சிறுகதை

நடுத் தெருவில் நிறுத்தியவன்

சென்னை வடபழனி பகுதியில் விசிட்டிங் கார்ட், கம்பெனிகளின் லெட்டர் பேட் ஆகியவற்றை பிரிண்ட் செய்து கொடுக்கும் ஸ்கிரீன் பிரிண்டிங் கடை நடத்தி வருபவர் முகுந்தன்.
சிறிய அளவில் கடை நடத்தினாலும் சொந்தவீட்டில் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
அவருக்கு சாந்தி என்ற மனைவியும் ஆனந்தன் என்ற மகனும் உள்ளனர்.
ஆனந்தன் பிரபலமான தனியார் சிபிஎஸ்இ பள்ளி ஒன்றில் 5ம் வகுப்பு படித்து வந்தான்.
முகுந்தன் கடைக்கு தினமும் ஏராளமான பிரிண்டிங் ஏஜென்ட்கள் வந்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு தேவையான விசிட்டிங் கார்டு போன்றவற்றை பிரிண்ட் செய்வது வழக்கம்.
பல்வேறு நிறுவனங்களுக்கான விசிட்டிங் கார்ட், லெட்டர் பேட் பிரிண்டிங் செய்து கொடுக்கும் தொழில் செய்து வரும் பார்த்திபனும் அடிக்கடி வந்து செல்வார்.
அதனால் முகுந்தனுக்கும் பார்த்திபனுக்கும் அறிமுகம் ஏற்பட்டது.
தினமும் முகுந்தன் கடைக்கு வரும், பார்த்திபன் அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு செல்வார்.
ஒரு நாள் பார்த்திபன், முகுந்தனிடம் தனக்கு ஏராளமான சினிமாத் தயாரிப்பு கம்பெனிகளின் உரிமையாளர்களைத் தெரியும் என்றும் சினிமா படங்களுக்கான கலர் போஸ்டர் அச்சடிக்கும் ஆர்டர்கள் தன்னிடம் உள்ளது என்றும் நீ போஸ்டர் அச்சடிக்கும் இயந்திரம் வாங்கி பெரிய அளவில் தொழில் தொடங்கினால் தான் தொடர்ந்து ஆர்டர் வாங்கி கொடுப்பதாகவும் ஆசை வார்த்தை கூறி பேசினார்.
அவர் கூறியதை கேட்ட முகுந்தன் தன்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லாததால் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் விட்டு விட்டார்.
ஆனாலும் பார்த்திபன் முகந்தனை விட்டப்பாடில்லை.
அவனை சந்திக்கும் போதெல்லாம் இன்னும் எத்தனை காலத்துக்கு ஐநூறு, ஆயிரத்திற்கு தொழில் செய்து கொண்டிருப்பாய், நான் சொல்வது போல் தொழில் தொடங்கினால் விரைவில் பெரிய அளவில் வளர்ந்து விடலாம் என்று ஆசை வார்த்தை கூற ஆரம்பித்தார்.
தன்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லை. அதனால் அதை விட்டுவிடு என்று கூறினார்.
உனக்கு தான் சொந்த வீடு உள்ளதே வங்கியில் லோன் வாங்கி தொழில் தொடங்கலாம் என்று யோசனை கூறினான்.
ஆரம்பத்தில் சாதாரணமாக விட்ட முகுந்தனும் மாறி மாறி அவர் கூறியதை கேட்டதும் தாமும் பெரிய அளவில் தொழில் செய்யலாமே என யோசிக்க தொடங்கினார்.
இது குறித்து தனது மனைவியிடம் மெதுவாக பேசினார்.
ஆரம்பத்தில் அவரது மனைவி நமக்கு இதெல்லாம் வேண்டாம். வரும் வருமானம் போதும். இதையே சிறப்பாக நடத்தலாம் என்று கூறினார்.
முகுந்தனுக்கு மனசு கேட்கவில்லை. நாமும் பெரிய அளவில் தொழில் தொடங்க வேண்டும் என எண்ணம் தோன்றியது.
அதைத் தொடர்ந்து, தனது மனைவியை சமாதானம் செய்யும் வேலையில் ஈடுபட்டார்.
அவரது மனைவியும் வேறு வழியில்லாமல், யோசித்து நான்குபேரிடம் விசாரித்து தொழில் தொடங்குங்கள் என்றார்.
இல்லை… இல்லை…. பார்த்திபனே கம்பெனிக்கு ஆர்டர்கள் வாங்கி தருவதாகவும் அவருக்கு கமிஷன் மட்டும் கொடுத்தால் மட்டும் போதும் என்று கூறிவிட்டார்.
அவரை நம்பித் தான் இந்தத் தொழிலை தொடங்குகிறேன் என்றார்.
என்னங்க… பார்த்திபன் யாரு… அவரை பற்றி எல்லாம் உங்களுக்கு தெரியுமா… என்று திருப்பி கேட்டார்.
அவர் டெய்லி நம்ம கடைக்கு வருபவர் தான். ஏராளமான சினிமா நிறுவனங்களுடன் தொடர்பு வைத்திருப்பவர். அதனால் அவரை நம்பி தொடங்குகிறேன் என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து முகுந்தன், பார்த்திபனிடம் தொழில் தொடங்க சம்மதம் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பார்த்திபன், பிரிண்டிங் செய்வதற்கான தேவையான மிஷின்கள் புதியதாக வாங்கினால் செலவு அதிகம் ஏற்படும். அதனால் தனக்கு தெரிந்த இடத்தில் பழைய மிஷின் ஒன்று உள்ளது என்று கூறினார்.
முகுந்தனும் அவனது பேச்சைக் கேட்டு அந்த பழைய மிஷினை வாங்குவதற்கு சம்மதம் தெரிவித்தான்.
தன்னுடைய வங்கி மேலாளரை நேரில் சந்தித்த முகுந்தன் தொழில் தொடங்க கடன் கேட்டான். அதற்காக தனது வீட்டின் பத்திரத்தை அடமானமாக வைப்பதாக கூறினான்.
வங்கி நடைமுறைகள் எல்லாம் செய்யப்பட்டு, வங்கியிலிருந்து கடன் தொகை கிடைத்தது.
அதை வைத்து முகுந்தன் பழைய பிரிண்டிங் மிஷினை வாங்கி அதை நிறுவும் வேலையில் ஈடுபட்டார்.
தொழிற்சாலைக்கான சட்ட நடவடிக்கையும் அதே நேரத்தில் மேற்கொண்டார்.
பார்த்திபனும் அவ்வப்பெழுது வந்து தனது கருத்துகளை கூறி வந்தார்.
தொழிற்சாலை பணிகள் நிறைவடையும் நிலையில் வங்கியில் வாங்கிய தொகை முழுவதும் செலவாகிவிட்டது. மேலும் பணம் தேவைப்பட்டது.
இதையடுத்து தனது மனைவியின் நகையை அடமானம் வைத்து அதன் மூலம் கிடைத்த பணத்தையும் செலவு செய்தார்.
ஒரு வழியாக தொழிற்சாலை தயாரானது.
பார்த்திபனும் தனக்கு தெரிந்த சினிமா கம்பெனியின் மூலம் போஸ்டர்கள் அடிக்கும் ஆர்டர்கள் வாங்கிக் கொடுத்தான்.
ஆர்டர்கள் வந்து பணிகள் வேகவேகமாக நடைபெற்றது.
சினிமா நிறுவனத்தினர் ஆர்டர் மட்டுமே கொடுத்து வந்தனர். தங்களது ஆர்டருக்கான பணத்தை மூன்று மாதம் கழித்தே தருவதை வழக்கமாக கொண்டனர்.
இதனால் முகுந்தன் தனது தொழிலை மிகவும் கஷ்டப்பட்டு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
6 மாதங்கள் இவ்வாறு கஷ்டப்பட்ட நிலையில் முகுந்தன் தொழில் நடத்தினார்.
இடையே இடையே பழைய மிஷின் என்பதால் பழுது ஏற்பட்டதால் அதிலும் பெரும் செலவு ஏற்பட்டது.
நவீன தொழில் நுட்பம் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் வருகையால் பார்த்திபன் வழியாக வந்த ஆர்டர்களும் குறையத் தொடங்கியது.
வங்கியில் வாங்கிய கடனுக்கும் வட்டிக்கூட செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
ஏற்கனவே வந்த ஆர்டருக்கான பணமும் வராமல் பெருந்தொகை நிலுவையில் நின்றது.
ஒரு கட்டத்தில் முகுந்தனால் தொடர்ந்து தொழிலை நடத்த முடியவில்லை.
பார்த்திபனை தொடர்பு கொண்ட முகுந்தன் சினிமா நிறுவனத்திடமிருந்து வரவேண்டிய நிலுவைத் தொகையை விரைவாக வசூலித்து தரும்படி கூறினார்.
அந்த பிரசன்னையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பார்த்திபன் தன்னால் பணத்தை வசூலிக்க முடியாது என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
முகுந்தனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
பார்த்திபன் குறித்து விசாரித்ததில் அவன் ஏற்கனவே இது போன்று பலரை ஏமாற்றி தொழில் தொடங்க வைத்து அவர்களை நடுத் தெருவில் நிறுத்தி விட்டு சென்று விடுவான் என்று தெரியவந்தது.
தொழிற்சாலையை மூடினான் முகுந்தன்.
தன்னிடமிருந்த பிரிண்டிங் மிஷினை விற்று கடனை அடைக்கலாம் என நினைத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டான்.
ஆனால் குறைந்த விலைக்கே அந்த மிஷின் விற்பனையானது. அந்த பணத்தை வைத்து ஓரளவு தான் கடனை அடைக்க முடிந்தது.
வங்கியில் பணத்தை கேட்டு நோட்டீஸ் அனுப்பினர்.
முகுந்தனால் பணத்தை கட்ட முடியாததால் வங்கியில் முகுந்தன் அடமானம் வைத்த வீட்டை ஏலம் விட்டனர்.
அதில் கிடைத்த பணத்தை வங்கியினர் தங்களது கடனுக்கும் வட்டிக்கும் எடுத்துக் கொண்டனர்.
முகுந்தன் கைக்கு எந்த பணமும் கிடைக்கவில்லை.
ஒருவரை பற்றி முழுமையாக தெரியாமல் அவரை நம்பி தொழில் செய்த முகுந்தன் தனது சொத்தை இழந்து வறுமை அடைந்தான்.
சொந்த வீட்டை இழந்து, வாடகை வீட்டுக்கு குடியேறினான் தனியார் பள்ளியில் படித்த தனது மகனை அரசு பள்ளியில் சேர்த்து விட்டான்.
நல்ல வசதியாக வாழ்ந்த முகுந்தன் குடும்பம் ஏழ்மை நிலைக்கு சென்றது. வசதியான தனியார் பள்ளியில் படித்த முகுந்தனின் மகன் அரசு பள்ளியில் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாக சேர்த்துக் கொண்டு அவன் கூறியது போல் செயல்பட்டால் அதனால் நாம் மட்டுமல்லாமல் நமது வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பத்தை கொடுக்கும் என்பதை முகுந்தன் உணர்ந்தான்.
மீண்டும் தனது பழைய தொழிலாளான விசிட்டிங் கார்டு பிரிண்ட் செய்து கொடுக்கும் தொழிலை நடத்த தொடங்கி தனது வாழ்க்கையை மீண்டும் ஆரம்பித்தான்.
துரை. சக்திவேல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *