செய்திகள்

2021 சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினால் தி.மு.க அழிந்தது என்ற வரலாறு உருவாகும்

மதுரை, மார்ச் 1–

2021 சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினால் தி.மு.க. அழிந்தது என்ற வரலாறு நிச்சயம் உருவாகும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உறுதிபட கூறினார்

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அம்மா கோவிலில் நடைபெற்றது. இதில்அவைத்தலைவர் ஐயப்பன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, கழக பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல் ,அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், மாவட்ட பேரவை செயலாளர் தமிழழகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கராஜ பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை வழங்கி பேசியதாவது :

எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை தோற்றுவித்த போதே திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றோம். ஆகவே பிறக்கும்போதே வெற்றி என்ற தாரக மந்திரத்தை உருவாக்கிய ஒரு இயக்கம் நமது இயக்கம். அம்மாவின் அரசு 4 நாள் தாங்காது என்று கூறியவர். மத்தியில் இன்றைக்கு இந்த நான்கு ஆண்டுகள் அல்ல இனிவரும் நூறு ஆண்டு காலமும் அண்ணா தி.மு.க. தான் ஆட்சி பீடத்தில் அமர்ந்து மக்கள் சேவையாற்றும் என்று வரலாறு படைக்கும் வகையில் சாதனை படைத்துள்ளார் நமது முதலமைச்சர். அதற்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார்.

இந்த நான்காண்டுகளில் ஒவ்வொரு நாளும் திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்க்கை தரத்தை முதலமைச்சர் உயர்த்தியுள்ளார் என்பதை இந்த நாடு நன்கு அறியும். இந்தியாவில் அனைத்து துறைகளிலும் சிறந்த விளங்கும் மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியும், மக்களின் எண்ணங்களை அறிந்து நலத்திட்டங்களை வழங்குவதில் இந்தியாவிற்கு முன்னோடியாக நமது முதலமைச்சர் திகழ்கிறார்.

முன்பெல்லாம் ஏழைக் குடும்பங்களில் திருமணம் என்றால் மஞ்சள் கிழங்கை மஞ்சள் கயிற்றில் வைத்து திருமணம் செய்வார்கள். அந்த நிலையை மாற்றி தாலிக்கு 4 கிராம் தங்கத்தை வழங்கிய அம்மா, அதனை தொடர்ந்து 8 கிராம் தங்கம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். இன்றைக்கு தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது தங்கத்தை வெட்டி எடுக்கும் நாடுகளில்கூட இத்திட்டம் கிடையாது. விவசாய மக்களுக்கு இந்த ஐந்து ஆண்டுகளில் 17,428 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இதன் மூலம் 33.43 லட்சம் விவசாயிகளின் வாழ்வில் ஒளி ஏற்றிவைத்து அரசு அம்மா அரசாங்கும்.

உழைக்கும் பெண்களுக்கு இது வரை மானிய விலையில் 2,85,000 இரண்டு சக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இந்த 10 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 80 ஆயிரம் கோடி வரை கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு 18 ஆயிரம் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 67 லட்சம் கர்ப்பிணி பெண்கள் பயனடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாது கடந்த தி.மு.க. ஆட்சியில் முதியோர் ஓய்வூதிய தொகை 500 ரூபாய்தான் வழங்கப்பட்டது. இதற்காக 1,200 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டது. அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் 1,000 ரூபாயாக உயர்த்தி கூடுதலாக முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் தற்போது கூடுதலாக 5 லட்சம் பேர் பயன்படும்வகையில் அறிவித்து அதன்படி வழங்கப் பட்டு வருகிறது. தற்போது இதற்காக ஒதுக்கப்படும் தொகை 4,800 கோடி ரூபாயாகும்.

தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட பட்ஜெட்டை எடுத்துக்கொண்டால் மக்களுக்கு எந்த பலனும் இருக்காது. ஆனால் இன்றைக்கு அம்மா அரசின் பட்ஜெட்டை எடுத்துக்கொண்டால் மக்களை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்லும் பட்ஜெட்டாக உள்ளது. இன்றைக்கு ஸ்டாலின் மக்களை ஏமாற்றும் விதமாக மனுக்களை வாங்கி பெட்டியில் வைத்து பூட்டு போட்டுக்கொண்டு அறிவாலயத்துக்கு கொண்டு செல்கிறார். பொதுவாக மனு வாங்கினால் அதை படித்து பார்க்க வேண்டும். இல்லை என்றால் அந்த மனுக்களை கணினியில் ஏற்றி வைக்க வேண்டும். இதுதான் வழக்கமான நடைமுறை ஆகும்.

ஸ்டாலின் ஒருபோதும் பதவிக்கு வரப் போவதுமில்லை. அந்த பெட்டியை திறக்க போவதுமில்லை. ஏனென்றால் தி.மு.க.விற்கு மக்கள் ஓட்டு போடுவதில்லை. அதுமட்டுமில்லாது இன்றைக்கு மக்களின் குறைகளை தீர்ப்பதில் முதலமைச்சர் இந்தியாவிலேயே முதன்மையாக திகழ்கிறார். 234 தொகுதியிலும் மக்களின் குறைகளை முதலமைச்சர் போக்கி வருகிறார். மக்களைத் தேடி அரசு என்பது ஒருபுறம் இருந்தாலும் இன்றைக்கு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் அரசாக அம்மா அரசு உள்ளது.

இன்றைக்கு நல்லவர்கள் யார், நம்மை வாழ வைப்பவர் யார், நமக்கு துணையாக நிற்பவர் யார், ஏழை எளிய மக்களுக்கு திட்டங்களை வழங்குவது யார், இப்படி யார் யார் என்று கேள்வி கேட்டாலும் அதற்கு ஒரே விடை எடப்பாடியார் தான். 2021 சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்.

இந்த வெற்றியை தடுக்க திமுகவினர் பல தில்லு முல்லுகளை செய்வார்கள். அதையெல்லாம் நீங்கள் விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டும். இன்றைக்கு மக்கள் மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்புகின்றனர். ஏனென்றால் இந்த ஆட்சியில் தான் மின்வெட்டு கிடையாது. ரவுடிசம் கிடையாது. நில அபகரிப்பு கிடையாது. மக்கள் திட்டங்கள் அனைத்தும் தடையின்றி மக்கள் இடத்தில் சேர்கிறது. மேலும் மாணவர்கள், இளைஞர்கள், தாய்மார்கள், தொழிலாளர்கள் எப்படி அனைத்து தர மக்களுக்கும் காவல் அரணாக அம்மா அரசு திகழ்கிறது என்று மக்கள் உறுதியுடன் உள்ளனர்.

வில்வ இலை நோயைத் தீர்க்கும், வேப்பிலை பில்லி சூனியத்தை போக்கும், ஆனால் இரட்டை இலை மக்களின் அனைத்து குறைகளை போக்கும். ஆகவே வரும் தேர்தலில் நாம் மகத்தான வெற்றி பெறுவோம். தி.மு.க. டெபாசிட் இழந்து இந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அழிந்த வரலாறு ஸ்டாலினால் நிச்சயம் உருவாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *