சிறுகதை

கிராமவாசியின் அன்பு | மு.வெ.சம்பத்

Spread the love

இராமநாதபுரத்திலிருந்து நயினார்கோவில் செல்லும் பேருந்தில் வண்டி செல்லும் திசையில் தெரியும் கருவேல மரங்கள், பூவரச மரங்கள், பனை மரங்கள், வேப்ப மரங்கள் மற்றும் இன்னும் பல மரங்களுடன், வானம் பார்த்த வயல் வெளிகள், கண்மாய்க் கரை ஓரங்கள் : இவற்றை கவனித்துக் கொண்டே பயணித்தேன்.

பேருந்து அடுத்த ஊருக்குள் நுழையும் பொழுது அங்கு உலாவிக் கொண்டிருந்த மயில் கூட்டங்களைக் கண்டு மகிழ்ந்தேன்.

என்ன தான் வயது கடந்தாலும், மயில் தோகையுடன் நடந்து வரும் அழகு, ராஜ தர்பாரில் அலங்காரங்களுடன் நடந்து வரும் ராஜாவின் நடையை விட ஒரு படி மேல் தான் என எண்ணத் தோன்றியது.

அடுத்த நிறுத்தத்தில் தேர்த்தங்கல் பறவை சரணாலயம் என்ற பலகை காணப்பட்டது. அதற்கு அப்பால் பறவைகளை பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து எழுதிய ஒரு பலகை காணப்பட்டது. அங்கே காணப்பட்ட பெரிய நீர்நிலையில் நாட்டுப் பறவைகள், காடைகள், கொக்குகள் போன்ற இன்னும் பல பறவைகள் விளையாடியும் பறந்தும் கிடைக்கும் உணவை உண்டு பசியைத் தீர்த்துக் கொண்டிருந்தன.

அடுத்த நிறுத்தத்தில் ஒரு பெரியவர் பேருந்தில் ஏறி எனது பக்கத்தில் வந்து அமர்ந்தார். அப்பொழுது அங்கு வயல் வெளியில் நின்றிருந்த மயில்களைப் பார்த்துக் கொண்டிருந்த என்னிடம் தம்பி எந்த ஊரு என்றார். நான் இராமநாதபுரம் என்றவுடன் மயில்கள் இங்கு நிறையத் தான் இருக்கும் தம்பி, இந்த ஊர் மக்களாகிய நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம்; யாரும் அதை கொல்லவும் விட மாட்டோம். அந்நியர் யாரும் உள்ளே வந்து அவைகளை எளிதில் பிடித்து விட முடியாதபடி எங்கள் ஊர் மக்கள் காவலாக இருப்போம் என்றார்.

நல்ல அரண், பாதுகாப்பு உள்ள நாட்டில் வாழும் அரசர்கள் போன்றல்லவா இருக்கிறது என்றேன்.

நன்றாக பேசுகிறீர்கள் என்றார் பெரியவர்.

நான் அடுத்து இவ்வளவு தரிசு நிலங்கள் மழையை நம்பி உள்ளதே, நல்ல மழை பெய்தால் உண்மையிலே விவசாயம் நன்றாகவே அமையுமல்லவா என்றதும் பெரியவர் எனக்கும் 75 வயதாகிறது இந்தக் கனவு எந்தன் மனதிலும் உள்ளது என்று கூறி சிரித்தார். மயில்கள் நீங்கள் விவசாயம் செய்யும் நிலங்களில் இடையூறு செய்யுமா என்றவுடன், பெரியவர் காய்கறிகள், பழச் செடிகள் போட்டால் அவ்வளவு நெருங்காது, தானியம் விதைத்தால், மேற்போக்கான விதைகளை தின்று விடும் என்றார். அறுவடை காலத்தில் நெற்கதிர்களை இவைகளிடமிருந்து காப்பது கடினம் தான் என்றார். இவைகள் நாசம் செய்தால் உங்களுக்கு சேதம் தானே என்றவுடன் அவர் நம்மோடு வாழும் பறவைகள், நம்மை நம்பி அண்டிய பறவைகள் தின்றது போக மிச்சம் நமக்கு இருந்தால் போதும் தம்பி என்று கூறி விட்டு வந்த பேருந்து நிறுத்தத்தில் புன்னகையுடன் இறங்கிச் சென்றார்.

அவர் சாதாரணமாக பேசிய வார்த்தைகளில் உள்ள ஆழமான அர்த்தங்கள் என்னை நன்றாகவே யோசிக்க வைத்தது. தனது குடும்பம், அண்டி வந்த பறவைகளுக்காக அன்பு காட்டி வாழும் கிராம மக்களை பாராட்ட வார்த்தைகளைத் தேடினேன்.

மண்வாசணை கிராமத்தில் இன்னும் வீசக் காரணம் இது தானோ!

கிராமங்கள் அழியாமல் புத்துயிருடன் இருப்பதாகவே உணர்கிறேன், இந்த கிராமவாசியின் அன்பால்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *