செய்திகள் வாழ்வியல்

காந்தி 150

Spread the love

எள்ளுத் தாத்தாவை எப்படிப் பார்க்கிறீர்கள்?

காந்தி பற்றி பல பாட புத்தகங்களில் படிக்கமுடியும். அவரது அடுத்தடுத்த தலைமுறையினரைப் பற்றி ஊடகங்களில் தெரிந்துக் கொள்ளமுடியும். ஆனால் காந்தியின் ஐந்தாவது தலைமுறையைப் பற்றிய தகவல்களை பாடப் புத்தகங்களிலோ அல்லது வெறெந்த ஊடகங்களிலோ காணமுடியாது.

ஏனெனில் இவர்கள் ஊடகங்களின் வெளிச்சங்களுக்கு அப்பாற்பட்டு, இயல்பான எளிய வாழ்க்கையை வாழ்ந்துவருகின்றனர். எளிமையாக, மகிழ்ச்சியுடன் நிறைவான வாழ்க்கையை இவர்கள் வாழ்கின்றனர்.

காந்தியின் பேத்தியின் பேரக்குழந்தைகளான மூவருக்கும் சில விஷயங்கள் பொதுவானதாக இருக்கின்றன: அவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள், நன்றாக பேசுகிறார்கள். காந்தியின் குடும்ப வாரிசுகள் என்றாலும், அதை தவறாக பயன்படுத்துவதில்லை. நேர்மையான காரியத்தை செய்வதற்கு ஒருபோதும் அச்சப்படுவதில்லை.

27 வயது கபீர் துபேலியா, டர்பனில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றுகிறார். கபீரை விட 10 வயது மூத்தவரான மிஷா துபேலியா, உள்ளூர் வானொலி நிலையத்தில் தகவல் தொடர்பு நிர்வாகியாக பணியாற்றுகிறார். இவர்கள் இருவரும், கீர்த்தி மேனனின் சகோதரர் சதீஷின் பிள்ளைகள்.

இவர்களின் ஒன்று விட்ட சகோதரி சுனீதா மேனன் கீர்த்தி மேனனின் ஒரே வாரிசு. இவர் பத்திரிகையாளராக பணிபுரிகிறார். மூக்கு கண்ணாடி அணிந்து குறுந்தாடி வைத்திருக்கும் கபீரை பார்த்தால் மெத்தப் படித்தவர் போல் தோன்றுவார். மிஷா பார்ப்பதற்கு மிகவும் வயது குறைவானவராக தெரிகிறார். ஆனால், ஆழ்ந்த புரிதல் கொண்டவர். சுனீதா தனது வேலையில் தீவிர ஈடுபாடு கொண்டவர்.

இவர்கள் தங்களை இந்தியர்களாக உணர்கிறார்களா அல்லது தென்னாப்பிரிக்க குடிமக்களாக உணர்கிறார்களா? இந்த கேள்விக்கு, உடனே பதிலளித்த கபீர், “நாங்கள் தென்னாபிரிக்கர்கள்” என்று இயல்பாக கூறுகிறார்.

மிஷா மற்றும் சுனீதாவின் கருத்துப்படி, அவர்கள் முதலில் தென்னாப்பிரிக்கர்கள், பிறகுதான் இந்திய வம்சாவழியினர். இவர்கள் மூவரும் காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் காந்தியின் வழித்தோன்றல்கள். 1914இல் தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தி இந்தியாவுக்கு திரும்பியபோது, மணிலாலும் தந்தையுடனே வந்துவிட்டார். ஆனால் காந்தி அவரை டர்பனுக்கு மீண்டும் திருப்பி அனுப்பிவிட்டார்.

1903ஆம் ஆண்டில் டர்பன் அருகே பீனிக்ஸ் செட்டில்மெண்ட் பகுதியில் ஆசிரமம் ஒன்றை உருவாக்கிய காந்தி, அங்கிருந்து “இண்டியன் ஒபீனியன்” என்ற பத்திரிகை ஒன்றை வெளியிட்டார். 1920இல் அந்த பத்திரிகையின் ஆசிரியராக மணிலால் நியமிக்கப்பட்டார். 1954ஆம் ஆண்டு மணிலால் இறக்கும்வரை அந்த பொறுப்பை அவரே வகித்துவந்தார்.தங்கள் தாத்தா இந்தியாவின் தேசத்தந்தை என்று அழைக்கப்படுவதும், உலகம் முழுவதும், அஹிம்சை, சத்தியகிரகம் போன்ற சித்தாந்தங்களின் தலைவராகவும் அறியப்படுவதும் தங்களுக்கு பெருமையாக இருப்பதாக இந்த இளைஞர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *