செய்திகள்

இந்தியா – இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி நாளை துவக்கம்

உலகிலேயே மிகப்பெரிய அகமதாபாத் சர்தார் படேல் ஸ்டேடியத்தில்

இந்தியா – இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி நாளை துவக்கம்

பிங்க் நிற பந்தில் பகல் – இரவு ஆட்டம்

அகமதாபாத், பிப். 23–

இந்தியா, இங்கிலாந்து மோதும் 3வது பிங்க் பால் பகல், இரவு டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான மொட்டேரா சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இது இந்த ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டியாகும்.

இந்தியா, இங்கிலாந்து இடையே நான்கு டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்திலும், அடுத்த போட்டியில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நாளை முதல் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. மேலும் போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்பட உள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய ஸ்டேடியம்

மேலும் இந்த போட்டி அகமதாபாத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான மொட்டேரா சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த ஸ்டேடியம் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் அமர்த்து போட்டியை பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வேறு எந்த கிரிக்கெட் ஸ்டேடியத்திலும் இவ்வளவு பெரிய வசதி கிடையாது. இது தவிர இரவில் விளையாடும் போது பந்தின் நிழல் மைதானத்தில் விழாமல் இருப்பதற்காக எல்இடி பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மைதானத்தில் 11 பிட்சுகள் அமைக்கப்பட்டுள்ளன. வீரர்கள் ஓய்வு அறையோடு சேர்ந்து உடற் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் புல்லுக்கு கீழே மணல் தூவப்பட்டுள்ளது. மேலும் எவ்வளவு மழை பெய்தாலும் உடனடியாக தண்ணீர் வெளியேறுதற்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மைதானத்தின் மொத்த பரப்பளவு 63 ஏக்கர் ஆகும். ஸ்டேடியத்தோடு சேர்ந்துள்ள கிளப் ஹவுசில் 50 டீலக்ஸ் அறைகளும், 5 சூட் அறைகளும் உள்ளன. பெவிலியன் வசதியுள்ள இரண்டு பயிற்சி மைதானங்கள், பந்து வீசும் எந்திர வசதியுள்ள 6 உள்ளரங்கு பிட்சுகள் ஆகியவையும் உள்ளன.

இந்திய அணியில் விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், ஹார்திக் பாண்டியா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இஷாந்த் சர்மா

100வது போட்டிஇந்த போட்டி இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவின் 100-ஆவது டெஸ்டாகும். இதுவரை 99 ஆட்டங்களில் 302 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள அவர், கபில் தேவுக்குப் பிறகு 100 டெஸ்டுகளில் விளையாடிய ஒரே இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்றபெருமையை அடைகிறார். கடந்த சுமார் 15 ஆண்டுகளில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே, எம்.எஸ். தோனி, விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே ஆகியோரின் தலைமையின் கீழ் விளையாடியுள்ளார்.

இங்கிலாந்து

இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இங்கிலாந்து அணி வீரர்கள் பட்டியலில், ஜோ ரூட்(கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, டோமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜாக் க்ராவ்லி, பென் ஃபோக்ஸ், லாரன்ஸ், ஜாக் லீச், ஆலி போப், டோமினிக் சிப்ளி, பென் ஸ்டோக்ஸ், ஆலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மார்க் உட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

காயத்தால் முதலிரண்டு போட்டிகளில் ஆடாத டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜாக் க்ராவ்லி 3வது போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளார். அதிரடி பேட்ஸ்மேனும் விக்கெட் கீப்பருமான ஜானி பேர்ஸ்டோவுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. ஸ்பின்னர் மொயின் அலிக்கு அணியில் இடம் இல்லை.

சென்னையில் நடந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் 1–1 என்ற கணக்கில் உள்ளதால் 3வது போட்டியில் வெற்றிபெறும் முனைப்பில் இரண்டு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *