செய்திகள்

19–ந் தேதி பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

சென்னை, ஜன.13-–

தமிழகத்தில் வரும் ஜனவரி 19-ஆம் தேதி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

பெற்றோரின் இசைவுக் கடிதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்றும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பெற்றோரின் சம்மதத்துடன் மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கலாம் என்றும், மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வருகிற 19ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்காக பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணிகள் நேற்று முதல் தொடங்கி இருக்கின்றன. மரத்துக்கு அடியில் வகுப்பறைகள் நடத்தவும் பள்ளிகள் திட்டமிட்டு வருகின்றன.

பெற்றோரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகிற 19-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட இருக்கிறது. தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இருக்கின்றன.

இதில் சில பள்ளிகள் நேற்று அரசு அறிவிப்பு வெளியான உடனே, தங்களுடைய பள்ளி வளாகங்களை சுத்தம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட தொடங்கி உள்ளன. ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்கள் என்பதால், கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படும். அந்தவகையில் தேவைக்கேற்ற படி வகுப்பறைகளை ஒதுக்கி அவற்றை கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யும் பணிகளில் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டது.

மேலும் மாணவர்கள் தங்களுடைய கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதற்கு ஏதுவாக ஆங்காங்கே கிருமிநாசினி திரவம் வைக்கப்படுகிறது.

ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கு வரும் மாணவ–மாணவிகளுக்கு எந்த மாதிரி பாடப்பிரிவுகள் ஒதுக்கி வகுப்புகளை நடத்துவது? என்பது பற்றி பள்ளிகளில் ஆசிரியர்களுடன் தலைமை ஆசிரியர் ஆலோசனை நடத்தினார். அதன் அடிப்படையில் மாணவ–மாணவிகளுக்கு பாடங்கள் நடத்தப்பட இருக்கிறது. தேவைப்படும் பட்சத்தில் மரத்துக்கு அடியில் அமர்ந்து காற்றோட்டமான முறையில் வகுப்புகளை நடத்துவதற்கு ஏதுவாகவும் முன்னேற்பாடுகளை பள்ளிகள் செய்து வருகிறது.

மேலும், மாணவ-மாணவிகள் வகுப்பறையை தாண்டி பள்ளி வளாகத்தில் எந்த இடத்திலேயும் கூட்டமாக ஒன்று கூடி விடாதபடி, அதனை கண்காணிக்க ஆசிரியர்கள் தலைமையில் சில குழுக்களும் அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்தக் குழுவினர் பாட இடைவேளை நேரங்களில் பள்ளி வளாகங்களில் மாணவர்கள் கூட்டமாக உலாவுவதை தடுக்க தீவிரமாக கண்காணிக்க இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *