செய்திகள்

ரூ.13.37 கோடியில் சாலை பாதுகாப்பு திட்டங்கள்: எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி துவக்கி வைத்தனர்

* கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.8.60 கோடியில் தானியங்கி வேகக் கட்டுப்பாட்டு கருவிகள்

* 14 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்

ரூ.13.37 கோடியில் சாலை பாதுகாப்பு திட்டங்கள்

எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி துவக்கி வைத்தனர்

தமிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்பு பாதியாக குறைவு

சென்னை, பிப்.17–

தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ.13.37 கோடி சாலை பாதுகாப்பு திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை முதல் மாமல்லபுரம் வரை ரூ.8.60 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் ரூ.4.77 கோடி மதிப்பில் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சாலை பாதுகாப்பை மேம்படுத்த வாங்கப்பட்டுள்ள 14 நெடுஞ்சாலை ரோந்து வாகனம் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு சாதனங்கள், காஞ்சீபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை மையம் ஆகியவற்றின் தொடக்க விழா சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் சாலை பாதுகாப்பு திட்டங்களை மேடையில் இருந்தபடியே ரிமோட் கண்ட்ரோல் மூலம் தொடங்கி வைத்தனர்.

சாலை பாதுகாப்பு திட்டங்களை சிறந்த முறையில் நிறைவேற்றியதற்காக முதலமைச்சரின் சிறந்த பாதுகாப்பு விருதை சேலம் கலெக்டர் ராமன், தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவ், திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா மற்றும் நெல்லை போலீஸ் கமிஷனர் தீப் தோமர் ஆகியோருக்கு நிதின் கட்கரி வழங்கினார்.

விழாவில் நிதின் கட்கரி பேசும்போது கூறியதாவது:-

சாலை பாதுகாப்பில் தமிழகம் முன்னணி மாநிலமாக இருப்பதால் பிற மாநிலங்களும் தமிழகத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களை பின்பற்ற வேண்டும்.

சென்னை – பெங்களூரு பசுமை வழி சாலை

இந்தியாவில் சாலை விபத்துக்கான மருத்துவ காப்பீடு ஏழை மக்களை சென்றடைய முடியாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. நாட்டில் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியம்.

ஊரகப்பகுதிகளில் இருந்து நகரங்களை நோக்கி மக்கள் வருவதால் நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க ஊரகப்பகுதிகளில் தொழில்துறையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

சாலை போக்குவரத்து உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் அதே வேளையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடல் வழி போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை–பெங்களூரு பசுமை வழிச்சாலை அடுத்த 3 மாதங்களில் தொடங்க உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

எடப்பாடி பேச்சு

விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-

இந்தியாவில் நெடுஞ்சாலைகளுக்கென தனித்துறை உள்ள முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அம்மாவின் அரசு, திறனான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து அமைப்பினை உருவாக்குவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் பயனாக, நெடுஞ்சாலைத் துறையின் மூலம் 11,175 கி. மீ. மாநில நெடுஞ்சாலைகளும், 11,645 கி.மீ. மாவட்ட முக்கிய சாலைகளும், 38,311 கி.மீ. இதர மாவட்ட சாலைகளும், 1,472 கி. மீ. தேசிய நெடுஞ்சாலைகளும் ஆக மொத்தம் 62,603 கி.மீ. நீளமுள்ள சாலைகள் திறம்பட தமிழ்நாடு அரசால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

ஐந்து முனை திட்டம்

நெடுஞ்சாலைத்துறை மூலமாக சாலையின் பொறியியல் வடிவமைப்பை மேம்படுத்துதல்;

போக்குவரத்துத் துறை மூலமாக சாலை போக்குவரத்து வாகனங்களின் பாதுகாப்பு தரத்தை மேம்படுத்துதல்;

காவல் துறை மூலமாக சாலை போக்குவரத்து விதிகளை அமலாக்குதல்;

சுகாதாரத் துறை மூலமாக சாலை விபத்தில் காயமடைந்தவருக்கு உடனடியாக மருத்துவ உதவி கிடைக்கச் செய்தல்;

கல்வித் துறை மூலமாக சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என,

தமிழ்நாட்டில் சாலை விபத்துகளால் ஏற்படுகின்ற உயிரிழப்புகளைத் தவிர்க்க, சாலை விபத்துகளை தடுக்கும் ‘ஐந்து முனை திட்டம்’ மூலம் சிறப்பான பணிகள் செம்மையாகப் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசின் சாலை மேம்பாடு மற்றும் சீரமைப்புத் திட்டங்களின் கீழ் 2011 முதல் 2021 ஆம் ஆண்டு வரை, 55,892 கீ.மீ. நீளமுடைய சாலைகள், 2,541 சிறு பாலங்கள், 828 ஆற்றுப்பாலங்கள், 93 ரயில்வே மேம்பாலங்கள்,கீழ்பாலங்கள், வரையறுக்கப்பட்ட சுரங்கப்பாதை, 11 சாலை மேம்பாலங்கள், 2 பல்லடுக்கு மேம்பாலங்கள், 4 புறவழிச்சாலைப் பணிகள், 4,327 கி.மீ. நீளமுள்ள ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி சாலைகள் மற்றும் சாலைப் பாதுகாப்புப் பணிகள் புதியதாக கட்டமைக்கப்பட்டன. மேலும், 37,760 கி.மீ. நீளமுடைய சாலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன.

5121 சாலை பாதுகாப்பு பணிகள்

2014–15 முதல் 2020–21 வரை ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் வாயிலாக நெடுஞ்சாலைத் துறையில் சாலை பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 5,121 சாலை பாதுகாப்புப் பணிகள் 700 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து சாலைப் பாதுகாப்புப் பணிகளையும் மேற்பார்வை செய்து சீரிய முறையில் செயலாக்கம் செய்திட பிரத்தியேகமாக சாலை பாதுகாப்பு அலகு, 40 புதிய பணியிடங்களுடன் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் சாலை விபத்துக்களினால் உயிர் சேதம் ஏற்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் விபத்தைத் தவிர்ப்பதற்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அனைத்து மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளிலும் சாலை பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை ஐஐடி உடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுக்கு சாலை பாதுகாப்பு தணிக்கை பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சாலை விபத்து தரவு மேலாண்மை அமைப்பு முன்மாதிரியாக செயல்படுத்தப்பட்டு, விபத்து பகுதிகளை ஆய்வு செய்து துரித நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மத்திய தரைவழி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தால் ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவு திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு பரிசோதனை அடிப்படையில் 14 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் போக்குவரத்து, காவல், நெடுஞ்சாலை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.

உயிரிழப்பு பாதியாக குறைவு

சாலை பாதுகாப்பின் ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம் 2016ம் ஆண்டு முதல் மாநிலத்தில் விபத்துகள் குறித்த வலுவான தரவுகள் சேகரித்தல், விபத்து நிகழக்கூடிய கறுப்பு இடங்களை அடையாளம் கண்டு அவற்றைக் களைதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியான மற்றும் அவசரகால மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளுதல், வாகனங்களைப் பாதுகாப்பாக ஓட்டுதல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பல்வகையான தொடர் நடவடிக்கைகளை அம்மாவின் அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது. இதன் காரணமாக, 2016ம் ஆண்டில் சாலை விபத்துக்களினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 17,218-லிருந்து 2020ம் ஆண்டு இறுதியில் 8060 ஆக குறைந்துள்ளது. சாலை விபத்துகளை மேலும் குறைப்பதற்காகத் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதனால்தான், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் மற்றும் உலக வங்கி ஆகியன, சாலைப் பாதுகாப்பில் ‘‘தமிழ்நாடு ஒரு முன்மாதிரி மாநிலமாக” உள்ளதென அறிவித்துள்ளது. பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

குறிப்பாக, 18.1.2021 முதல் ஒரு மாதகாலம் நடைபெறுகின்ற சாலைப் பாதுகாப்பு இயக்கத்தைத் துவக்கி வைத்தபோது, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி ‘‘தமிழ்நாடால் செய்ய முடிந்தது என்றால், அனைத்து மாநிலங்களும் இதில் முன்னேற்றம் காண இயலும்” எனக் கூறியுள்ளார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த நாட்டின் சொத்துக்களாகத் திகழுகின்ற பெரும் எண்ணிக்கையிலான இளைய தலைமுறையினர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டு, தமிழ்நாடு அரசு சாலை விபத்துகள் மற்றும் விபத்துகளில் உயிரிழப்புகள் ஆகியவற்றைக் கணிசமான அளவில் குறைப்பதற்கு எடுத்து வரும் பெரு முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு விருது

2017–18ம் ஆண்டில் சாலை பாதுகாப்பில் மிகச் சிறந்த மாநிலம் என்ற விருதினை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தமிழ்நாட்டுக்கு வழங்கியுள்ளது. மேலும், 2018–19ம் ஆண்டிற்கான விருதும் தமிழ்நாட்டிற்கே இரண்டாவது முறையாக வழங்கப்பட்டுள்ளது.

‘உயிர்களைக் காப்பது நமது குறிக்கோள்’ என்கின்ற உயர்ந்த லட்சியத்துடன், 2016ம் ஆண்டு தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்னேற்பாடுகள் என்ற திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், நான்கு படிநிலைகளில் சாலைப் பாதுகாப்பு மற்றும் சிகிச்சை அலகுகள், உயரிய மருத்துவ நிபுணர்களுடன் உருவாக்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு, 2019ம் ஆண்டு உலக வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தை துவக்கியது. விபத்து மற்றும் அவசர கால சேவைகளை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

எந்த நேரத்திலும், எந்தவொரு நிகழ்விற்கும் உதவத் தயாராக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு, இந்த ஆண்டு கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளையும், 78 கூடுதல் சிறப்பு மருத்துவர்களையும் கொண்டு, 25 மருத்துவக் கல்லூரிகளில் அவசரகால மருத்துவ சிகிச்சைப் பிரிவுகளை நிறுவ தமிழ்நாடு அரசு சுமார் 11 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

15 முதல் 20 கி.மீ. சுற்றளவில் மருத்துவ வசதிகள் கிடைக்கப் பெறாத பகுதிகளில் ‘‘ஹாட் ஸ்பாட்ஸ்” ஆய்வு பகுப்பாய்வின் அடிப்படையில், பொன்னான மணி நேரத்திற்குள் சாலை விபத்திற்கு உள்ளானவர்களை சிகிச்சைப் பெறச் செய்து, அவர்களைக் குணப்படுத்த, 24 மணிநேரமும் செயல்படும் 7 அவசர சிகிச்சை மையங்கள் தாம்பரம், பாடியநல்லூர், ஈஞ்சம்பாக்கம், மகாபலிபுரம், வேப்பூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கொடும்பாளூர் ஆகிய இடங்களில், 3.68 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ளன.

635 புதிய ஆம்புலன்ஸ்

தற்போது 1303 அவசரகால ஊர்திகளுடன் ஆம்புலன்ஸ் ஊர்தி சேவை அளிக்கப்படுகின்றது. சென்ற ஆண்டு மட்டும் 635 புதிய அவசரகால ஊர்திகள் 134 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இச்சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணாக்கர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

உலக வங்கியின் சமீபத்திய ஆய்வுகள் சாலை விபத்துகள் குறைவதால் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளரும் நாடுகளில் குறிப்பிட்ட அளவிற்கு உயர்வதாக தெரிவிக்கின்றன. எனவே, பாதுகாப்பினை முக்கிய அங்கமாகக் கொண்டு, தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம்–1 மற்றும் 2–ல் எங்களோடு இணைந்து செயல்பட்ட உலக வங்கிக்கும் எங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாலை பாதுகாப்பினை உறுதி செய்ய அம்மாவின் அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் சாலை விபத்துகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. சாலை பாதுகாப்பு என்பது சாலை பாதுகாப்பு மட்டுமல்ல, ‘‘அது உயிர்ப் பாதுகாப்பு”. சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளை பூஜ்ஜிய சதவீதமாக மாற்ற அம்மாவின் அரசானது அயராது பாடுபடும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கியதற்கு நன்றி

இதற்காக அல்லும் பகலும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் நெடுஞ்சாலைத் துறையினருக்கும், சுகாதாரத் துறையினருக்கும் காவல் துறையினருக்கும், போக்குவரத்து துறையினருக்கும், பள்ளிக் கல்வித் துறையினருக்கும், எனது பாராட்டுகளையும் நன்றிகளையும் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன். எனது தலைமையில் அம்மாவின் அரசாங்கம் நேற்று நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இன்று 5ம் ஆண்டைத் தொடங்கி உள்ளது. இந்த அற்புதமான நாளில் தமிழகத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டை மையமாகக் கொண்டு உங்களுடன் இந்த சந்திப்பு நடந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 2021–22 வரவு–செலவுத் திட்டத்தில் சாலை மேம்பாடு தொடர்பான திட்டங்களுக்கு ரூ .1 லட்சம் கோடி ஒதுக்கியமைக்காக பிரதமருக்கும் உங்களுக்கும் நன்றி.

தேசிய நெடுஞ்சாலை சாலைகளில் 47 கரும்புள்ளி இடங்களில் நிரந்தர திருத்த நடவடிக்கைகளுக்கு ரூ.193.38 கோடியை அனுமதி அளித்ததற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இது அபாயகரமான விபத்துக்களைக் குறைக்க உதவும். கூடுவாஞ்சேரியில் இருந்து செட்டிபுண்ணியம் வரை என்எச்–45 13.30 கி.மீ நீளத்திற்கு ரூ. 230 கோடியில் 4 வழிப்பாதையிலிருந்து 8 வழிப்பாதையாக அகலப்படுத்த நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இது சென்னை மெட்ரோ நகரத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எளிதான போக்குவரத்துக்கு உதவும்.

‘சாலை என்பது பயணத்திற்காகத் தானே தவிர பந்தயத்திற்கு அல்ல’ என்பதை உணர்ந்து சாலைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று இளைஞர்களையும் பொதுமக்கள் அனைவரையும் இந்த நேரத்தில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவின் வருங்காலமாக விளங்கும் எழுச்சிமிகு இளைஞர்கள் தங்களது ஆற்றலை ஆக்கப்பூர்வமான வழிகளில் செலவிட்டு, தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும், இந்த நாட்டையும் காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *