வர்த்தகம்

இந்துஸ்தான் பெட்ரோலியத்தின் கூடுதல் சக்தி கொண்ட பவர் 99 பெட்ரோல்

இந்துஸ்தான் பெட்ரோலியத்தின் கூடுதல் சக்தி கொண்ட பவர் 99 பெட்ரோல்

அமைச்சர் எம்.சி. சம்பத் வெளியிட்டார்

சென்னை, நவ. 20

இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் ‘பவர் 99’ என்னும் உயர்தர பெட்ரோலை, சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அறிமுகம் செய்தார்.

முதல்முறையாக சென்னையில் அறிமுகப்படுத்தப்படும் இந்தப் ‘பவர் 99’ உயர்வகை பெட்ரோல், ஏற்கெனவே இந்தியாவின் 20 நகரங்களில் விற்பனையாகி வருகிறது. அடுத்த இரு ஆண்டுகளில் இது தமிழகத்தின் மற்ற நகரங்களிலும் கிடைக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என். பாலகங்கா, ஹெச்.பி.சி.எல். நிறுவனத்தின் தென் மண்டல சில்லறை விற்பனைப் பிரிவு தலைமைப் பொது மேலாளர் சந்தீப் மஹேஸ்வரி மற்றும் சென்னை மண்டல சில்லறை விற்பனைப் பிரிவு துணைப் பொது மேலாளர் பாலாஜி ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த பெட்ரோலின் ஆக்டேன் அளவு மதிப்பீடு 99 என்பது கவனிக்கத்தக்கது. தற்போது இந்தியச் சந்தையில் விற்பனையாகும் மற்ற நிறுவனங்களின் உயர்வகை பெட்ரோலில் உள்ள அதிகபட்ச ஆக்டேன் மதிப்பீடு 97 மட்டுமே. அதிக அளவு ஆக்டேன் இடம்பெறும் பெட்ரோல், வாகன என்ஜினுக்குள் கட்டுப்பாடற்ற, அசாதாரணமான எரியூட்டலுக்கு இடம் தருவதில்லை. அதனால், இவ்வகை பெட்ரோல் பயன்பாட்டுக்கு ஏற்ற என்ஜின் கொண்ட வாகனங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், அவற்றின் ஆயுளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனாலேயே உயர்தர, இறக்குமதி செய்யப்பட்ட கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் உரிமையாளர்கள் இந்த பெட்ரோலை விரும்புகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *