சினிமா

“வயதாகி விட்டது என்று சுருண்டு விடாதே…!’’ எஸ்.பி.முத்துராமனுக்கு புத்தி சொன்ன ‘ஞானச்செருக்கு’!

Spread the love

“ஞானச்செருக்கு என்கிற இந்தப் படம் படைப்பாளர்களின் செருக்கு என்றுதான் சொல்வேன். இந்த செருக்கு எல்லாம் எங்களுக்கு இருந்தது இல்லை. ஆனால் இந்த பையன்களுக்கு (டைரக்டர் தரணி ராஜேந்திரன், தயாரிப்பாளர் செல்வராம், வெங்கடேஷ்) இருக்கிறது. இந்த படத்தின் கதைநாயகன் அதாவது வீர சந்தானம் நடித்துள்ள கதாபாத்திரம் இயக்குநராகவும் நடிகராகவும் இருந்து வெற்றி பெற்று பின்னர் ஓய்வு பெற்றவர். ஓய்வுபெற்ற பின்பும் நான் சும்மா இருக்க வேண்டுமா என நினைத்து ஏதாவது சாதிக்க வேண்டும் என லட்சியத்துடன் புறப்பட்டு தனது துறையில் மீண்டும் சாதிப்பது தான் இந்த படத்தின் கதை.

இங்கு எல்லோரும் பேசும்போது தலைமுறை இடைவெளி பற்றி சொன்னார்கள். எனக்கு இப்போது பிறந்த தேதிப்படி 85 வயதாகிறது. உடல் ஆரோக்கியத்தின் படி எனக்கு வயது 55. என் மனதின் படி வயது 35. இந்த இளைய தலைமுறை படைப்பாளிகளை பார்க்கும்போது வந்த சந்தோசத்தில் என் வயது 18 ஆகிவிட்டது.

இந்தப் படத்தைப் பார்த்தபிறகு, இதில் நடித்துள்ள வீர சந்தானத்தை பார்த்த பிறகு மீண்டும் ஒரு முறை வரவேண்டும் என்கிற எண்ணம் எனக்கு ஏற்பட்டுள்ளது. வயதாகிவிட்டது என்று சுருண்டு படுத்து விடாதே மீண்டும் எழுந்து செயல்படு என தூண்டும் விதமாக இந்த படத்தின் கருத்து அமைந்திருக்கிறது. இவர்கள் இன்று செய்யும கிராபிக்ஸ் வேலைகளை எல்லாம் நான் அன்றே செய்துவிட்டேன். அப்படியென்றால் இப்போது கிராபிக்ஸை வைத்துக்கொண்டு நான் எந்த அளவிற்கு வேலை செய்வேன்..? ஏதோ போனால் போகிறது என விட்டு வைத்திருக்கிறோம். ஆனால் இந்த படம் மீண்டும் என்னை உற்சாகமாக வேலை செய்யும் இலட்சியத்திற்கு தூண்டியுள்ளது” என்று டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

* ‘ஞானச்செருக்கு’ படத்தை பார்த்த பாரதிராஜா, ‘‘நான் எடுக்க வேண்டிய படத்தை எடுத்திருக்கிறாய்’’ என இயக்குனர் தரணி ராசேந்திரனை பாராட்டினார். அது தான் இந்த படத்தின் வெற்றி, இந்த முப்பது வயது இளைஞர், பாரதிராஜா, எஸ்.பி. முத்துராமன் போன்ற முதுபெரும் இயக்குனர்களின் சிந்தனைக்கு மாறி அவர்கள் நிலையில் இருந்து சிந்தித்து இந்த படத்தை எடுத்திருக்கிறார். மிகச்சிறந்த படைப்பாளிக்கு வெற்றி தோல்வி ஒரு பொருட்டே அல்ல.

சில படங்களைப் பார்க்கும் போது இந்த படத்தில் ஒன்றுமே இல்லை, இதெல்லாம் எப்படி ஓடுகிறது என கேள்வி எழும். ரஜினிகாந்த் சினிமாவில் நுழைந்தபோது அவரது படத்தை பார்த்தவர்கள் ஆள் பார்க்கவே கலராகவும் இல்லை, எம்ஜிஆர் மாதிரி பளபளப்பாகவும் இல்லை. ஆனால் படம் எப்படி ஓடுகிறது என்கிற கேள்வி எழுந்தது.

ஆனால் ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோர் இதையெல்லாம் மாற்றினார்கள். தரணி ராஜேந்திரன் இந்த இளம் வயதில் மிகுந்த முதிர்ச்சியடைந்த பார்வையை கொண்டிருக்கிறார். அருமையான ஒரு கதையை கருப்பொருளாக தேர்வு செய்திருக்கிறார். இளம் இயக்குனர்கள் எதிர்பார்க்காத ஒன்றை எண்ணிப்பார்த்து முற்போக்கு சிந்தனையுடன் இதை அணுகியிருக்கிறார்.

கடைசி பெஞ்சு மாணவர்களை கவனிப்பது யார்?

“நல்லவர்களை கொண்டாட மறுக்கும் இந்த உலகம் அதிகாரத்தில் உயர்ந்தவர்களை, பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களை கொண்டாடுகிறது. ஆனால் இந்தப்படம் நமக்காக போராடிய ஒருவரை கொண்டாடும் படமாக உருவாகியிருக்கிறது. முதல் பெஞ்சில் இருக்கும் மாணவர்களையே கொண்டாடிக்கொண்டிருந்தால் கடைசியில் இருப்பவர்களை கவனிப்பது யார்.? அதனால் வீர சந்தானம் போன்ற மனிதர்களைப் பற்றி மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால் இதுபோன்ற படங்களை அரசாங்கமே தயாரிக்கவேண்டும். அதுதான் சிறந்தது” என தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கையையும் வைத்தார் இயக்குநர் சுப்பிரமணிய சிவா.

* லயோலா கல்லூரி மாணவர்களுக்காக வேட்டி என்கிற ஒரு சுதந்திர போராட்ட தியாகி பற்றிய சிறுகதையை குறும்படமாக எடுக்க காஞ்சிபுரம் சென்றிருந்தேன். அந்த சமயத்தில் அந்த கதாபாத்திரத்தில் வீர சந்தானம் நடித்திருந்தார். வீட்டை விட்டு வெளியே சென்றாலே குளிர் ஜுரம் வந்துவிடும் என்கிற நிலையில் இருந்த அவரை இந்த குறும்படத்திற்காக குளத்தில் மூழ்கி குளிக்க வைத்து படமாக்கினேன். இதில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதே இறுதிக்காட்சியில் நான் எழுதிய ஒரு வசனத்திற்காகத்தான்.

அந்த அளவிற்கு இந்த சமூகத்திற்கு ஒரு படைப்பு தேவைப்படுகிறது என்றால் தனது உடல்நிலையை கூட கவனத்தில் கொள்ளாமல் கலையை நேசித்தவர் வீர சந்தானம் என்றார் இயக்குனர் கவுதமன்.

* “ஞானச்செருக்கு படம் மூலமாக ஓவியர் வீரசந்தானம் மீண்டும் பிறந்தது போன்ற உணர்வை நீங்கள் உணரலாம். இந்த படம் வெளியான பின்பு வீரசந்தானம் என்பவர் யாரென எல்லாராலும் தேடப்படுவார். இப்படிப்பட்ட ஒரு ஆளுமை கொண்ட நபரை தெரிந்து கொள்ளாமலேயே போய்விட்டோம் என தமிழ் சமூகமே வெட்கப்படும் என்றார் இயக்குநர் தரணி ராசேந்திரன்.

* * *

பாணியின் தன்னாட்சி குடில் படைப்பு, பார்ச்சூன் பிக்சர்ஸ் சார்பில் செல்வராம், வெங்கடேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம்: ‘ஞானச்செருக்கு’. இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கி ஓவியர் வீரசந்தானம் கதையின் நாயகனாக நடித்துள்ளது. படவிழாக்களில் 40 சர்வதேச அங்கீகாரங்களை பெற்றுள்ளது. 7 சர்வதேச விருதுகளையும் தட்டியிருக்கிறது.

* * *

படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள் அனைவருமே சம்பளம் எதுவும் வாங்கிக் கொள்ளாமலே நடித்தனர். ஓவியர் வீரசந்தானம் கூட ஒரு கட்டத்தில் எனக்கு ஏதாவது சம்பளம் கொடுக்க நினைத்திருந்தால் அதையும் இந்த படத்திற்காக பயன்படுத்திக் கொள் என்று பெருந்தன்மையுடன் டைரக்டரிடம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *