வர்த்தகம்

கண் நோய்களுக்கான பரிசோதனைகளை தாமதப்படுத்துவதால் பாதிப்புகள் அதிகரிப்பு

கண் நோய்களுக்கான பரிசோதனைகளை தாமதப்படுத்துவதால் பாதிப்புகள் அதிகரிப்பு

வீடு தேடி வந்து கண் பரிசோதனை திட்டம்

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை தலைவர் அமர் அகர்வால் தகவல்

சென்னை, பிப். 20

கண் நோய்களுக்கான பரிசோதனைகளை, கொரோனா காரணமாக தாமதப்படுத்துவதால், கண் பாதிப்புகள் 5 மடங்கு வரையில் அதிகரித்து, பார்வை இழப்பு வரையில் ஏற்படுகிறது. நவீன சிறிய கருவியை கையில் எடுத்துச் சென்று வீடுகளில் கண் பரிசோதனை செய்ய முடியும் என டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை தலைவர் அமர் அகர்வால் கூறி உள்ளார்.

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் , “கோவிட்-19 பெருந்தொற்றில் கண்களின் தொடர்பும் கண் பராமரிப்பில் ஏற்பட்ட தாக்கங்களும்” என்ற தலைப்பிலான கலந்தாய்வுக் கூட்டம், சென்னை அகர்வால் கண் மருத்துவமனையில் இன்று பிற்பகலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை குழுமங்களின் தலைவர் அமர் அகர்வால், நிர்வாக இயக்குநர் அஸ்வின் அகர்வால், மருத்துவ சேவைகள் துறைத் தலைவர் டாக்டர் சவுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர்.

கண் பாதிப்புகள் அதிகரிப்பு

நிகழ்ச்சியில் பெருந்தொற்றுக்கு முந்தைய சூழலை ஒப்பிட்டு பேராசிரியர் அமர் அகர்வால் பேசியதாவது:

2019 ஆண்டின் கடைசி காலாண்டில் அகர்வால் மருத்துவமனைக்கு வந்த கண் புரை நோயாளிகளில் 10 சதத்துக்கும் குறைவானவர்களே முதிர்ச்சியடைந்த கண்புரை நிலையால் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால், 2020 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் இந்த அளவானது 5 மடங்கு அதிகரித்திருக்கிறது. அதைப்போலவே, டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவதனால் ஏற்படும் கண் அழுத்தத்தினால் உருவாகின்ற உலர்ந்த கண் பிரச்சினையும் 10 சதத்தில் இருந்து 30 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. சிலவேளை 50 சதவீதம் வரையிலும் கூட உயர்ந்திருக்கிறது. உரிய

காலஅளவுகளில் பரிசோதனைகளை செய்ய நோயாளிகள் தயங்கியதன் காரணமாக, பல நோயாளிகளிடம் ஏற்கனவே இருந்த கண்விழி விறைப்புத் தன்மை மோசமாகியிருப்பதையும் கண்டறிந்துள்ளோம்.

பாதி பார்வை இழந்தார்

மேலும் நீரிழிவு பாதிப்புடைய பலர் உரிய காலஅளவுகளில் கண் பரிசோதனைகளை செய்யாமல் அலட்சியப்படுத்தியதால், அவர்களது விழித்திரையில் கடுமையான சிக்கல்கள் உருவாகின. கண் புரை பாதிப்புக்கான அறுவை சிகிச்சையை தாமதித்த ஒருவர் உயர் கண் அழுத்தத்தால் பாதி பார்வைத்திறனை இழக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கது. இது போல், பல்வேறு நிலைகளில், பலரும் பாதிக்கப்பட்டனர். எனவே, கண் பாதிப்புக்கான சோதனைகளை தள்ளிப் போடாமல், உரிய முன்னெச்சரிக்கையுடன் செயல்படும் மருத்துவமனைகளை நாடி சிகிச்சை செய்து கொள்வது அவசியம்.

அகர்வால் கண் மருத்துவமனையை பொறுத்த அளவில், தமிழ்நாடு, தெலுங்கானா, மேற்குவங்கம், குஜராத், ஒடிசா என இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் 100 அகர்வால் மருத்துவமனைகள் இயங்கி வருகிறது. அவற்றில் உரிய கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. மேலும் இங்கு பணியாற்றும் மருத்துவர்கள் கொரோனா தடுப்பூசியும் எடுத்துக்கொண்டு உள்ளனர். எனவே, பயமின்றி, கண் சிகிச்சைகளுக்கு எங்கள் மருத்துவமனைகளை அணுகலாம். மேலும் இன்னும் 3 ஆண்டுகளில் உலக அளவில் எங்கள் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை 150 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

டிஜிட்டல் கருவிகளால் பாதிப்பு

மருத்துவ சேவைகள் துறைத்தலைவர் டாக்டர் எஸ். சவுந்தரி கூறியதாவது:

கடந்த சில மாதங்களாக டிஜிட்டல் பயன்பாட்டின் காரணமாக ஏற்படும் கண் அழுத்தம் மற்றும் உலர்கண்கள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்திருப்பதையும் கண்டறிந்துள்ளோம். டிஜிட்டல் சாதனங்களை அளவுக்கு மீறி பயன்படுத்துவதால் இத்தகைய பாதிப்புகள் உருவாகின்றன.

“மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றால், தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்று நோயாளிகள் கவலை கொண்டிருந்தனர். இதன் ஒரு விளைவாக, நோயாளிகளுக்கான பாதிப்பு அதிகரித்தது. ஏற்கனவே கண் பிரச்சனை உள்ள பல நபர்கள் உரிய காலஅளவுகளில் சோதனைகளை செய்து கொள்ளாததால், கண் பிரச்சனைகள் தீவிரமடைந்தது. 50 வயதிற்கு மேற்பட்ட நீரிழிவு நோயாளிகள், குறைந்தது ஆண்டுக்கு ஒருமுறையாவது ஒரு கண் மருத்துவரால் கண்களை பரிசோதித்துக் கொள்வது அவசியம் என்றார்.

‘ஏவா கிளைக்கோமா டெஸ்ட்’

நிர்வாக இயக்குநர் டாக்டர் அஷ்வின் அகர்வால் பேசியதாவது:

கொரோனா பயம் மக்களுக்கு இன்னும் குறைந்தது 3 ஆண்டுகளுக்கு இருக்கும் என மதிப்பிட்டு உள்ளோம். எனவே, புத்தாக்க கண்டுபிடிப்புகள் கண் நோய் பிரச்சினைகளுக்கு உதவும் என்ற நோக்கில், வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு வந்து சிகிச்சை செய்ய முடியாது என்பதாலும், “ஏவா கிளைக்கோமா டெஸ்ட்” செய்ய தொடங்கி உள்ளோம். நாடு முழுக்க 100 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்த கருவியை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

பொதுவாக, கண் பரிசோதனை கருவிகள் மிகப் பெரியவையாக இருக்கும். ஆனால், இந்த கருவியை பையில் எளிதில் எடுத்துச்சென்று வீட்டிலேயே சோதனை செய்யலாம். இதன்மூலம், கண் அழுத்தம், கண்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை வீட்டிலேயே செய்துகொள்ள முடியும். மேலும் ஆன்லைன் மூலமாகவும் பரிசோதனை குறித்து தகவல்கள் தெரிந்துகொள்ளலாம். அதற்கான ஏற்பாடுகளையும் அகர்வால் கண் மருத்துவமனை மேற்கொண்டு வருகிறது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *