நாடும் நடப்பும்

குடியிருப்புகளில் சுகாதார அம்சங்களின் அவசியம்

சென்ற மாதம் சர்வதேச நிகழ்வு ஒன்றில் உலக பொருளாதார நிபுணர்களிடையே வீடியோவில் பேசிய பிரதமர் மோடி உலகெங்கும் வசிப்பவர்கள் தனித்தே வாழ்கிறார்கள். ஆனால் நம் நாடெங்கும் சமுதாய நெருக்கத்துடன் கூட்டமாகவே வாழும் கட்டமைப்பில் வாழ்கிறோம் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

அதன் அடிப்படை சாராம்சம் ஏதேனும் தொற்று வந்தால் அதை சமூக விலகலுடன் அணுக இதர நாடுகளில் ஊரடங்கு தேவையில்லை என்று இருக்கலாம்; ஆனால் நம் நாட்டில் ஊரடங்கை அறிவித்ததால்தான் கொரோனா பெரும் தொற்றை சமாளிக்க முடிந்தது என்பதை சுட்டிக்காட்டினார்.

இதை நம் அனைவருக்கும் சுட்டிக்காட்டி உண்மை நிலையை புரிய வைக்கிறார். அன்றாட வாழ்வாக இருந்தாலும் சமூக வலைதளமாக இருந்தாலும் ஒரு தகவல் நம் நாட்டில் நொடிப் பொழுதில் காட்டுத்தீயாய் பரவி விடுகிறது.

மேலும் பிரதமர் மோடி பேசும்போது பாதுகாப்பான நகர்ப்புற வாழ்வுக்காக மாற்றங்கள் வேண்டும் என்று வலியுறுத்தியும் உள்ளார்.

பெரிய நவீன நகரமான மும்பையில் விமான நிலையத்தின் அருகே பெரிய பெரிய கட்டிடங்கள் வானத்தை தொட நீட்டும் விரல்களாக காட்சியளித்தாலும் குடிசை வீடுகளின் எண்ணிக்கையும் மிக அதிகமாகவே இருக்கிறது. அதுபோன்ற குடிசை சேரிப் பகுதிகள் நாடெங்கும் இருக்கிறது. பல லட்சம் தினக்கூலி தொழிலாளர்கள் அங்கு இருந்து தான் பல்வேறு பணிகளுக்கு வருகிறார்கள்.

100 ஆண்டுகளுக்கு முந்தைய பிளேக் மற்றும் காலரா பெருந்தொற்று இப்படிப்பட்ட குடிசைப் பகுதிகளில் தான் மிக அதிக உயிர் பலியை ஏற்படுத்தியது.

சுத்தமும் சுகாதாரமும் நகரின் முக்கிய அம்சமாக கருதப்பட்டாலும் குடிசைவாசிகளின் பங்களிப்பு இல்லாது நகரங்கள் இயங்கவே முடியாது! வீட்டு வேலைகளுக்கு வருபவர்கள், ஆடை தயாரிப்பு, காலணிகள் செப்பனிடுவது, கடைகளில் பணியாற்றும் சிப்பந்திகள் என பல்வேறு பணிகளுக்கு வரும் அவர்கள் நகர பிரச்சினையையும் சுமக்கிறார்கள், நகரின் அசுத்தங்களை கொண்ட சூழ்நிலையில் வாழ்கிறார்கள், நோய்களின் பாதிப்பால் துவண்டும் விடுகிறார்கள். கூடவே அவர்களுடன் அப்பிரச்சனை நகரெங்கும் பரவ மறைமுகமாக உதவுகிறார்கள். மத்திய வீட்டுவசதித் துறை அமைச்சகமானது குறைந்த எண்ணிக்கையில் அதிக செலவு பிடிக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களிலேயே கவனம் செலுத்தி வந்திருக்கிறது. இனிமேலாவது ஆக்கபூர்வமான முறையில் அரசாங்கங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு நகரத்தின் வீட்டுத் தேவைகள் பற்றிய விவரங்களை டிஜிட்டல் முறையில் தொகுத்து வெளிப்படையாக அறிவிக்கலாம். காற்று மாசு, நகரின் திடக்கழிவு மேலாண்மை, நீர்த் தரக் கட்டுப்பாடு ஆகியவை குறித்த சட்டங்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதையும் இதே முறையில் வெளிப்படையாகத் தெரிவிக்கலாம். பிரதிநிதித்துவமற்ற சிறுபான்மையினரையும் நகரத்தில் சேர்ந்தியங்கச் செய்யலாம்.

ஜனத்தொகை அதிகமாகி விட்டதால் நகரின் குப்பை சேர்தலும் மிக அதிகமாகத்தான் இருக்கிறது. அந்த குப்பைகளிலிருந்து மின்சார உற்பத்தியில் சென்னை முன்னணியில் இருக்கிறது.

ஆனாலும் குப்பை சேர்ந்து மலைபோல் குவிந்திருக்கும் போது கொசு மற்றும் பூச்சிகளின் பண்ணையாக மாறுகிறது. அவை நகரெங்கும் பல்வேறு நோய்களை பரப்பும் என்பதை அறிவோம்.

ஆகவே ஒரு இடத்தில் குப்பை கூளங்கள் சேர வைக்காமல் ஒவ்வொரு பகுதியிலும் இந்த குப்பைகளை கையாண்டு அதை மின்சாரமாக மாற்றுவதுடன் மண்ணோடு மண்ணாகி விட வழி காண வேண்டும்.

எனவே இனிவரும் காலங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, சூரிய மின்சார உற்பத்தி, குப்பையை முற்றிலும் கரைத்துவிடும் திட்டங்களில் கவனம் செலுத்தக்கூடிய அமைப்புகள் உருவாக சட்டத்திட்டங்கள் வரவேண்டும்.

ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகள் இரண்டாம் உலக போருக்குப் பிறகு சந்தித்த பொருளாதார வீழ்ச்சியை சீர் செய்ய வீடு கட்டுமானத்தை வரையரையின்றி வளர விடாமல் மிக கடுமையான சட்டத்திட்டங்களை அறிவித்து வடிவமைத்தது. அதன் பயனாக 30 ஆண்டுகளில் மிக வளர்ந்த பொருளாதாரமாக உயர்ந்து விட்டனர்.

நியூசிலாந்து நாட்டில் இந்த வாரம் ஓர் அவசர பிரகடனம் செய்துள்ளது. அதன்படி மாசு தூசு வெளியேற்றம் அறவே கூடாது; அதை உடனே அமுலுக்கும் கொண்டு வந்து 2025ல் அந்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள், வாகனங்கள் எல்லாமே கரும்புகை கக்காதவையாக இருக்க காலக்கெடுவையும் அறிவித்து விட்டது.

அப்படி இரும்புக்கரம் கொண்டு தான் கட்டுமான வளர்ச்சிகள் இருந்தாக வேண்டும். இதனால் முதலீடு அதிகரிக்கும், வீடுகளின் விலையில் வாடகையும் அதிகமாகுமே என்ற வாதம் சரி தான். ஆனால் உயிர் வாழவே தவிக்கும் நிலை வந்து விட்ட நிலையில் அந்த முதலீட்டு செலவுகள் மிக அவசியமானது என்பதைத் தான் கொரோனா பெருந்தொற்று நமக்கு கொடுத்து விட்ட பாடமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *