போஸ்டர் செய்தி

ரூ.69 கோடியில் வெள்ள தடுப்பு பணி: எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

Spread the love

சென்னை, செப்.20–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 19–ந்தேதி அன்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 68 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற வெள்ளத் தடுப்பு பணிகளை துவக்கி வைத்தார். மேலும், 19 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தருமபுரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்புக் கட்டடங்கள் மற்றும் கோயம்புத்தூர் (வடக்கு) கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்புக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கின் விளைவாக அடையாறு, ஆரணியாறு, கொசஸ்தலையாறு, கூவம் மற்றும் கோவளம் ஆற்றுப்படுகைகளில், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் மற்றும் ஊரக பகுதிகளிலுள்ள குடியிருப்புகள் நீரில் மூழ்குகின்ற நிலைமை அவ்வப்போது ஏற்படுகின்றது. அப்பகுதிகளில் வெள்ள தணிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் 29.6.2018 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.

பெரிய நீர்வழி தடங்கள்

அதன்படி, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிகழும் தொடர் வெள்ளப்பெருக்கின் காரணமாக பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், போக்குவரத்து கட்டமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தணிக்கும் வகையில் நீண்ட கால நோக்கில் தீர்வு காணும் அவசியத்தை உணர்ந்து, விரிவான ஆய்வின் அடிப்படையில் மிகவும் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் கண்டறியப்பட்டு அதனை செயல்படுத்திடும் விதமாக முதல் கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னை புறநகர் சாலை–முடிச்சூர் சாலை சந்திப்பு முதல் பாப்பன் கால்வாய் வரையிலும் மற்றும் பள்ளிக்கரணை, நாராயணபுரம் ஏரி முதல் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரையிலும் தலா 20 கோடி ரூபாய் வீதம், மொத்தம் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில், ஆதனூர் ஏரி உபரிநீர் கால்வாய் பகுதியில் 8 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பாப்பன் கால்வாய் பகுதியில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் சாலைகளுக்கு அடியில் பெரிய நீர்வழி தடங்கள் அமைக்கும் பணிகள்;

அடையாறு ஆற்று படுகையில்

அடையாறு ஆற்றுப்படுகையில் நந்திவரம், நன்மங்கலம், புது தாம்பரம், இரும்புலியூர் ஏரிகள் மற்றும் கோவளம் ஆற்றுப்படுகையில் நாராயணபுரம், பெரும்பாக்கம், திருவஞ்சேரி, ஒட்டியம்பாக்கம் ஏரிகள் ஆகிய ஏரிகளில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளத் தடுப்புப் பணிகள் மற்றும் உபரிநீர் வெளியேற்றும் அமைப்புப் பணிகள்; மணிமங்கலம் ஏரியின் கரைகளை 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரி, கரைகளை வலுப்படுத்தி, கொள்ளளவை மேம்படுத்தும் பணி; அடையாறு ஆற்றுப்படுகையில் ஆதனூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ஏரிகள் மற்றும் கோவளம் ஆற்றுப்படுகையில் நன்மங்கலம் ஏரி ஆகிய ஏரிகளை 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகள்;

அடையாறு ஆற்றின் உபநதியான ஒரத்தூர் ஓடையின் குறுக்கே புதிய நீர்தேக்கம் அமைக்கும் பொருட்டு, முதல்கட்டமாக 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆரம்பாக்கம் மற்றும் ஒரத்தூர் ஏரிகளை இணைக்கும் கரைகளை அமைக்கும் பணி;

ஊரப்பாக்கம் மற்றும் நந்திவரம் ஏரிகளுக்கு இடையே சாலையின் கீழ் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளநீர் வடிகால் அமைக்கும் பணி; திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் ஏரியில் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உபரிநீர் வெளியேற்றத்தை முறைப்படுத்தும் பணி;

என மொத்தம் 68 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற வெள்ளத் தடுப்பு பணிகளை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

6 லட்சம் பேர் பயன்

இந்த வெள்ளத் தடுப்பு திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுவதால், தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், வரதராஜபுரம், சேலையூர், பள்ளிக்கரணை போன்ற தென் சென்னை புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 6 லட்சம் மக்கள் பருவமழைக் காலங்களில் வெள்ளச் சூழல் பாதிப்பிலிருந்து காக்கப்படுவதுடன், சுமார் 172 மில்லியன் கன அடி நீர் சேகரிக்க வழிவகை ஏற்படும்.

மேலும், தருமபுரி மாவட்டம் –அரூர் மற்றும் நல்லம்பள்ளி, கோயம்புத்தூர் மாவட்டம் – கோயம்புத்தூர் (தெற்கு) மற்றும் பொள்ளாச்சி, திண்டுக்கல் மாவட்டம் – வேடசந்தூர், நாமக்கல் மாவட்டம் – சேந்தமங்கலம், ஈரோடு மாவட்டம் – தாளவாடி ஆகிய இடங்களில் 17 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்புக் கட்டடங்கள்; கோயம்புத்தூர் மாவட்டம் – கோயம்புத்தூர் (வடக்கு) 2 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டடம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா. பென்ஜமின், தலைமைச் செயலாளர் க.சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிருவாக ஆணையர்,கூடுதல் தலைமைச் செயலாளர் கொ. சத்யகோபால் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *