செய்திகள்

2022–ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு திட்டம் நிறைவேற்றப்படும்

2½ லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன

2022–ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு திட்டம் நிறைவேற்றப்படும்

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி

சென்னை, நவ.21–

2022–ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.மத்திய அரசின் சார்பில் ஆவாஸ் திவாஸ் வார விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மத்திய ஊரக வளர்ச்சி, விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன், உணவு பதனிடுதல் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.

ஊரகப் பகுதிகளில் வாழும் வீடில்லாத, குடிசை வீடுகள் மற்றும் பழுதடைந்த வீடுகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய நிலையான வீடுகளை ஏற்படுத்திட மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்) கடந்த 2016 நவம்பர் 20–ல் துவங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பட்டியல் 2011–ல் உள்ளவர்கள் பயனாளிகளாக தேர்வு செய்யப்படுகிறார்கள். மத்திய மற்றும் மாநில அரசின் நிதி பங்கீடு 60:40 என்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. மத்திய அரசு ரூ.72 ஆயிரம் மற்றும் மாநில அரசு ரூ.48 ஆயிரம் என ஒரு வீட்டிற்கான அலகுத் தொகை தேசிய அளவில் ரூ.1,20,000 ஆக இருப்பினும், தமிழக அரசால் கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்காக மாநில நிதியிலிருந்து கூடுதலாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது.

ஒரு வீட்டிற்கு ரூ.2 லட்சம்

தமிழ்நாட்டில் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் (ஊரகம்) கீழ் ஒரு வீட்டிற்கான மொத்த அலகுத் தொகை ரூ.1.70 லட்சத்துடன் கட்டுமானப் பணிக்காக மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23,040 தொகையும், தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டும் பணிக்காக ரூ.12 ஆயிரம் தொகை என மொத்தம் ஒரு வீட்டிற்கு ரூ.2,05,040 வழங்கப்படுகிறது.

பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டம் துவங்கப்பட்டு ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வருவதை குறிக்கும் விதமாக மத்திய அரசின் சார்பில் 16.11.2020 முதல் 22.11.2020 வரை குடியிருப்பு தின வாரம் (Awaas Diwas Week) கொண்டாடப்படுகிறது.

மத்திய அரசின் சார்பில் ஆவாஸ் திவாஸ் வார விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் புதுடெல்லியிலிருந்து காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டப் பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூட்டத்தில் தெரிவித்ததாவது:–

புரட்சித்தலைவி அம்மா வழியில், முதலமைச்சர் ஊரகப் பகுதிகளில் வாழும் ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2022–ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு ஏற்படுத்திட முன்னுரிமை வழங்கி செயல்பட்டு வருகிறார்கள். இத்திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கான அளவுத் தொகை தேசிய அளவில் ரூ.1,20,000 ஆக இருப்பினும், தமிழ்நாடு அரசு கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்காக மாநில நிதியிலிருந்து ரூ.50,000 கூடுதலாக வழங்குகிறது.

2016 முதல் 2020 வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 லட்சத்து 27 ஆயிரத்து 552 வீடுகளில் இதுவரை 4 லட்சத்து ஓராயிரத்து,106 பயனாளிகளுக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டு 2 லட்சத்து 65 ஆயிரத்து 29 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 1,36,077 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 1,26,446 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட உள்ளது.

2016 முதல் 2020 வரை மத்திய அரசின் பங்குத் தொகை ரூ.3,798.38 கோடி, மாநில அரசின் பங்குத் தொகை ரூ.2,532.25 கோடி மற்றும் கான்கிரீட் மேற்கூரை அமைக்க மாநில அரசின் கூடுதல் நிதி ரூ.2,637.76 கோடி என மொத்தம் ரூ.8,968.39 கோடி மதிப்பில் வீடு கட்டும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

17 லட்சம் வீடுகள்

2011 சமூக பொருளாதார கணக்கெடுப்பு பட்டியலின்படி இத்திட்டத்தில் பயன்பெற தகுதியற்ற குடும்பங்கள் என நீக்கம் செய்யப்பட்ட பயனாளிகளைத் தவிர்த்து சுமார் 2 லட்சத்து 90 ஆயிரம் பயனாளிகள் இத்திட்டத்தில் பயன்பெற காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் 2011 ஆண்டு முதல் 2020 ஆண்டு வரை உள்ளாட்சி துறையின் சார்பில் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் 17.08 லட்சம் பயனாளிகளுக்கு பல்வேறு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன. இதில் ஊரகப் பகுதிகளில் மட்டும் பணி ஆணை வழங்கப்பட்ட 18.30 லட்சம் வீடுகளில் 15.31 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் பயன்பெற பல தகுதி வாய்ந்த குடும்பங்கள் அல்லது பயனாளிகளின் பெயர்கள் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பட்டியல் 2011–ல் இடம்பெறவில்லை. தகுதியுள்ள விடுபட்ட பயனாளிகளை சமூக பொருளாதார கணக்கெடுப்பு பட்டியலில் சேர்த்திட மத்திய அரசின் அனுமதி பெற்று மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 9.11 லட்சம் தகுதியுள்ள பயனாளிகளின் பெயர் மற்றும் விவரங்கள் ஆவாஸ் பிளஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட இலக்கினை அடைய ஆவாஸ் பிளஸ் பட்டியலில் இருந்து பயனாளிகளை தேர்வு செய்ய ஒப்புதல் வழங்க கோரி மத்திய ஊரக வளர்ச்சித் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் விரைந்து வழங்கிட இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.

ரூ.1254 கோடி தாருங்கள்

மேலும், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களுக்கான 14–வது மத்திய நிதிக் குழுவின் தமிழகத்திற்கான அடிப்படை மானியம் ரூ.548.76 கோடி மற்றும் செயலாக்க மானியம் ரூ.705.62 கோடி என மொத்தம் ரூ.1,254.38 கோடியை உடனடியாக விடுவிக்கும்படி மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரை இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்வதாகவும், பிரதமரின் அனைவருக்கும் வீடு என்கின்ற எண்ணத்தை வருகின்ற 2022–ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் முதலமைச்சரின் சீரிய தலைமையில் முழுமையாக நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் கே.எஸ்.பழனிசாமி உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *