நாடும் நடப்பும்

விளையாட்டுகள் தொடங்கியது

கோவிட் பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட பல துறைகளில் விளையாட்டுத்துறையும் ஒன்று. கடந்த ஆண்டின் ஊரடங்கு காரணமாக ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு ஒத்தி போடப்பட்டது.

ஆனால் ஜப்பானில் நடைபெற ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெறுவதாக தெரியவில்லை. காரணம் சமீபமாக ஜப்பானில் தொற்று எண்ணிக்கை அதிகரித்ததால் முழு ஊரடங்கு நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. மே மாதத்திற்குள் எல்லா கொரோனா சட்டத்திட்ட வரையறைகளும் நிர்மாணித்தாக வேண்டும்.

அதாவது பயிற்சி பெற விளையாட்டு வீரர்கள் வருவார்கள், கூடவே பயிற்சியாளர்களும் வருவார்கள் அல்லவா? அவர்களுக்கான தங்கும் வசதி, போக்குவரத்து ஏற்பாடுகள் எல்லாம் அறிவித்தாக வேண்டும். கொரோனா தற்காப்பு விதிமுறைகளின்படி சோதனைகள் செய்து கொண்டு பிறகு குறிப்பிட்ட நாட்களுக்கு தனிமையில் இருக்கவும் வேண்டும்.

பின்னர் பாதுகாப்பு கவசமாக ஓரு கட்டமைப்பை ஏற்படுத்தி அதற்குள் வெளியாட்கள் வரமுடியாத முறையை ஏற்படுத்தியாக வேண்டும். மேலும் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே செல்லவும் கூடாது!

இதையெல்லாம் அறிவித்து உரிய ஏற்பாடுகள் செய்ய ஜப்பானில் தற்போது நிலை சரியாக இல்லை. காரணம் ஊரடங்கு! மொத்தத்தில் ஒலிம்பிக் போட்டிகளை தள்ளிப் போடலாமே? என கேட்கலாம். ஆனால் ஒலிம்பிக் சட்டப்படி மீண்டும் தேதியை மாற்றிட வழியே இல்லையாம். ஆகவே இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் கிடையாது என்றே அறிவித்தாக வேண்டும்.

அடுத்ததாக 2022ல் குளிர்கால ஒலிம்பிக் சீனாவிலும் 2024 முழு ஒலிம்பிக்ஸ் பாரீஸ் நகரிலும் நடைபெறும். அதாவது இம்முறை கடும் பயிற்சியை மேற்கொண்ட பலருக்கு வேதனை தரும் செய்தி வெளிவருமோ? என்ற அச்சக் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் நம் நாட்டில் உணர்ச்சிப் பூர்வமாக குடும்பத்தாருடன் பார்த்து ரசிக்கப்படும் கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக சேப்பாக்கம் மைதானத்தில் முதல் போட்டியில் தோற்று விட்ட பிறகு இரண்டாவது டெஸ்டில் கடுமையாக விளையாடி போட்டித் தொடரை சமன் செய்துள்ளனர். இரண்டாவது போட்டியில் தலைப்புச் செய்தியாக இருந்தது தமிழக வீரர் அஸ்வினின் சதம் அடித்ததுடன் ஐந்து விக்கெட்டுகளை எடுத்தது தான்!

எட்டாவது ஆடக்காரராக களம் இறங்கி, 148 பந்துகளில் சதம் விளாசியது கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக இருந்தது.

அடுத்த இரண்டு டெஸ்ட் மேட்சுகளும் அகமதாபாத்தில் நடைபெறும். பிறகு ஒருநாள் போட்டிகளும் அங்கேயே நடைபெறும்.

மனமகிழ் சமாச்சாரத்தில் விளையாட்டுப் போட்டிகள் முன்னிலையில் இருப்பது அறிந்ததே. கடந்த ஆண்டில் பல முக்கியமான போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்களுக்கு பெரிய வருத்தம். மேலும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள விளையாட்டு வீரர்களுக்கும் தான்.

ஆனால் பரபரப்பான விளையாட்டுப் போட்டிகளை நடத்த எல்லா நாடுகளும் உரிய நடவடிக்கைகளை எடுத்து நடத்த ஆரம்பித்து இருப்பது கடும் பயிற்சியில் ஈடுபட்டு வரும் விளையாட்டு வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது. ஆனால் சமுதாய விலகலையும் முகக்கவசம் அணிவதையும் கட்டாயமாக்கி அவை கடைப்பிடிக்க வைப்பது மிக அவசியமான ஒன்றாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *