சிறுகதை

பழம் தரும் பரமசிவம் | ராஜா செல்லமுத்து

Spread the love

குளிரூட்டப்பட்ட அறையில் நடந்து கொண்டிருந்தது ஒரு பெரியவரின் பிறந்த நாள் விழா. பழுத்து நிறைந்திருக்கும் அந்தப் பெரியவரைப் பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தனர் ஆட்கள்.

‘‘எண்பத்தைந்து வயது என்பது முருகேசன் ஐயாவுக்கு தெரியல.. அந்த அளவுக்கு இன்னும் இளமையா இருக்காரு.. இதுக்கு என்ன காரணம்னு நெனைக்கிறீங்க..? என்று பார்வையாளர்களைப் பார்த்து எதிர் கேள்வி கேட்டார் ஒரு பேச்சாளர். பேசியவரே பதில் சொல்லட்டு மென்று மெளனம் காத்தது கூட்டம்.

‘‘இதுக்கு என்ன காரணம்னு நினைக்கிறிங்கன்னு.. கேட்டேன்ல.. அதுக்கு ஒரு உண்மையான காரணம்.. முருகேசன் ஐயா அவருக்காக மட்டுமே வாழலங்க. மத்தவங்களுக்காகவே வாழ்ந்திட்டு இருக்காரு. ஒக்காந்த எடத்திலயே ஒக்காந்திட்டு எல்லாத்தையும் சாதிக்கக்கூடிய மனநிலை படைச்சவரு தான்.. நம்ம முருகேசன் ஐயா.. அதுனாலதான் இன்னும் இளமையோட இருக்காரு..’’ என்று பேசப் பேச கூட்டம் ஆர்ப்பரித்து கைதட்டி ஆரவாரம் செய்தது.

‘‘இப்பிடிப்பட்ட மனுசங்களால தான்ங்க.. இந்த பூமி கொஞ்மாவது ஈரமாயிருக்கு..’’ என்று அவர் இன்னும் பேசப் பேச முருகேசனின் நடத்தையும் வாழ்க்கையும் எல்லோருக்கும் வெட்ட வெளிச்சமானது.

‘‘இப்படிப்பட்ட மனுசனாங்க முருகேசன்.. ? அவரைப் பற்றித் தெரியாத புதியவர் ஒருவர் கேட்க

‘‘ஆமா..’’ என்று பதில் சொன்னார் பக்கத்தில் இருந்தவர்

‘‘அவனவன்.. அவனோட வாழ்க்கைக்கு மட்டும் தான் சுயநலத்தோடவே வாழ்ந்திட்டு இருக்கானுக.. ஆனா! முருகேசன் மாதிரி ஐயா விதிவிலக்குங்க..’’

‘‘இந்த மாதிரி ஆளுக.. மனுசப் பிறவி இல்லீங்க.. மனுச உருவத்தில இருக்கிற கடவுள்ங்க..’’ என்று இன்னொருவர் பேச அதற்கும் கூட்டத்தினர் ஆமோதித்தனர்.

‘‘இங்க பாருங்க.. முருகேசன் ஐயா.. அவருக்குக் தெரியாத ஒரு ஆள் நல்ல திறமையான ஆளா இருந்தா.. அவர் என்ன துறையில திறமையா இருக்கிறாரோ..? அவருக்குத் தகுந்த வேலைய வாங்கிக்

குடுத்திட்டுத்தாங்க ; தூங்குவாரு.. யாரோ ஒருத்தவங்க நல்லா இருந்தா நமக்கென்ன வந்திடுச்சுன்னு கைய வீசிட்டுப் போற இந்த ஒலகத்தில.. யாரோ கண்ணுக்குத் தெரியாத ஒருத்தர் நல்லா இருக்கணும்னு நெனைக்கிறாரு பாருங்க..அவரு தான் நம்ம முருகேசன் ஐயா..’’

எண்பத்தஞ்சு வயசுங்கிறது சாதாரணமில்லிங்க.. இப்பவெல்லாம் இந்த வயசுல மனுசன் உசுரோட இருக்கிறதே பெரிய விசயம் ஆனா ! இவரு.. இன்னும் நல்ல புத்தியோட வாழ்ந்திட்டு இருக்காரே.. அது மிகப் பெரிய விசயம்ங்க..’’ என்று சொல்ல

முருகேசன் தனக்காக வாழாமல் மற்றவருக்காக வாழ்ந்தவர்; வாழ்ந்து கொண்டிருப்பவர் என்றே தோன்றியது. இப்படியாய் எல்லோரும் பேசி முடிக்க இரவு மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.

பொதுநலச் செம்மல் முருகேசன் ஐயாவும் ஏற்புரை நிகழ்த்த விழா முடியும் தருணம்

அந்தக் குளிரூட்டப்பட்ட அறையில் முழுவதும் பழங்களின் வாசனை பரவியது –

‘‘என்ன இது..! ஒரே பழ வாசனையா வருதே.. என்று மூக்கைப் பிடித்துப் பார்த்துப் பரிசோதனை செய்தார் ராஜன். அவரின் எண்ணப்படியே விழா அரங்கின் வாசலில் கொய்யாப்பழம், தண்ணிர்ப்பழம், வெள்ளரிக்காய் ,பொரி, வறுத்த கடலை சகிதம் நின்றிருந்தார் பரமசிவம்

இரண்டு மணி நேரம் உட்கார்ந்திருந்த கூட்டம் பசியோடு இருக்கும் கன்று தாய்ப் பசுவின் மடியைத் தேடி ஓடுவதைப் போல ஓடியோடிப்போய் பழங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

‘‘இவர் யார்.. எதற்குப்பழம் வைத்திருக்கிறார்..இது விழா நடத்துபவர்களின் ஏற்பாடா..? என்று யாரும் எதுவும் எதிர் கேள்வி கேட்கவில்லை. ராஜனுக்கு மட்டும் இது உறுத்தலாகவே இருந்தது.

‘‘யார் இவர்..? எந்த விழாவிலும் இல்லாமல் இவர் கொடுப்பது புதுசா இருக்குதே..’’ என்றவர் நேரே பரமசிவத்திடம் வந்தார்.

‘‘ஐயா.. நான் கேக்குறேன்னு தப்பா நினைச்சுக்கிறாதிங்க.. நீங்க குடுத்திட்டு இருக்கிற பொருளெல்லாம்..’’ என்று இழுத்தவரிடம்

‘‘சார்..நான் ஒரு இயற்கை மருத்துவர்; இத சொல்றதுக்கே கூச்சப்படுறேன்; இந்த விழாவுக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லீங்க.. ஆனா!

இந்த மாதிரி தமிழ் சம்மந்தமான விழா எங்க நடந்தாலும் என்னோட காச செலவழிச்சு பழங்கள வாங்கிட்டு வந்து குடுப்பேங்க.. இது மட்டுமில்லீங்க..தெனமும் ரெண்டு மூணு காலேசுக்கு போயி பிள்ளைங்களுக்கு குடுப்பேன். இயற்கை உணவுகள மக்களுக்குக் கொண்டு போய்ச் சேக்கணும் அவ்வளவுதான்… மத்தபடி வேறொன்னுமில்லீங்க..’’ என்று சொல்லிக் கொண்டே

‘‘சார்..கொய்யா… வெள்ளரி சாப்பிடுங்க..’’ என்று அறிமுகமே இல்லாத ஆட்களிடம் பழங்களை நீட்டிக் கொண்டிருந்தார் பரமசிவம்,

‘‘இவர்கள் போன்ற மாமனிதர்களால் தான் இந்த உலகம் இயங்குகிறது..’’ என்று எண்ணியபடியே நடந்தார் ராஜன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *