தாரம் எங்கேனும் சூரிய ஒளி பட்டுக்கொண்டே இருந்ததால் அவர்கள் ராஜ்ஜியத்தில் சூரிய அஸ்தமனமே இன்றி இருந்தது!

ஆனால் இன்று இங்கிலாந்து பிரதான அங்கமாக இருந்த ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேறி விட்டது!

இங்கிலாந்து 2016–ல் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பின் முடிவை கொண்டு ஐரோப்பிய யூனியனை விட்டு பிரிட்டன் முழுமையாக வெளியேற முடிவு செய்தது. அதன் பின் ஏற்பட்ட இரு தேர்தலுக்குப் பிறகு அதாவது 4 ஆண்டுகளாக நடந்த பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகே இந்த ஆண்டின் துவக்க நாள் முதல் இங்கிலாந்து பிரிந்து விட்டது.

வர்த்தகம், தயாரிப்பு ஆலைகள் அமைப்பது, சுற்றுலா பயணிகளின் நலன், பணியாளர்களின் வசதிகளை உருவாக்குவது முதல் பல்வேறு அம்சங்களில் பிரிட்டன் இனி தனிமைப்படுத்தப்படும்.

பிரிக்சிட்‘ என்று அழைக்கப்படும் இந்நிகழ்வை ஒரு வழியாக நடத்தி முடித்து விட்டனர். இனி பிரிட்டன் தனி நாடாகும்! ஐரோப்பிய யூனியனின் சட்டதிட்டங்கள் மற்றும் அவர்களின் கட்டுப்பாடுகள் இனி இங்கிலாந்திற்கு பொருந்தாது. கூடவே இங்கிலாந்தில் நுழைய ஐரோப்பிய யூனியன் விசாவும் உதவாது.

இதன் சாதக பாதகங்கள் என்ன? என்பதை இருதரப்பினரும் விரைவில் உணரத்தான் செய்வார்கள். ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை புருச்செல்ஸ்சில் இருந்தது. அங்கு தான் எல்லா தரப்பு முக்கிய முடிவுகளும் எடுத்து வந்தன.

ஐரோப்பிய நாடுகளுக்கு பல்வேறு சர்ச்சைகள் நிலவுகிறது. அதனால் எந்தக் கொள்கை முடிவையும் உடனடியாக எடுத்து அதை அமுல்படுத்தவே முடியாது.

உதாரணத்திற்கு பிரிட்டன் பைசரின் கோவிட்–19 தடுப்பு மருந்தை உடனே பச்சைக்கொடி காட்டி வரவேற்றது.

ஆனால் ஐரோப்பிய யூனியனோ, தொடர்ந்து ஆய்வுகள் நடத்திய வண்ணமே இருக்கிறது. தற்சமயம் இங்கிலாந்து தனது பிரஜைகளுக்கு தடுப்பூசியை செலுத்தி வருகிறது!

இப்படி எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்க முடியாமல் சுயமாய் செயல்பட முடியாமல் ஐரோப்பிய யூனியனின் தலைமைக்கு கட்டுப்பட்டு இருந்த இங்கிலாந்திற்கு விடுதலை கிடைத்துவிட்டது.

ஆக 2021 துவங்கிய நாளில் இங்கிலாந்துக்கும் சுதந்திரம் என்று கூறுவது சரியாகத்தான் இருக்கும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *