வாழ்வியல்

தடி மரங்களை லாபகரமாக வளர்க்க, பராமரிப்பது எப்படி?

Spread the love

தேக்கு, வேம்பு, குமிழ், மலைவேம்பு போன்ற மரங்களை தடி மரங்கள் என்பார்கள். இவை நீண்டகால மரங்கள். நல்ல லாபம் தருபவை. இவற்றை கிராமங்களில் அரக்கி (Bruning) விட்டு வளர்க்க வேண்டும் என்பார்கள். ஆனால் பலர் அதைச் செய்வதில்லை. நான் டாக்டர் கோ.நம்மாழ்வார் அவர்களின் சிஷ்யனாக இருந்தபோது, அவருடைய ‘வானகம்’ சென்று வந்தேன். அங்கு சென்றதும் 2 வேலைகளை நானே செய்யத் தொடங்கினேன்.

1) அங்குள்ள அனைத்து மரங்களின் பக்க கிளைகளை அழகாய் வெட்டி அரக்கி விடுவது.

2) ஆங்காங்கே கிடக்கும் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள், குப்பை கூளங்களை தன்னார்வ தொண்டர்கள் உதவியுடன் சேகரித்து ஒரு இடத்தில் குவிப்பது.

நான் அரக்கி விட்ட மரங்கள், நன்கு வளர்ந்தன. தடிமனாக இருந்தன. நான் வெட்டி விடாத மரங்கள் ஏராளமான பக்கக் கிளைகள் கொண்டு பெரிதாக வளராமல் இருந்தன.

சீனர்கள் மரங்களை அழகுற வெட்டி நீர் பாய்ச்சி, தூண் போல வளர்க்கின்றனர். நன்கு வளர்ந்ததும் இயந்திரம் மூலம் வெட்டி எடுத்துவிட்டு, ஆழமாய் தோண்டி 2 அல்லது 3 ஆண்டு மரத்தை நட்டு வளர்க்கின்றனர். விரைவில் வளர்ந்து, பெரிய மரமாகின்றன. எனவே நாமும் தடி மரங்களை நன்கு அறிந்து, அதன் மதிப்புணர்ந்து தரமாய் உற்பத்தி செய்ய வேண்டும்.

இதற்கான தொழில்நுட்பத்தை விதை சேகரம் செய்யும்போதே தொடங்க வேண்டும். சிறந்த மரங்களிலிருந்து முதிர்ந்த விதைகளை பக்குவப்படுத்தி உரிய காலத்தில் கன்றுகளை உற்பத்தி செய்து அதன் மூலம் தரமான மரங்களை உற்பத்தி செய்யலாம். அல்லது சிறந்த தரமான நர்சரிகளிலிருந்து கன்றுகளை வாங்கலாம்.

கவாத்து / கிளை வெட்டுதல்…

1) தாய் இலைகளை நன்கு பராமரிக்க வேண்டும்.

2) பக்க கிளைகளை கவனமாக வெட்டி அல்லது ஒடித்து நீக்க வேண்டும்.

3) இலை மொட்டு சேதமாகக் கூடாது.

4) ஆரம்பத்தில் கிளைகளை வெட்டுபோது, அவற்றின் உயரத்தில் மூன்றில் இரண்டு பங்கு இலை/கிளைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

5) வளரும்போது கிளைகளை வெட்டும்போது, வெட்டும் பாகம் கீழ் நோக்கி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேல் நோக்கி வெட்டக் கூடாது.

6) பக்க கிளைகளை வெட்டும்போது, தடி மரத்தின் பட்டைகளுக்கு சேதம் ஏற்படாமல் பிசிறு இன்றி மிக, மிக நேர்த்தியாய் வெட்ட வேண்டும்.

7) மண்ணின் வளம் பொறுத்து, நன்கு வளர்த்த மரங்களை 4–6 மீட்டர் வரை பக்க கிளைகள் இல்லாம் சரியாய் வளர்த்து வந்தால் நல்ல விலை கிடைக்கும்.

8) பூச்சி, நோய் தாக்குதல் இருக்கக் கூடாது.

9) ஒவ்வொரு ஆண்டும் உரம் போட வேண்டும். நீரில் கரையும் உரங்களையும் பயன்படுத்த வேண்டும்.

10 முதல் 12 ஆண்டுகள் கழித்து, நன்கு வளர்ந்த சிறந்த மரங்களின் அருகில் உள்ள மரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். அப்போது வளர்ச்சிக் குன்றிய சில மரங்களை வெட்டியெடுத்து விற்பனை செய்துவிட்டால், இருக்கும் மரங்கள் சிறப்பாக வளரும். அவற்றின் சந்தை மதிப்பு உயரும்.

மரங்களுக்கு ரைசோபியம், அசோஸ், பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, வேர் உட்பூசணம், மண்புழு உரம், பஞ்சகாவியா போன்றவற்றை உரமாகப் போடலாம். இலைகளில் போரான், கந்தகம், மணிச்சத்து போன்றவையும், சுண்ணாம்பு, இரும்பு, சாம்பல், தழைச்சத்தும் குறைபாடு இருந்தால் அறியலாம். அதற்கு ஏற்ற உரம் இட்டு வளருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *