செய்திகள்

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.972 கோடியில் பணப்பலன் வழங்க அரசாணை

சென்னை, டிச.22–

அரசு போக்குவரத்து கழகங்களில் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.972.43 கோடியில் பணப் பலன்களை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1.30 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். 2,500 ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உட்பட சுமார் 4,000 பேர் ஆண்டுதோறும் ஓய்வு பெறுகின்றனர். கடந்த 2019 ஏப்ரல் முதல் கடந்த ஏப்ரல் வரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்றுள்ளனர்.அவர்களுக்கு ஓய்வுகால பணப்பலன்கள் இன்னும் வழங்கப்படவில்லை. சமீபத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப் பலன்கள் வழங்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, இதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி, கடந்த 2019 ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப் பலன்களை வழங்க மொத்தம் ரூ.1,555.57 கோடி தேவை. இதற்கிடையே, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு மொத்தம் ரூ.972.43 கோடியில் பணப் பலன்கள் வழங்கப்பட உள்ளது. ஏற்கெனவே, 2018 ஏப்ரல் முதல் 2019 மார்ச் வரை ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.1,093 கோடியில் பணப் பலன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *