சினிமா செய்திகள்

‘‘கானா பாட்டு அது காக்டெய்ல் மாதிரி; எல்லா மொழி வார்த்தையும் மிக்சான கலவை’’

சிரிப்பு மழையில் ‘ஏ 1’ படத்தின் மூலம் நனைய வைத்த கூட்டணி, மீண்டும் பிப்ரவரி 12-ம் தேதி நம்மை நனைய வைக்கவுள்ளது. அது, இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படம். இந்தப் படத்தின் ட்ரெய்லர், கானா பாடல்கள் என இணையத்தில் ட்ரெண்ட்டிங்கில் இருப்பதால் படக்குழுவினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

சந்தானம் பேசுகையில், ‘ஏ 1’ படமே ஜாலியாக பண்ண வேண்டும் என்ற மூடில் தான் இயக்குநர் ஜான்சனுடன் பணிபுரிந்தேன். அந்தப் படம் ஹிட்டானது. அடுத்து என்ன என்று நிறைய கதைகள் யோசித்தோம். அடுத்து நம்மளிடம் காமெடியைத் தான் எதிர்பார்ப்பார்கள் என்று இயக்குநர் ஜான்சனிடம் பேசி இந்தக் கதையை முடிவு செய்தோம்’ என்றார்.

பஸ்சுக்குள்ளே பாட்டு

‘இது ரொம்ப தனித்துவமான கதை. காமெடி அருமையாக வந்திருக்கிறது. எனக்காக அவருடைய அணியுடன் உட்கார்ந்து காமெடிக்காக உழைத்துள்ளார் இயக்குநர் ஜான்சன். நிறைய விஷயங்கள் எழுதி எழுதி இந்தப் படத்தின் வசனங்களை இறுதிச் செய்தார். ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் பார்ப்பதற்கு தான் அமைதியாக இருப்பார். அவரோடு இப்போது தான் முதலில் பணிபுரிகிறேன். சம்சா பாடலை முழுக்க பேருந்துக்குள்ளே எடுத்துள்ளோம். சாண்டி தான் இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களுக்கும் நடனம் அமைத்துள்ளார்’ என்றும் கூறினார்.

லோக்கலாக கானா பாடிக் கொண்டிருக்கும் ஒருவர் என்று கேரக்டர் பிக்ஸ் பண்ணிட்டோம். அப்போது வியாசர்பாடி, புளியந்தோப்பு, பாரிஸ் உள்ளிட்ட ஏரியாக்கள் தான் கானா பாட்டுக்கள் மிகவும் பிரபலம். அங்கு தான் ஹீரோ வீடு என்று முடிவு செய்தோம். அப்போது தான் பாரிஸ் ஜெயராஜ் என்று ரைமிங்காக நல்லாயிருக்கு என்று தலைப்பு வைத்தோம்.

கானா பாடகரைச் சுற்றியே கதை என்பதால், அந்தப் பாடல்களுடன் அமைத்தால் மட்டுமே நம்பகத்தன்மை இருக்கும். கானா பாட்டு பாடுபவர் கவிதை நடையுடன் பாடினால் அந்தக் கதாபாத்திரம் ஒட்டாது என்பது தான் காரணம். கானா என்பதே காக்டெய்ல் மாதிரி தான். அனைத்து மொழி வார்த்தைகளும் மிக்ஸ் செய்தது தான். அதற்கு தமிழில் அர்த்தம் சொல்ல முடியாது என்று விளக்கம் தந்தார் சந்தானம்.

உதயநிதி சார் அரசியலுக்கு போய்விட்டார் என்பதால், நீங்கள் எப்போது என்று கேட்கிறார்கள். ராஜ்யசபா எம்.பி சீட் கொடுத்தால் ஏதாவது பண்ணலாம் என்று இருக்கிறேன் என்றும் தமாஷாக கூறினார்.

300 ஆண்டாக கொண்டாடும் கானா

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசுகையில், ‘‘இந்த ஆல்பம் முழுக்கவே கானா பாடல்கள் தான். நம்மளுடைய நாட்டுப்புற இசை கானா தான். சுமார் 300 ஆண்டுகளாக அதைக் கொண்டாடியிருக்கிறோம். நம்முடைய பாரம்பரிய இசையை சினிமாவில் கொண்டு வர முடிந்தால் அதைவிட பெரிய விஷயம் எதுவுமே இல்லை. இந்தப் படத்தின் காட்சிகளுக்கு பின்னணி இசை அமைக்க தாமதம் ஆனது. ஏனென்றால், காட்சிகளைப் பார்த்து சிரித்துவிடுவேன். ஆகையால் ரொம்ப தாமதமானது. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்” என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *