செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 42,478 கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா டேட்டா கார்டு

காஞ்சீபுரம், பிப். 23–-

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமை செயலகத்தில் கோவிட் பெருந்தொற்று காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் இணைய வழி வகுப்புகள் மூலமாக மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்றிட அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதிக் கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் மே மாதம் வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி தரவு பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக விலையில்லா தரவு அட்டைகள் (டேட்டா கார்டு) வழங்கிடும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

அதன் அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 63 கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா 2 ஜிபி டேட்டா கார்டு வழங்கும் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் மாணவர்களுக்கு தரவு அட்டைகளை வழங்கி தொடங்கி வைத்தார். இதன் மூலம் 17,219 கலை அறிவியல் கல்லூரி மாணவர்களும், 25,259 தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களும் என 42,478 மாணவர்கள் பயன் பெறுவர்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி முதல்வர் (பொ) ஸ்ரீமதி ராமலிங்கம், உத்திரமேரூர் டாக்டர் எம்ஜிஆர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் பத்மினி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் ஜீவா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பழனி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *