செய்திகள்

முதல் நிலைத் தேர்வு பயிற்சி, சூரிய ஒளி மின்சக்தி, டிஜிட்டல் நூலகம் தொடக்கம்

சென்னை, பிப்.27–

அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்தின் சார்பில் நேற்று (26–ந் தேதி) 2021–ம் ஆண்டுக்கான முதல் நிலைத் தேர்வு பயிற்சி, சூரிய ஒளி மின் சக்தி மற்றும் டிஜிட்டல் நூலகத் தொடக்க நிகழ்ச்சி ஆகியவை அண்ணா மேலாண்மை நிலையம் கூடுதல் இயக்குநர் மற்றும் கூடுதல் பயிற்சி துறைத் தலைவர் ச.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் அண்ணா மேலாண்மை நிலைய இயக்குநர் மற்றும் பயிற்சி துறைத் தலைவர் வெ. இறையன்பு தொடங்கி வைத்து பேசியதாவது:–

இந்த மையத்தின் மூலம் முறையாக தேர்வு செய்யப்பட்ட பயிற்சியாளர்களாகிய நீங்கள் அனைவரும் எந்தவித கவனச்சிதறலும் இன்றி விழிப்புணர்வோடும் தன்னம்பிக்கையோடும் படிக்க வேண்டும். நீண்ட நேரம் கண்விழித்துப் படிப்பது மட்டுமல்ல விழிப்புணர்வோடும் படிக்க வேண்டும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பயிற்சியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பின்பற்றுவதோடு மட்டுமின்றி தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

இப்பயிற்சி மையத்தில் 50 சதவிகிதம் பயிற்சி என்றால் மீதம் 50 சதவிகிதம் உங்களுடைய முயற்சியே, இலக்கை அடைய ஏதுவாக இருக்கும். இம்மையத்தில் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும், பயிற்சியாளர்களுக்காக உணவு, உறைவிடம், டிஜிட்டல் நூலகம் போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றை தாங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

சுயமதிப்பீடு

நீங்கள் முழு கவனத்துடன் படித்து அதனை சுய மதிப்பீடு செய்துகொள்ள வேண்டும். நீங்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற்று பணியில் சுயநலமாக இருக்காமல், நாட்டின் வளர்ச்சிக்காக பொதுநலத்தோடு உழைத்திட வேண்டும். இதனால் நாட்டிலுள்ள நலிந்த, பின்தங்கிய, ஏழை எளியோர்கள், முதியோர் போன்ற பல்வேறு தரப்பினரும் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இவ்விழாவில் அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மைய முதல்வர் து.தங்கராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சி மேலாளர் (அண்ணா மேலாண்மை நிலையம்) மு.சுந்தரராஜன் திட்ட விளக்க உரை ஆற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *