விஜய் ரசிகர்களுக்கு முன்கூட்டியே தீபாவளி
சென்னை, செப். 6-
நடிகர் விஜய் – இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் G.O.A.T (கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ்) திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெய்ராம், பிரேம் ஜி, யோகி பாபு, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். படத்தினை ஏ.ஜி.எஸ்., எண்டர்டைமெண்ட் நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ளது.
மறைந்த நடிகர் விஜயகாந்த் நடித்துள்ளதைப்போல், ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் காட்சி உருவாக்கம் முதல் நடிகர் விஜயின் இளமை தோற்றத்தை பார்வையாளர்கள் கண்முன் கொண்டு வந்த டி.ஏஜிங் டெக்னாலஜி வரை புதுமை தொழில்நுட்பங்களை கையாண்டுள்ள இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.
விஜய், ஒரு நடிகராக, திரையில் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, அவரின் ரசிகர்களுக்கு திரை விருந்து படைத்திருக்கிறார். இளம் விஜயாக, அவர் ‘அழகிய தமிழ் மகன்’ பட கதாபாத்திரத்தை உயிர்ப்பித்திருப்பது மேலும் சிறப்பு. நடிகர் விஜய்யின் ரசிகர்களைப் போலவே நமக்கும் அவர் தொடர்ந்து நடிக்கலாமே? என்கிற எண்ணமே தோன்றுவதாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது.
முதல் பாதி திரைப்படம் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக செல்கிறது. இரண்டாம் பாதியில் கணிக்கக்கூடிய காட்சிகள் ஆங்காங்கே தென்பட்டாலும், விறுவிறுப்புக்கு குறைவில்லை என்றே சொல்ல வேண்டும். 3 மணிநேர திரைப்படமாக இருந்தாலும் பார்வையாளர்களுக்கு சலிப்புத் தட்டாத வண்ணம் கொண்டு சென்றிருப்பது வெங்கட் பிரபுவின் வெற்றி.
கடந்த சில வருடங்களாக வெளியான திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையை வெங்கட் பிரபு விஜய்க்கு கொடுத்துள்ளது ரசிகர்களை மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களிடையும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.
அரசியல் குறியீடுகள், சென்னை சூப்பர்கிங்ஸ் காட்சிகள், நடிகர் விஜயகாந்த், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பாடகி பவதாரிணி ஆகியோரை நினைவுப்படுத்தும் காட்சி, ‘மங்காத்தா’ பின்னனி இசை, ‘கில்லி’ திரைப்படத்தில் வரும் மருதமலை பாடல், ‘அப்படி போடு’ நடன அசைவுகள், சில ‘த்ரோபேக் காட்சிகள்’ ரசிகர்களுக்கு போனஸ்.
G.O.A.T திரைப்படம் மூலம் தனது ரசிகர்களுக்கு முன்கூடியே தீபாவளி கொண்டாத்தை நடிகர் விஜய் கொடுத்துள்ளார்.
ஆகமொத்தம் G.O.A.T திரைப்படம் ஆக்ஷன் கலந்த, ஒரு முழுமையான எண்டர்டெயினர்.
#Movie Review #Tamilcinema #Vijay #Greatest Of All Times #GOAT Review