செய்திகள்

இந்தி பிரபல நடிகை டாப்சி, டைரக்டர் காஷ்யப் வீடுகளில் வருமானவரி அதிரடி சோதனை: ரூ.650 கோடி முறைகேடு அம்பலம்

புதுடெல்லி, மார்ச். 5–

இந்தி பிரபல நடிகை டாப்சி திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் ரூ. 650 கோடிக்கும் மேல் நிதி முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு இந்தி திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப், இயக்குநரும் தயாரிப்பாளருமான விக்ரமாதித்ய மோட்வானே, தயாரிப்பாளர் விகாஸ் பஹல், தயாரிப்பாளரும் விநியோகஸ்தருான மது மன்டோனா ஆகியோரால் பேண்டம் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டு அந்த நிறுவனம் மூடப்பட்ட நிலையில், அந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக வருமான வரித் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அனுராக் காஷ்யப், நடிகை டாப்சி பன்னு, ரிலையன்ஸ் குழுமத் தலைமை செயல் அதிகாரி சுபாசிஷ் சர்க்கார் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரித் துறையினர் கடந்த புதன்கிழமை சோதனை நடத்தினர்.

இந்த சோதனை முடிவு தொடர்பாக மத்திய நேரடி வரி வாரியம் சார்பில் நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.300 கோடி அளவுக்கு நடைபெற்றுள்ள நிதி பரிவர்த்தனை குறித்து அந்த நிறுவன அதிகாரிகளால் உரிய விளக்கத்தை அளிக்க முடியவில்லை. அந்த நிறுவனத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மேலும் ரூ.350 கோடி வருவாய் கணக்கில் காட்டப்படாததும் கண்டுபிடிக்கப்பட்டது.

பிரபல நடிகையின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.5 கோடி ரொக்கமாகப் பெறப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி, ரூ.20 கோடி அளவுக்கு செலவு செய்ததற்கான போலியான கணக்கு காட்டப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனைககான மின்னஞ்சல், கட்செவி அஞ்சல் தகவல் பரிமாற்றம் மற்றும் கணினி ஹார்டுடிஸ்க் போன்ற டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் இவர்களின் 7 வங்கி லாக்கர்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *