செய்திகள்

திருப்பத்தூர் வாகன சோதனையில் ரூ.22 கோடி தங்க நகைகள் பறிமுதல்

திருப்பத்தூர், மார்ச் 12–

திருப்பத்தூர் அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஆவணங்கள் இருந்த போதிலும் வருமான வரி செலுத்தப்பட்டுள்ளதா என கேட்டு, 22 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் நகைகளைப் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் அடுத்த சின்ன கந்திலி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியே வந்த வேனை தடுத்து நிறுத்திச் சோதனையில் ஈடுபட்டனர்.

ஓசூரில் உள்ள நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த சரக்கு வாகனத்தில், ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் மூன்று பேர் வந்துள்ளனர். பறக்கும் படையினர் அந்த வாகனத்தைச் சோதனையிட்டதில் அதில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பெட்டிகளில் வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வேனில் வந்தவர்களிடம் விசாரித்தபோது, தங்கத்தை மொத்தமாகக் கொள்முதல் செய்து கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் உள்ள நகைக் கடைகளுக்கு விற்பனை செய்ய எடுத்துச் செல்வதாகக் கூறி இருக்கின்றனர்.

ஆவணங்கள்

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் 22 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளைக் கொண்டு செல்வதற்கான ஆவணங்களைப் பெற்று பறக்கும் படையினர் ஆய்வு செய்துள்ளனர். இந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், ரூ. 22 கோடி மதிப்பிலான தங்கம் எடுத்துச் செல்வதற்கு வருமான வரி செலுத்தப்பட்டதா என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து வருமான வரித்துறைக்குத் தகவல் தெரிவித்து, வாகனத்தைப் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், ஆட்சியர் அலுவலகத்தில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் நிறுத்தி வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *