செய்திகள்

சென்னையில் வாட்ஸ் அப் குழு அமைத்து ‘புல்லட்’ மோட்டார் சைக்கிள் திருடிய கும்பல் கைது

சென்னை, அக். 16–

சென்னையில் வாட்ஸ் அப் குழு அமைத்து புல்லட் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் ராயல் என்பீல்டு ‘புல்லட்’ மோட்டார் சைக்கிள் திருட்டு போவதாக புகார்கள் வந்தது. இதைத் தொடர்ந்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் தினகரன் மேற்பார்வையில் சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர் சுதாகர் ஆலோசனையின் பேரில், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தர்மராஜா வழிகாட்டுதலில் தனிப்படையினர் சப்–இன்ஸ்பெக்டர் சுதாகர் , தலைமை காவலர் சரவணகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார், வாகன திருட்டு வழக்கில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட முகமது சபியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் புல்லட் வாகன திருட்டில் முக்கிய குற்றவாளி அப்துல்லா என்ற செல்வகுமாரின் கூட்டாளிகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசித்ரா (குற்றபிரிவு) தலைமையில் கிழக்கு மண்டல தனிப்படையினர் முக்கிய குற்றவாளியான ஜமாலுதீன் மற்றும் சையது இப்ராஹிம் ஆகியோரை கைது செய்தனர்.

சையது இப்ராஹிம், அப்துல்லாஹ் இருவரும் சென்னை கோட்டை ரெயில் நிலையம் அருகில் செல்போன் கடை வைத்து ‘பிசினஸ் வாட்ஸ்அப் குழு’’ தொடங்கி உள்ளனர். அவனது கூட்டாளி அமீர் மற்றும் முல்லை இருவரையும் உணவு விநியோகிக்கும் பணியில் சேர்த்துவிட்டு நள்ளிரவில் திருட வேண்டிய வாகனங்களை அடையாளம் கண்டு வாட்ஸ் அப் குழுவில் தகவல் தெரிவித்து புதிய புல்லட் வண்டிகளை திருடியது தெரியவந்தது. இதைத் தொடரந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட ரூ. 51 லட்சம் மதிப்புடைய 26 புல்லட் மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *