வர்த்தகம்

சென்னை பெட்ரோலியம் எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு: 500 பேர் பங்கேற்ற சைக்கிள் பேரணி

சென்னை, பிப்.1–

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் எரிபொருட்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில் சைக்கிள் பேரணியை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மணலி ஆலை பகுதியில் நடத்தியது. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் எஸ்.என். பாண்டே சைக்கிள் பேரணியைத் தொடங்கி வைத்தார்.

திரையுலகப் பிரபலங்களான நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், சின்னத்திரை நடிகை ஸ்ரீதிகா, நடிகை திவ்யா கணேஷ், விளையாட்டுத் துறை பிரபலமான சுரேஷ் சத்யா போன்றவர்களும் இப்பேரணியை முன்னின்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இப்பேரணியில் சி.பி.சி.எல்.-ன் நிதித் துறை இயக்குனர் ராஜீவ் அய்லவாடி, செயல் துறை இயக்குனர் எஸ்.கிருஷ்ணன், தொழில்நுட்பத் துறை இயக்குனர் எச். சங்கர், தலைமை குற்றவியல் கண்காணிப்புத் துறை அதிகாரி ஜே.டி. வெங்கடேஷ்வரலு மற்றும் பல மூத்த அதிகாரிகளும், பணியாளர்களும் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பல்வேறு துறை சார்ந்தவர்கள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

7.7 கி.மீ. நீளம் கொண்ட இப்பேரணி சி.பி.சி.எல். நிறுவனத்தின் ‘பல்நோக்கு தொழில்நுட்பப் பயிற்சிக் கல்லூரி’ வளாக விளையாட்டு மைதானத்தில் தொடங்கி, மீண்டும் அங்கேயே நிறைவு பெற்றது.

சைக்கிள் ஓட்டுவது – ஒருபுறம் எரிபொருள் சிக்கனத்துக்கு வழி வகுப்பதுடன், மறுபுறம் நமக்கு உடல் பயிற்சி என்ற வகையில், ஆரோக்கிய வாழ்வுக்கு துணை நிற்கிறது. இப்பேரணி நடத்துவதன் மூலம் எரிபொருள் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்துவதோடு, இளம் தலைமுறையின் உடல் பயிற்சி ஆர்வத்தை வளர்த்து, அவர்களது ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடிகிறது. கூடவே, எதிர்காலச் சந்ததியினருக்கான எரிபொருள் மூலங்களைப் பாதுகாத்து, அவர்களுக்கு போதுமான அளவு எரிபொருள் கிடைக்க, நம்மாலான முயற்சி செய்வதாகவும் அமைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *