செய்திகள்

காஞ்சீபுரம் நகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்கும் குடும்பத்தலைவிகளுக்கு பரிசு: ஆணையர் மகேஸ்வரி வழங்கினார்

Spread the love

காஞ்சீபுரம், ஜன. 9-–

காஞ்சீபுரத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்கும் குடும்பத்தலைவிகளில் வாரந்தோறும் 12 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை நகராட்சி நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது.

காஞ்சீபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை இந்தியா மற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா மற்றும் நகராட்சி ஆணையாளர் ரா.மகேஸ்வரி ஆகியோரது வேண்டுகோளின்படி, குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கும் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்கும் குடும்பத்தலைவிகளைத் தேர்வு செய்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், நகரை சுகாதாரமான நகராக மாற்றும் நோக்கிலும் வாரந்தோறும் புதன்கிழமை அக்குடும்பத் தலைவிகளுக்கு வீட்டு உபயோகப் பொருட்களைப் பரிசாக நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.

மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைத் தரம் பிரித்துக் கொடுக்கும் குடும்பத்தலைவிகளின் பெயரை நகராட்சி அதிகாரிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்கின்றனர். இத்திட்டம் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருப்பதுடன் நகரமும் தூய்மை நகரமாக மாறி வருகிறது.

ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை குலுக்கல் முறையில் பரிசுக்கு உரியவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் ரா.மகேஸ்வரி ஊக்கப்பரிசுகளை வழங்குகிறார். இதனடிப்படையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சங்குபாணி விநாயகர் கோவில் தெரு, வெள்ளைக்குளம் தெரு, லிங்கப்பன் தெரு, பதனப்பாளையம் தெரு, மாண்டுகனீஸ்வரர் தெரு, பாக்ரா பேட்டை உள்ளிட்ட நகராட்சியின் 6 கோட்டங்களிலும் ஒரு கோட்டத்துக்கு இருவர் வீதம் மொத்தம் 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நகராட்சி ஆணையர் ரா.மகேஸ்வரி ஊக்கப்பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் பா.முத்து மற்றும் நகராட்சி சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *