நாடும் நடப்பும்

2020 விடைபெறுகிறது: 2021 மலர்கிறது

* அரசியலில் புது சிந்தனைகள் கண்டோம்

* மனிதத்துவம் மேம்பட்டதை உணர்ந்தோம்

* தலைவர்களின் தன்னிகரில்லா சேவையை பாராட்டுவோம்

சாமானியர்களின் சாதனைகளை கொண்டாடுவோம்

கொரோனா தொற்று, பொருளாதார சரிவு குறிப்பாக வாகன உற்பத்தியில் தேக்கம் என தொடங்கிய 2020 – விவசாயிகள் மிகப்பெரிய போராட்டத்தில் குதிக்க தலைநகர் டெல்லி திணறி நிற்க 2020 இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

தற்போது உங்கள் கையில் தவழும் இந்த இதழே இவ்வருடத்தின் கடைசி பதிப்பாகும்! நாளை 2021 பிறக்க இருக்கிறது. கூடவே புதிய நம்பிக்கையும் பிறக்கிறது.

அரசும், அரசாட்சி செய்யும் அரசியல் தலைவர்களும் நம் அன்றாட வாழ்வில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருவது பட்டவர்த்தமான உண்மை என்பதையும் 2020 நம்மிடம் நிலை நிறுத்தி விட்டுச் செல்கிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் நம் நாட்டிற்கு பிப்ரவரியில் வந்தார். அது அவரது அரசியல் செல்வாக்கிற்கான ஏற்பாடு என்ற கண்ணோட்டத்தில் உலகமே பார்த்தது.

ஆனால் அவரது வருகையினால் இந்தியாவிற்கு சாதகமாக பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் நிறைவேறியது. இது இந்தியாவின் வல்லரசு கனவுகளை நனவாக்கும் அடித்தளமாகி மேலே உரமாக உயர்த்தும் படிகட்டுகளாக கருதப்படுகிறது. ஆனால் இதில் நமக்கு எந்த வகையான நெருக்கடிகள் காத்திருக்கிறதோ? என்ற அச்சக்கேள்வியும் எழுந்தது. டிரம்ப் அறிவித்த ஒப்பந்தங்கள் அடுத்த தலைமுறை வளர்ச்சிகளை நம் மண்ணில் விதைக்கும் என்று எதிர்பார்க்கலாம்!

ஆனால் சீனாவின் பொருளாதார கட்டமைப்பு இந்திய வளர்ச்சியை விரும்பவா போகிறது! அதைப் பிரதிபலிக்கும் வகையில் சீன ராணுவம் நமது எல்லைப்புறத்தில் அத்துமீறல்களை கட்டவிழ்த்துவிட்டது, யுத்த சூழ்நிலை உருவானது. அதன் தொடர்ச்சியாக அரங்கேறிய துப்பாக்கிச் சூட்டில் இரு தரப்பிலும் உயிரிழப்பு கண்டது, ஆறு மாதங்கள் ஆகியும் சச்சரவு முடிவுக்கு வரவில்லை.

இந்த அரசியல் நெருக்கடிகளுக்கு இடையே பிரதமர் மோடி பொறுமையுடன், நிதானமாகவே இப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு வருகிறார். முள்ப் படுக்கையில் அமர்ந்தவன் நிலை தான் பிரதமர் மோடிக்கு! அமெரிக்காவிடம் நேசக்கரம் நீட்டினால் ரஷ்யாவுடனான நட்பு நெருக்கத்தை இழந்துவிடும் அபாயமும் இருந்தது.

ஆனால் ரஷ்யாவுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் தொடரும் என்று வெளிப்படையாகவே இந்தியா அறிவித்து வருகிறது. இதை ஏற்றுக்கொள்ள வெளியேற இருக்கும் டிரம்ப் அரசு தயாராகவும் இருந்தது.

இப்படி பல்வேறு அரசியல் சிக்கல்களை 2021 சமாளிக்க பிரதமர் மோடி தயாராக வேண்டும்.

உரிமைக்குரல் எழுப்பிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

நம் தமிழகத்திலும் எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட அண்ணா திமுக அரசு தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.

நீர் மேலாண்மை, விவசாயிகளின் நலன் காப்பதில் அக்கறை, நலிந்த கலைஞர்களுக்கு உதவி கரம் நீட்டுவது, கல்வித் துறையின் வளர்ச்சிக்கு உதவும் பல்வேறு நவீன யுத்திகள், கிராமப்புற ஏழை மாணவர்கள் வாழ்வில் உயர்வுகள் காண பல்வேறு திட்டங்கள் அறிவித்து அவற்றை நடைமுறைப்படுத்தியும் வருகிறார்.

அரசுப் பள்ளிகளில் முற்றிலும் படித்த மாணவர்களுக்கு விசேஷமாக 7.5 சதவிகித ஒதுக்கீட்டை பெற உரிமைக் குரல் கொடுத்தார், அதை வெற்றிகரமாக பெற்றும்விட்டார். அரசுப் பள்ளி மாணவமாணவிகளை மருத்துவராக்கி மக்கள் மனதில் மறக்க முடியாத இடத்தையும் பெற்று விட்டார்.

அதை நடப்பாண்டிலேயே நடைமுறைப்படுத்திய சாமர்த்தியம் அவரது அரசியல் அனுபவத்தின் முதிர்ச்சியை காட்டுகிறது. ஆட்சி செய்யும் திறனில் ‘ஜெயலிதாவின் ஜெட் வேகமும்’ தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சாதனையில்வெளிப்பட்டது.

மருத்துவ வசதிகளில் முன்னணி

தமிழகத்தில் கொரோனா தொற்று நுழைந்து விடக்கூடாது என்று ஆரம்பம் முதலே கடுமையான சட்டதிட்டங்களை அமல்படுத்தினார்.

கோவிட் 19 வைரஸ் தாக்கத்தை சோதிக்கச் செய்த ஏற்பாட்டால் தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைவருக்கும் மிக குறைந்த செலவில்யில் சோதனை செய்ய முடிந்தது.

பாதிப்பு அடைந்தவர்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சைகள் பெற விரிவான ஏற்பாடுகளும் செய்தார்.

ஒரு கட்டத்தில் அரசு மருத்துமனைகளில் இடமில்லாத நிலை உருவாகிய போது தனியார் மருத்துவமனைகள் இது அதிக கட்டண வசூலில் ஈடுபடுவதை கண்டு உடனே விலை நிர்ணயத்தை அரசு அறிவித்து எல்லா மருத்துவமனைகளையும் அந்த கட்டண வட்டத்திற்குள் மட்டுமே இருக்க வைத்தார்.

பலர் கொரோனாத் தொற்றின் பாதிப்பால் இறந்தவர்களின் உடலில் இருந்து மீண்டும் புதுப்பித்து எழுந்து தொற்று சூறாவளியாய் தொடரும் அபாயத்தை அதன் கொம்பை பிடித்து அடக்கும் விர தீரத்தை வெளிப்படுத்தினார்.

ஒரு மூத்த போலீஸ் அதிகாரி, ஒரு மாநகராட்சி அதிகாரி, மருத்துவ ஆம்புலன்ஸ் வசதியுடன் உடனுக்குடன் ஈமகாரியங்களை நடத்திவிட செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஏற்பாடு அதிசயிக்க வைத்தது.

அந்தத் தருணத்தில் குடும்பத்தாரும் நட்பு வட்டமும் முகத்தை கூட பார்க்க முடியாமல் இப்படி ‘அனாதை பிணமாக’ கொண்டு செல்கிறார்களே என கதறிய போது மனம் கசிந்தது. ஆனால் தமிழ் அரசின் உறுதியான இரும்புக்கர நடவடிக்கைகளால் தமிழக மக்கள் நலன் பாதுகாக்கப்பட்டது தான் உண்மை.

அண்ணா திமுக அரசியல் தலைவர்களையும் அமைச்சர்களையும் அரசு அதிகாரிகளையும் தமிழகம் நன்றியோடு நினைத்துப் பார்த்தபடி புதுவருட பிறப்பை வரவேற்கிறது.

2020 விடைபெறுகையில் அதன் நடப்புகளை புரட்டிப் பார்க்கும் போது பல்வேறு கசப்பான நினைவுகள் மேலோங்கினாலும் மனிதத்துவம் வெளிப்பட்டதை வரலாறு என்றும் மறக்காது. அந்தப் பட்டியலில் ‘மக்கள் குரல்’ உங்களிடம் இவர்களின் சேவைகளை சுட்டிக்காட்டுவதில் பெருமையுடன் பூரிப்பும் அடைகிறது.

2020 நெருக்கடிகளில் நீந்தி எழுந்தோர் வரலாறு

2021 –ம் ஆண்டை எதிர்கொள்ள வழிகாட்டும்!

இன்றைய மனித இனம் தோன்றிய 20 லட்சம் ஆண்டுகளில் இயற்கையில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களையும் பெருந்தொற்று நோய்களையும் கடற்கோள்கள்களையும் , பூமியின் கண்டங்கள் திட்டு மாற்றங்களால் நிகழ்ந்த நில நடுக்கம் என அனைத்தையும் எதிர்கொண்டு அதில் தன்னை எப்படி தகவமைத்துக் கொள்வது என்பதை அறிந்து நிலை பெற்றதுதான். அதனால்தான் 1947–ல் உலக மக்கள் தொகை 250 கோடியில் இருந்து, 70 ஆண்டுகளில் 3 மடங்கு வளர்ந்து 780 கோடியாக இன்று வளர்ச்சி அடைந்துள்ளது.

அந்த வகையில், 2020–ல் ஏற்பட்ட கோவிட்-19 பெருந்தொற்று மனித இனத்திற்கு ஏற்பட்ட புதிய சவால் அல்ல. தொழில்நுட்பமும் அறிவியல் வளர்ச்சியும் உச்சம் தொட்டுள்ள இந்த காலகட்டத்தினால்தான் கோவிட் 19 கொரோனா தொற்றுத் தடுப்பூசிகள் ஓராண்டுக்குள் நடைமுறைக்கு வந்துள்ளது. அதேபோல் இதற்கு முன்னர் ஏற்பட்ட பிளேக், காலரா, பெரியம்மை, போலியோ போன்ற பெருந்தொற்றுகளைக் காட்டிலும் கொரோனா பலி எண்ணிக்கை குறைந்தும் உள்ளது.

இந்த நிலையில் 2020–ம் ஆண்டில் உலகில் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடிகளில் இருந்து மீண்டு நீந்திக் கரையேறி உள்ளார்கள். அதில் சிலர் சாதனை வரலாற்றிலும் இடம் பெற்றுள்ளனர்.

உலகில் லட்சக்கணக்கானோர் நெருக்கடிகளை வென்று சாதித்து இருப்பார்கள். அதில் நமது மக்கள் குரல் நாளிதழில் “2020: தடைகளை படிகளாக்கிய மாமணிகள்” என்ற தலைப்பில் 5 ஆளுமைகளைப் பற்றிய செய்திகளை வெளியிட்டு இருந்தோம்.

5 மாமணிகள்

கொரோனா நெருக்கடி சூழலில், இலக்கியத்தை செழுமைப்படுத்திய விஜிபி உலகத் தமிழ்ச்சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசம், கிரிக்கெட் விளையாட்டில் உலகத்தின் கவனத்தை தன்பக்கம் திருப்பிய யார்க்கர் நடராஜன், கோவிட்-19 சூழலில் எளியவர்களை கைதூக்கி விட ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் கொடையாக அளித்த மெக்கன்சி ஸ்காட், கொரோனா தொற்றுச் சூழலில் 1 லட்சத்துக்கும் மேலான மக்களுக்கு எதிர்ப்பாற்றல் ஓமியோபதி மருந்துகளை இலவசமாக கொடுத்த டாக்டர் ஜெயக்குமார், எளிய பின்புலத்தில் இருந்து அரசியலுக்கு வந்து, கோவிட்-19 சூழலிலும் சிறந்த நிர்வாகம் கொடுத்த பின்லாந்தின் இளம்பெண் சன்னா மரின் ஆகியோரை பாராட்டும் விதமாக செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இலக்கியத்தில் ஒளிர்ந்த மாமணி

இதில் தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் தனது 84 வயதிலும் கொரோனா பெருந்தொற்று என முடங்கிக் கிடக்காமல் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கினார் என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாகவே தொழிலதிபர்கள் தமிழ் தொண்டில் மொழியின் செழிப்புக்காக பாடுபடுவது அரிது. ஆனால் வி.ஜி.சந்தோசம் சற்று மாறுபாடானவர். உலகின் பல நாடுகளில் 50–க்கும் மேற்பட்ட திருவள்ளுவர் சிலைகளை நிறுவி, உலகப் பொதுமறை திருக்குறளை உலக மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.

கொரோனா சூழலிலும் உலகின் பல்வேறு இலக்கிய ஆளுமைகளை ஒருங்கிணைத்து வாரம் 3 இலக்கிய கூட்டங்கள் என இணைய வழியில் 60 கூட்டங்களை நடத்துகிறார். இவற்றில் திரைப்பிரபலம், அரசியல் பிரபலம், இலக்கிய பிரபலம் என பல்வேறு தரப்பிலும் இருந்து சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் வலைக்காட்சி (யூடியூப் சேனல்) மட்டுமின்றி, அமெரிக்கா, மலேசியா நாடுகளின் 4 சேனல்களும் அதனை நேரடி ஒலி, ஒளிபரப்பு செய்தது. சராசரியாக ஒரு இலக்கிய கூட்டத்தில் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். உச்சஅளவாக, 1 லட்சத்து 85 ஆயிரம் பேர் ஒரு இணைய கூட்டத்தில் மட்டும் கலந்து கொண்டனர். இத்தனை கூட்டங்களையும் தொய்வின்றி ஒருங்கிணைத்து நடத்தி இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறார்.

விளையாட்டில் ஒளிர்ந்த மாமணி

‘யார்க்கர் நடராஜன்’- என்று இன்று கிரிக்கெட் உலகில் அறியப்பட்டாலும் எனது ஹீரோ என கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் புகழ்ந்து கூறுமளவுக்கு உயர்ந்திருந்தாலும் அவருடைய பின்புலமும் பொருளாதார சூழலும் மிக மிக அடித்தட்டில் இருந்ததை மறந்து விடக்கூடாது. சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி என்ற சிற்றூரில் பிறந்து உணவுக்கே சிரப்படும் சூழலில் நண்பர் உதவியோடு கிரிக்கெட்டில் நுழைகிறார். சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது என்பதுபோல் தமிழ்நாடு அணிக்காக விளையாடும் போது, பந்து வீசும் முறை சரியானது அல்ல என்று நிராகரிக்கப்படுகிறார்.

தொடர் முயற்சியில் தன்னை சரிசெய்துகொண்டு ஐபிஎல் திரும்பியவர் சென்ற ஐபிஎல்-இல் பஞ்சாப் அணியில் விளையாடி கவனம் ஈர்க்க முடியவில்லை. மீண்டும் நடப்பாண்டில் சன் ரைசர்ஸ் அணி கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி 16 போட்டியில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியிலும் இடம் பெற்று முதல் ஆட்டத்திலேயே ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெல்ல காரணமாக இருந்தார். அவருடைய மன உறுதியும் விடாமுயற்சியும் எளிய கிராமப்புற மாணவர்களுக்கு உந்துதலை அளிக்கக்கூடியது என்றால் மிகையில்லை.

கொடையால் ஒளிர்ந்த மாமணி

‘மெக்கன்சி ஸ்காட்’: அவர் வெளியிட்ட 384 ways to help என்று கட்டுரையால் உலக பணக்காரர்களையும் திரும்பிப் பார்க்க வைத்து நாணம் கொள்ள வைத்த கொடையாளி. உலகின் முதல்நிலை பணக்காரரான ஜெப் பெசோஸ்-இன் மனைவியான மெக்கன்சி, தனது கணவரிடம் இருந்து ஓராண்டுக்கு முன், கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து பெறுகிறார். தனக்கு சேர வேண்டிய பங்குகளை பெற்று உலகின் 18 வது பணக்காரராக விளங்கினாலும் சொத்து சேர்ப்பதில் உள்ள ஈடுபாட்டை காட்டிலும் தன்னிடம் உள்ள சொத்துகளை, இல்லாதவர்களுக்கும் வாழ்வில் இயலாதவர்களுக்கும் கொடுத்து கை தூக்கி விட முடிவு செய்கிறார்.

அதற்காக செயல்படும் தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.12 ஆயிரம் கோடிகளுக்கு மேல் அள்ளிக் கொடுக்கிறார். அதைத்தொடர்ந்து கொரோனா பேரிடரை எதிர்கொள்ள முடியாத மக்களுக்கு கல்வி, உணவு, சுகாரதார சேவைகளுக்காக 384 தொண்டு நிறுவனங்களை தேர்வு செய்து இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 30 ஆயிரம் கோடியை 4 மாதங்களில் வழங்குகிறார். அதோடு 384 ways to help என்ற கட்டுரையையும் இணையத்தில் வெளியிடுகிறார். உலகம் முழுக்க அந்த கட்டுரை பேசுபொருளாகிறது. தான் சேர்க்கும் சொத்து தனக்கு மட்டுமே அல்ல; தனது சக மனிதனுக்கும் பயன்பட வேண்டும் என்பதை, அனைத்து மக்களுக்கும் குறிப்பாக பெரும் செல்வந்தர்களுக்கும் உணர்த்தி உலகின் பாராட்டுகளை பெற்றார்.

மருத்துவ சேவையில் மாமணி

‘ஓமியோபதி மருத்துவர் ஜெயக்குமார்’: நாட்டில் எத்தனையோ புகழ்பெற்ற மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால், நெருக்கடியான சூழலில் ஒருவர் உதவும்போதுதான் உள்ளூர் மருத்துவர் கூட ஊரறிந்த மருத்துவராக முடியும். அதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் ஜெயக்குமார். சென்னை ஆதம்பாக்கம் பகுதியின் ஒரு தெருவில் மதன் ஓமியோபதி கிளினிக்கை பல ஆண்டுகளாக நடத்தி வந்தவர்தான். ஆனாலும் ஆதம்பாக்கம் கடந்து யாருக்கும் தெரிய வாய்ப்பில்லாமல்தான் இருந்தார்.

கொரோனா சூழலில், பல மருத்துவர்களும் நமக்கேன் வம்பு என்று மருத்துவமனைகளையே மூடிவிட்டு ஒதுங்கிக்கொண்ட சூழலில் நோய் எதிர்ப்பாற்றலுக்கான ஆர்சானிக் ஆல்ப் 30 எனும் ஓமியோபதி மருந்தை இலவசமாக தெருத் தெருவாக சரியான திட்டமிடலுடன் வழங்கினார். காவல் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள் என முன் கள பணியாளர்கள், பொதுமக்கள் என 1 லட்சத்த 10 ஆயிரம் பேருக்கு 4 மாத காலம் தொடர்ந்து வழங்கினார். இதனையறிந்த புதுவை முதல்வர், இவரை அழைத்து, யோசனைகள் வழிமுறைகளை கேட்டு புதுவையிலும் அந்த திட்டத்தை செயல்படுத்தினார். சக மனிதனை பற்றி சிந்தித்து சேவை செய்தால் தானும் உயர முடியும் என்பதற்கு இவர் நல்ல எடுத்துக்காட்டு எனலாம்.

அரசியலில் ஒளிர்ந்த மாமணி

பின்லாந்து பிரதமர் ‘சன்னா மரின்’: உலக சுகாதார நிறுவனம் கோவிட்-19 பெருந்தொற்று என அறிவித்த சில நாட்களில் பின்லாந்து நாட்டில் ஊடகங்களின் எதிர்ப்புக்கு இடையிலும் அவசர சட்டத்தை அமல்படுத்தி, ஒவ்வொன்றுக்கும் ஒரு குழுவை நியமித்து தொற்றை கட்டுப்படுத்தினார். இங்கிலாந்தில் 10 லட்சம் பேரில் 600 பேர் பலியான நிலையில் பின்லாந்தில் 10 லட்சம் பேரில் 60 பேர் மட்டுமே பலியானார்கள். அந்த அளவுக்கு திட்டமிட்டு, 5 கட்சிகள் கொண்ட கூட்டு அமைச்சரவையின் தலைவராக இருந்தும் சாதித்தார் இளம் பெண் பிரதமரான சன்னா மரின்.

பின்லாந்து தலைநகருக்கு வருவது குறித்தே எண்ணிப்பார்க்க முடியாத ஏழ்மை குடும்பத்தில் இருந்து அரசியலில் நுழைந்து இன்று 5 கட்சிகள் இணைந்து ஆளும் பின்லாந்தின் சிறந்த பிரதமராக பெயரெடுத்துள்ளார். பிபிசியின் 2020 ஆம் ஆண்டின் உலகின் ஆளுமை மிக்க 100 பெண்கள் பட்டிலில் இவரும் ஒருவர். தன் வாழ்க்கை சூழலில இருந்தும், உடன் வாழும் மனிதர்களிடம், அவர்களின் தேவைகளை கேட்டு அறிந்து செயல்பட்டால் அரசியலிலும் சாதிக்கலாம். அதற்கு எந்த தடையும் இருக்காது என்பதை உலகுக்கு சொல்கிறார் சன்னா மரின்.

இப்படி பல இன்னல்களுக்கிடையே 2020–ல் சிரமங்கள் எனும் படிக்கட்டில் நிலை தடுமாறாமல் நிதானத்துடன் ஏறுகையில் பலரும் கூடவே பயணிக்க உதவியவர்கள் பலர் உண்டு. அந்த சாமானியனுக்கு ‘மக்கள் குரல்’, ‘டிரினிட்டி மிரர்’ பத்திரிக்கை குழுமம் மனம் திறந்து வாழ்த்தி நீங்களும் ‘மாமணிகள்’ என்று புகழ்ந்து வணங்குகிறது. ‘இவர் போல யார் என்று ஊர் சொல்ல வாழ்ந்தவர்கள் நீங்கள்’ உங்கள் நல்ல எண்ண செயல்களால் சமுதாயமே ஆரோக்கியமாய் தலைநிமிர்ந்து நடைபோடுகிறது.

எங்கள் வாசகர்கள், விளம்பரதாரர்கள், எங்கள் வளர்ச்சியில் அபிமானம் கொண்டு என்றும் வாழ்த்தும் நல் நெஞ்சங்கள் அனைவருக்கும் நானும் எங்கள் இயக்குனர்கள், செய்தி பிரிவு குழுமமும் இணைந்து எங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *