செய்திகள்

மது கடத்தலில் ஈடுபடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்: புதுவை போலீஸ் எச்சரிக்கை

புதுவை, மார்ச் 5–

புதுச்சேரியில் இருந்து மது கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்குப் பரிந்துரை செய்யப்படும் என கலால்துறை ஆணையர் சுதாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுவை, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 6 ந்தேதி நடக்கிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து தமிழகப் பகுதிக்கு மதுபானம், சாராயம் கடத்தலைத் தடுக்க புதுவை கலால்துறையினர் மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் புதுச்சேரி தலைமை செயலகத்தில் புதுவை மற்றும் தமிழக போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பிறகு கலால்துறை துணை ஆணையர் சுதாகர் கூறியதாவது:–

சட்டமன்றத் தேர்தலையொட்டி புதுவையில் இருந்து தமிழகப் பகுதிகளுக்கு மதுபானம், சாராயம் கடத்தலை தடுக்க புதுவை, தமிழக மாநில போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. புதுச்சேரியில் மதுபானம் கடத்தலைத் தடுக்க மதுபானம், சாராயக் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

குண்டர் சட்டம்

மதுபானம், சாராயக்கடைகளில் தனிநபருக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட அளவு மட்டுமே மதுபானங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மொத்தமாக மதுபானம் வாங்குபவர்கள் குறித்து கலால்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் புதுவை மற்றும் தமிழக பகுதிகளுக்கு மதுபானம், சாராயம் ஆகியவற்றை கடத்துபவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மதுபானக் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்குப் பரிந்துரைக்கப்படும். மேலும் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் மதுக்கடைகளை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *