செய்திகள்

அனைவருக்கும் அரசு செலவில் கொரோனா தடுப்பூசி: எடப்பாடி பழனிசாமி பேட்டி

தடுப்பூசி கண்டுபிடித்ததும்

அனைவருக்கும் அரசு செலவில் கொரோனா தடுப்பூசி:

எடப்பாடி பழனிசாமி பேட்டி

புதுக்கோட்டையில் புதிய பல் மருத்துவ கல்லூரி

32½ லட்சம் டன் நெல் கொள்முதல் செய்து வரலாற்று சாதனை

புதுக்கோட்டை, அக்.23–

கொரோனா தொற்று நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்தவுடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

புதுக்கோட்டையில் புதிய பல் மருத்துவ கல்லூரி துவங்கப்படும் என்றும் முதல்வர் கூறினார்.

நேற்று (22–ந் தேதி), முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

இன்றைய தினம், புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், இந்த மாவட்ட தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

இம்மாவட்டத்தில் முதலமைச்சர் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ், பொதுமக்களிடமிருந்து 9,621 மனுக்கள் பெறப்பட்டு அதில், 7,030 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. முதியோர் உதவித்தொகை வேண்டி பெறப்பட்ட 3,087 மனுக்களில் 1,526 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 2020-–2021–ம் நிதியாண்டில் 6 ஆயிரத்து 939 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுப்பணித் துறை மூலமாக பல்வேறு திட்டங்களை இந்த மாவட்டத்தில் நிறைவேற்றியுள்ளோம். பருவ காலங்களில் பொழிகின்ற மழைநீரை சேமித்து வைக்க குடிமராமத்து திட்டத்தின் மூலம் இம்மாவட்டத்தில் மட்டும் சுமார் 272 ஏரிகளை தூர்வார ரூபாய் 56 கோடியும், 21 கால்வாய்களை தூர்வார ரூபாய் 31 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிக கொள்முதல்

இவ்வாறு கால்வாய்களையும் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தூர்வாரிய காரணத்தினால் குறிப்பிட்ட காலத்தில் கடைமடைப் பகுதிகள் வரை தண்ணீர் சென்றுள்ளதால் விவசாயிகள் அதிக விளைச்சல் பெற்றுள்ளனர். டெல்டா பகுதி மாவட்டங்களில் இதுவரை அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் 23 லட்சம் மெட்ரிக் டன் நெல் தான் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த ஆண்டு 32.50 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுச் சாதனையாகும். மேலும், ஓடைகள், நதிகளின் குறுக்கே பல்வேறு தடுப்பணைகள் கட்டி நீரை தேக்கி வைக்கக்கூடிய சூழ்நிலையை நாங்கள் உருவாக்கித் தந்துள்ளோம்.

நெடுஞ்சாலைத்துறை மூலம் பல்வேறு சாலைகளை சீர்செய்து போக்குவரத்து நெரிசல் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளோம். அம்மா அறிவித்த பாலங்களை அம்மாவின் அரசு கட்டிக் கொடுத்து வருகிறது. மீனவர்களுக்கு நிறைய திட்டங்கள் கொடுத்துள்ளோம்.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளில் 3,93,313 விவசாயிகளுக்கு 628 கோடி ரூபாய் என்ற அதிகளவு இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தந்தது அம்மாவின் அரசு.

பண்ணைப் பணிகளை காலத்தே மேற்கொள்வதற்கு, 833 விவசாயிகளுக்கு 833 வேளாண் இயந்திரங்கள் 8 கோடியே 48 லட்சம் ரூபாய் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி மூலம் பாசன வசதி மேற்கொள்வதற்காக, 136 விவசாயிகளுக்கு சூரிய சக்தி பம்புசெட்டுகள் கொடுத்துள்ளோம். ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பல்வேறு சந்தை உட்கட்டமைப்பு வசதிகள் 4 கோடியே 26 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ராஜேந்திரபுரத்தில் தென்னை வணிக வளாகம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் 2016–-17 ஆம் ஆண்டு முதல் 2019–-20 ஆம் ஆண்டு வரை 3,134 பணிகள் தொடங்கப்பட்டு 2,302 பணிகள் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 832 பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளது. பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்) 2016–-17ஆம் ஆண்டு முதல் 2019–-20–ம் ஆண்டு வரை 14,395 பணிகள் தொடங்கப்பட்டு 9,561 பணிகள் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 4,834 பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளது.

குடிநீர் இணைப்பு

ஜல் ஜீவன் மிசன் திட்டத்தின் கீழ் 2020–-2021–ம் ஆண்டில் முதல் கட்டமாக 146 ஊராட்சிகளில் உள்ள 579 குக்கிராமங்களில் 67.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 47,756 வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு வழங்கு வதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளன. புதுக்கோட்டை நகராட்சியில் கொள்ளிடம் ஆற்றை நீர் ஆதாரமாகக் கொண்டு புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 21 வழியோரக் குடியிருப்புகளைச் சேர்ந்த 1,63,900 மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீர் அபிவிருத்தித் திட்டத்திற்கு ரூபாய் 510 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தப் பணி துவங்கப்படும்.

2020–-2021–ம் ஆண்டு ரூபாய் 518 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 7,571 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 232.72 கோடி ரூபாய் வங்கி கடனாக வழங்கப்பட்டுள்ளது. அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் கடந்த மூன்றாண்டுகளில் 6,379 உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனங்கள் வாங்கிட ரூபாய் 14 கோடியே 15 லட்சம் மதிப்பில் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதுக்கோட்டை நரிமேடு திட்டத்தில் 1,920 வீட்டுமனை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் ரூபாய் 150.58 கோடி மதிப்பீட்டில் நிறைவு பெற்று குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மூன்று மாதங்களில் அந்தப் பணிகள் முடிவுற்று 2021–ம் ஆண்டு ஜனவரி மாதம் திறந்து வைக்கப்படும்.

புதிய வீடுகள்

புதுக்கோட்டை தாலுகா, எல்லைக்குட்பட்ட சந்தைப்பேட்டை திட்டப்பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 640 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. புதுக்கோட்டை தாலுகா, ரெத்தினக்கோட்டை கிராம எல்லைக்குட்பட்ட அறந்தாங்கி திட்டப்பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 120 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

புதுக்கோட்டை தாலுகா, எல்லைக்குட்பட்ட போஸ் நகர் திட்டப்பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 384 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக 35 கோடி ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இப்படி கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் சார்பாக பல வீடுகள் கட்டுகின்ற பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பல் மருத்துவ கல்லூரி

அம்மா இருக்கும்பொழுதே புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்தார். அம்மா மறைந்த பிறகு, அக்கல்லூரி அம்மாவின் அரசால் கட்டி முடிக்கப்பட்டு என்னால் திறக்கப்பட்டு, செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

2021-–22–ம் கல்வி ஆண்டிலிருந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 50 மாணவர் சேர்க்கை இடங்களுடன், ஒரு புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் என்னால் அறிவிக்கப்பட்ட, திருவாப்பூர், கருவேப்பிலங்குறிச்சி ஆகிய இரண்டு ரெயில்வே கடவுகளில் இரண்டு ரெயில்வே மேம்பாலங்கள், ரெயில்வே கடவு எண் 372 மற்றும் 376-க்கு பதிலாக சாலை மேம்பாலம் ஆகியவை கட்டிக் கொடுக்கப்படும்.

இலவச தடுப்பூசி

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள். இந்நோய் குணமடைய தடுப்பூசி கண்டு பிடித்தவுடன் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் அரசாங்க செலவிலேயே தடுப்பூசி போடப்படும் என்ற செய்தியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முழுவதும் 3,591 நடமாடும் நகரும் நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *