சிறுகதை

ஓட்டல் உணவு | சரண்யா ராஜகுரு

Spread the love

வெறுக்க வைத்து விட்டது உமா சாப்பிட்ட ஓட்டல் உணவு.

உணவே மருந்து என்பார்கள். அதிலும் குறிப்பாக தென்னிந்திய உணவு மருத்துவ குணங்களை உள்ளடக்கிய பொருட்களை வைத்தே சமைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட உணவுகளையே வெறுக்க வைத்து விட்டது என் ஓட்டல் உணவு.

உமா தங்கியிருக்கும் நகரில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து ஆண்கள் பெண்கள் என அனைவரும் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் விடுதியிலும் வீடுகள் எடுத்துமே தங்கியிருக்கிறார்கள்.

உமாவும் அவளது தோழிகள் ரமா, ராதிகா ஆகியோரும் ஒரு வீடு எடுத்து தங்கியிருந்தார்கள்.. அவர்கள் தங்கியிருந்த வீட்டின் அருகில் ஒரு ஓட்டல் இருந்தது. அந்த ஓட்டலில்தான் அவர்கள் சாப்பிட்டு வந்தார்கள். மாதந்தோறும் உணவுக்கு அந்த ஓட்டலில் குறிப்பிட்ட தொகையைக் கட்டிவிடுவார்கள்.

அதில்அவர்கள் கட்டும் பணத்திற்கு ஏற்ப ஆரோக்கியமான, சுத்தமான உணவுகளை அவர்களுக்கு வழங்குவதில்லை. உடலில் எந்தவித நோய்கள் இல்லாமல் இருந்தாலும்கூட அந்த ஓட்டலில் போடும் உண்வைச் சாப்பிட்டால் நோய்கள் வந்துவிடுமோ என்று எண்ணி பல நேரங்களில் அவர்கள் உணவைத் தவிர்த்து விட்டார்கள். தண்ணீரே அவர்களுக்குப் பல நேரங்களில் உணவாகவும் இருந்தது.

அந்த ஓட்டலில் எண்ணெயில் பொரித்த பூரி போன்ற உணவுகளை சமையல் செய்பவர்கள் சமைக்கும் போது ஏற்கெனவே பயன்படுத்திய கசடு எண்ணெயையே மீண்டும் மீண்டும் உபயோகித்தனர்.

இட்லி, தோசைக்கு ஆட்டிய மாவை நாள் கணக்கில் வைத்து உபயோகிப்பது, காய்கறிகளை சரியாக சுத்தம் செய்யாமல் சமைப்பது, இரவில் சமைத்த உணவை காலையில் சமைத்த உணவோடு கலப்பது, குழம்புகளில் மாவுகளைக் கலப்பது, சுவைக்காக ஏதேதோ பொடிகளை உணவுகளில் சேர்ப்பது போன்றவைகளை அங்கு சமைப்பவர்கள் செய்தார்கள்.

இதனால் அவர்களது உடல்நலமும் பாதிப்படைந்தது.

இதுபோன்ற சாப்பாட்டில் உள்ள ஒருசில குறைகளை அவர்கள் ஓட்டல் உரிமையாளரிடம் சொல்லும்போது ‘அதனைச் சரி செய்கிறோம்’ என்று கூறினால் கூட அவர்கள் மனது ஆறிவிடும். அப்படி ஏதும் சொல்லாமல் ‘அப்படித்தான் இருக்கும்.விருப்பம் இருந்தால் சாப்பிடுங்கள். இல்லையென்றால் வேறு ஓட்டல் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டார்கள்.

இதுகூட பரவாயில்லை. எதுவாக இருந்தாலும் வெளிப்படையாகவும் நேரடியாகவும் சொல்லுகிறார்கள் என்று நினைத்துக் கோபம் வந்தாலும் கூட சாந்தமாக இருந்துவிடுவர்கள்.

ஆனால் நடக்குமே ஒரு நாடகம்…. அப்பப்பா….. தாங்க முடியாது!

உணவில் உள்ள ஒரு சில குறையை சுட்டிக்காட்டி சமையல் செய்பவரிடம் அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு அவர், ‘சமைப்பதற்கான பொருட்களை ஓனர் சரியாக வாங்கித் தரவில்லை’ என்று ஓட்டல் உரிமையாளரைப் பற்றி குற்றம் சொன்னார்.

“சார் நீங்கள் சமைப்பதற்கு ஏற்ற பொருட்களை வாங்கிக் கொடுங்கள் சார். அப்பத்தான் அவுங்க சமைப்பது நல்லா இருக்கும்” என்று ஓட்டல் உரிமையாளரிடம் உமாவும் தோழிகளும் கூறினார்கள்.

அப்போது அவர், “நான் எனது வீட்டிற்கு வாங்குவதைப் போலவே தரமான சமையல் பொருள்களையே வாங்கித் தந்தேன். அனைத்து வகையான பொருட்களையும் வாங்கித் தந்தேன்’ என பதில் கூறினார்.

இதனைக் கூறி சமைப்பவரிடம், “அவர் தேவையான பொருள்கள் அனைத்தையும் வாங்கித் தருவதாகத்தான் சொன்னார். நீங்கள் ஏன் அப்படி கூறினீர்கள்?” என்று அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு சமைப்பவர், “உங்களிடம் அவர் அப்படித்தான் சொல்லுவார். ஆனால் என்னிடம் நீ இருப்பதை வைத்து சமையல் செய். அவர்கள் அப்படித்தான் குறை சொல்லுவார்கள் என்று கூறினார்” என்று அவர்களிடம் பதில் அளித்தார்.

இதில் யாரை நம்புவது? என்ன செய்வது? சரி என்னமோ பண்ணட்டும் என்று நினைத்துக்கொண்டாள் உமா. செய்வதறியாது சாப்பாட்டில் பாதி சாப்பிட்டு மீதியை தெரிந்தே வீணடித்து விட்டு வீட்டுக்குச் சென்று மூச்சு முட்ட தண்ணீரைக் குடித்த பிறகு பசிபட்டினியோடு பல நாள் தூங்கினார்கள்.

அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதியளவு வீட்டு வாடகைக்கும் சாப்பாட்டுக்குமே போய்விடும். அப்படி இருக்க இதுபோன்ற ஆட்கள் இவ்வாறு செய்வது எந்த விதத்தில் ஞாயம் என்பதை யோசித்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

மதிய உணவில் சோறு, சாம்பார், ரசம், புளிக்குழம்பு, கூட்டு, பொறியல், மோர் என்று வீட்டு சாப்பாட்டை சாப்பிடும்போது அதில் உள்ள காய்களை ஒதுக்கிவிடுவார்கள்.

ஆனால் இப்போது இந்த வகையான உணவு இருந்தாலும் அதில் உள்ள கறிவேப்பிலையைச் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் கூட அதைப் புசிப்பதற்கு மனம் வரவில்லை. காய்கறிகளும் கிடைப்பதில்லை. வயிறார அவர்கள் சாப்பிடவும் முடியவில்லை என்பதே உண்மை.

ருசியான உணவைக் கொஞ்சம் சாப்பிட்டாலும் பசியே போய்விடும். அவர்கள் கிராமத்தில் ‘ருசிக்கு சாப்பிடாதே; பசிக்கு சாப்பிடு’ என்பார்கள். அதை நினைத்துதான் அந்த உணவைச் சாப்பிட்டு காலத்தைக் கடத்தி வந்தார்கள்.

சாப்பாட்டில் அவர்கள் ரொம்ப ருசியை எதிர்பார்க்கவில்லை. ஓரளவு ருசியாகவும் சுத்தமாகவும் உணவை சமைத்தால் போதும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. உணவில் உப்பு குறைவாக இருந்தால் போட்டுக் கொள்ளலாம். ஆனால் சாப்பாடே குறை சொல்லும் அளவிற்கு இருந்தால் என்ன செய்வது?

எந்த குழம்பிற்கு எந்த காய்கறிகள் போட்டு சமைக்க வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. இதில் எதையுமே பின்பற்றாமல் சமைத்தார்கள் அந்த ஓட்டலில் சமைக்கும் சமையல்காரர்கள்.

இந்த நிலைமை மாற வேண்டும் என்றால் ஓட்டல் உரிமையாளர்களும் சமையல் செய்பவர்களுமே மாற வேண்டும்.

ஊஹூம் . யார் மாறுகிறார்களோ இல்லையோ? இனிமேல் இந்த ஓட்டலில் சாப்பிட வேண்டாம் என்று நினைத்து உமாவும் அவளது தோழிகளும் மாறிவிட்டார்கள்.

அவர்கள் தங்கியிருந்த வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டு விட்டு அவரவர் வேலையைப் பார்த்து வர ஆரம்பித்து விட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *