வர்த்தகம்

பெரம்பலூர் தொகுதி 300 மாணவர்களுக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைகழகத்தில் இந்த ஆண்டும் இலவச என்ஜினீயரிங் அட்மிஷன்

பெரம்பலூர் தொகுதி 300 மாணவர்களுக்கு

எஸ்.ஆர்.எம். பல்கலைகழகத்தில் இந்த ஆண்டும் இலவச என்ஜினீயரிங் அட்மிஷன்

டி.ஆர்.பாரிவேந்தர் எம்.பி. தகவல்

சென்னை, அக். 12–

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள 300 ஏழை மாணவர்களுக்கு கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் இலவச என்ஜினீயரிங், விவசாய, கலை அறிவியல் படிப்புக்கு அட்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. தேர்வு பட்டியல் எஸ்.ஆர்.எம். பல்கலைகழக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று பெரம்பலூர் தொகுதி எம்.பியும் எஸ்.ஆர்.எம். பல்கலைகழக நிறுவனரும், வேந்தருமான டி.ஆர். பாரிவேந்தர் இதைத் தெரிவித்தார்.

டி.ஆர்.பாரிவேந்தர் பேசுகையில், 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் கலந்துகொண்டு, நம் தொகுதிக்கான தேவைகளையும், நீண்ட நாள் கோரிக்கைகளையும் பேசியுள்ளேன். இதே கோரிக்கைகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினேன். மற்றும் அந்தந்த துறைசார்ந்த மத்திய அமைச்சர்களை சந்தித்தும் இக்கோரிக்கைகளை எடுத்துக்கூறி என் கடமையினை ஆற்றியிருக்கின்றேன்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, தலைமைச் செயலகத்தில் நேரில் சந்திந்து, பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கோரிக்கைகளை அவரிடம் கடிதம் வாயிலாக அளித்துள்ளேன் என்றார்.

2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, என்னுடைய தனிப்பட்ட வாக்குறுதியாக ஒன்றை தெரிவித்திருந்தேன். இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆண்டு ஒன்றிற்கு, இத்தொகுதிக்குட்பட்ட 300 மாணவர்களுக்கு, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இலவசமாக பட்டப்படிப்பு படிப்பதற்கு ஆவண செய்வேன்” என வாக்குறுதி அளித்திருந்தேன். அதன்படி, கடந்த ஆண்டு 300 மாணவர்கள் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டு, கட்டணமில்லா இலவசக் கல்வியினை பெற்றுவருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, இவ்வாண்டும் 300 மாணவர்களுக்கு இலவச பட்டப்படிப்பு படிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்து, அதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அனுப்பச்சொல்லியிருந்தோம். அதன் அடிப்படையில் 1084 மாணவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களின் மதிப்பெண் அடிப்படையிலும், குடும்பச் சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டும், இந்த ஆண்டும் 300 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பொறியியல், விவசாயம், கலை-அறிவியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளை படிப்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வெப்சைட்டில் வெளியிடப்படுவதோடு, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும் தனித்தனியே தகவல் அனுப்பப்படும்.

இவ்வறிவிப்பினை வெளியிட்ட பத்து நாட்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் சேர்ந்துகொள்ளலாம்.

இவ்வாறு, பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியின் தேவைகளையும், என்னுடைய தனிப்பட்ட வாக்குறுதிகளையும் என்றும் நினைவில் கொண்டு, தொடர்ந்து செயல்படுவேன் என டி.ஆர். பாரிவேந்தர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *