செய்திகள்

அரசியல் களத்தில் சந்திக்க வேண்டிய சண்டைகளை நீதிமன்றத்துக்கு ஏன் கொண்டு வருகிறீர்கள்?

சென்னை, ஜன.5-

அரசியல் சண்டைகளை ஏன் நீதிமன்றத்திற்கு கொண்டு வருகிறீர்கள்? என்று தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

1988ம் ஆண்டு இயற்றப்பட்ட ஊழல் தடுப்பு சட்டத்தில், 2018ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில் பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்கள் மீது விசாரணை நடத்த தகுதியான அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி தமிழக அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்கள் குறித்து விசாரிக்க பொதுத்துறை செயலாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர், அமைச்சர்களுக்கு எதிராக நானும், தி.மு.க. சார்பிலும் கொடுக்கப்பட்ட புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல், பொதுத்துறைச் செயலாளர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை செயலாளர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அவர் அமைச்சரவையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு செயல்படக்கூடிய அதிகாரி ஆவார்.

எனவே இதுபோன்ற புகார்களை விசாரிப்பதற்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை மாநில கவர்னருக்கு, அரசியல் சாசனம் வழங்கியுள்ள நிலையில் பொதுத்துறை செயலாளரிடம் ஒப்புதல் பெறும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அரசாணை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், அரசியல் சண்டைகளை ஏன் நீதிமன்றத்துக்கு கொண்டு வருகிறீர்கள்? அரசியல் களத்தில் சந்திக்க வேண்டியது தானே? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு விளக்கம் அளித்த மனுதாரர் தரப்பு வக்கீல், அரசாணையை எதிர்த்து தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறினார். இதையடுத்து, மனுவுக்கு 6 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *