செய்திகள்

குப்பை தொட்டியிலிருந்து குப்பைகளை லாரிக்கு ஏற்றும்போது சிதறும் குப்பைகளை அகற்ற வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தல்

Spread the love

சென்னை, ஜன. 29–

குப்பை தொட்டிகளிலிருந்து குப்பைகளை லாரிக்கும் ஏற்றும்போது சிதறும் குப்பைகளை முழுமையாக அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தி உள்ளார்.

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக நகர்ப்புறப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த மாநில அளவிலான பணி ஆய்வுக்கூட்டம் ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகை கலையரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை தேவைகளான குடிநீர், மின்விளக்குகள், சாலைகள் அமைக்கும் பணிகள், திடக்கழிவு மேலாண்மை, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் கொசு ஒழிப்பு போன்ற பணிகள் குறித்தும், அம்ரூத் திட்டம், சீர்மிகு நகரத் திட்டம் மற்றும் பல்வேறு பன்னாட்டு வங்கிகளின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.

குப்பைகள் சிதற கூடாது

கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:–

நகர்ப்புற பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து நாள்தோறும் குப்பைகளை சேகரித்து சுத்தம் செய்தல் அன்றாட அடிப்படை பணியாகும். திடக்கழிவுகளை குப்பைத் தொட்டிகளிலிருந்து வாகனங்களில் மாற்றி கொண்டு செல்லும்பொழுது, அவ்விடங்களில் சிதறக்கூடிய குப்பைகளை சரிவர எடுத்து மீண்டும் குப்பைத் தொட்டியில் போட வேண்டும். எனவே, இப்பொருள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இதில் கவனம் செலுத்தி குப்பைகளை கையாளுவதில் சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகளை இரவுநேரங்களில் சரியான நேரத்தில் ஒளிர செய்து, அதேபோன்று பகல் நேரங்களில் சரியான நேரத்தில் அணைக்கப்பட வேண்டும்.

நகர்ப்புறப் பகுதிகளில் பொதுமக்களின் தேவைக்கேற்ப நாள்தோறும் குடிநீரானது சென்னைக் குடிநீர் வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த நிலையிலும் கோடைக்காலத்தில் பொதுமக்களுக்கு அன்றாட தேவையான குடிநீர் சீராக வழங்கப்பட்டது. மேலும், குடிநீர் வழங்கும் பொழுது தண்ணீர் வீணாவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்கும் இடங்களில் குழாய் உடைப்பு போன்ற ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் உடனடியாக சரிசெய்ய வேண்டும் எனவும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நேரத்தில் நேரடியாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் போது அவர்களுக்கு நல்ல முறையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்து, அக்குறைகளை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிளாஸ்டிக் ஒழிப்பு

முதலமைச்சர் சட்டமன்ற பேரவையில் 1.1.2019 முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்படுவதாக அறிவித்தார். அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு அவர்களுக்கு தகுந்த அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தி அத்தகைய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் தடைசெய்ய வேண்டும். இந்தத் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் செயல்படுத்தப்பட்டு, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் நம்முடைய தமிழ்நாடு மாநிலம் முன்னோடியாக உள்ளது.

மறைந்த முதலமைச்சர் அம்மாவினால் அறிவிக்கப்பட்டு சட்டவடிவமாக மாற்றப்பட்ட இல்லந்தோறும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கும் திட்டத்தை முதலமைச்சரின் உத்தரவின்பேரில், உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சரியாக பராமரிக்கப்படுகின்றனவா என உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் மிகவும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து அலுவலர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்பணிகள் இதோடு நின்று விடாமல் தொடர்ந்து கவனம் செலுத்தி ஒருதுளி மழைநீரும் வீணாகாமல் சேகரிக்க வேண்டும்.

மேலும், முதலமைச்சர் சட்டப்பேரவையின் போது 110 விதியின் கீழ் அறிவித்த திட்டப்பணிகள் மற்றும் மானியக் கோரிக்கையின் போது அறிவித்த திட்டப்பணிகளை எவ்வித தொய்வும் இன்றி விரைந்து நிறைவேற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிதி சேவை நிறுவனத்தின் தலைவர்/மேலாண்மை இயக்குநர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையர் கா.பாஸ்கரன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் த.ந.ஹரிஹரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.என்.மகேஸ்வரன், பேரூராட்சிகளின் இயக்குநர் எஸ்.பழனிசாமி, பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர்கள் பி.குமாரவேல் பாண்டியன், பி.மதுசுதன் ரெட்டி, டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ், பி.என்.ஸ்ரீதர், பி.ஆகாஷ், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநர் டாக்டர் த.பிரபுசங்கர், மாநகராட்சி ஆணையாளர்கள், தலைமைப் பொறியாளர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *