செய்திகள்

ரூ.1,100 கோடி செலவில் 9 கி.மீ. மேம்பாலம்: விரைவில் பணி துவங்கும்

அவினாசி சாலையில்

ரூ.1,100 கோடி செலவில் 9 கி.மீ. மேம்பாலம்:

விரைவில் பணி துவங்கும்

எடப்பாடி பழனிசாமி பேட்டி

கோவையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் பட்டியலை வெளியிட்டார்

கோவை, நவ.6–

கோவை அவினாசி சாலையில் 9 கி.மீ. தூரத்துக்கு ரூ.1,100 கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலச் சாலை பணிகள் விரைவில் துவங்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

நேற்று (5–ந் தேதி), முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை, அம்மாவின் அரசால் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பல ஆண்டுகாலமாக, கோவை மாநகரம் மற்றும் கோவை மாவட்ட மக்கள் வைத்த கோரிக்கைகளை அம்மாவின் அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்ற செய்தியை இந்த நேரத்தில் தெரிவித்து அவற்றில் ஒரு சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

மேம்பாலங்கள்

காந்திபுரம் பகுதியில் மொத்தமாக 3 கிலோ மீட்டர் நீளமுடைய இரண்டு அடுக்கு மேம்பாலம் ரூபாய் 214 கோடி மதிப்பீட்டில் முடிவுற்று போக்குவரத்திற்குத் திறந்து விடப்பட்டுள்ளது. உக்கடத்தில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் 2 கிலோமீட்டர் நீளத்திற்கு மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது. சுங்கம் சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ரூபாய் 253 கோடி மதிப்பீட்டில் 3 கிலோமீட்டர் நீளத்திற்கு மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கவுண்டம்பாளையம் சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலை மூலம் ரூபாய் 66 கோடி மதிப்பீட்டில் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கவுண்டர் மில்ஸ் சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலை மூலம் ரூ.42 கோடி மதிப்பீட்டில் 670 மீட்டர் நீளத்திற்கு மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கணபதி-மேட்டுப்பாளையம் சாலையில் கண்ணப்பன் நகரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி சுமார் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. கணபதி-ஆவாரம்பாளையம் சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி 580 மீட்டர் நீளத்திற்கு ரூபாய் 55 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. அவினாசி சாலையில் உப்பிலிப்பாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை கே.எம்.சி.எச். உயர்மட்ட மேம்பாலச் சாலை அமைக்கும் பணி 9 கிலோமீட்டர் நீளத்திற்கு சுமார் ரூபாய் 1,100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது, விரைவில் பணி துவங்கும்.

மேலும், கோவை – சித்ரா-குருவம்பாளையம் 9 கிலோமீட்டர் சாலையை அகலப்படுத்த நில எடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. இச்சாலை, சத்தி சூழ-ல் இணைவதால் விமான நிலையத்திலிருந்து, மேட்டுப் பாளையம் – -ஊட்டி வரை செல்லலாம்.

காந்திபுரத்தில் உள்ள உயர்மட்டப் பாலத்திலிருந்து 100 அடி சாலைக்கும், பாரதியார் சாலை இறங்கும் வகையில் 2 இறங்குதளம் அமைக்கும் பணி ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது. உக்கடம் ஆற்றுப்பாலம் வரை நடைபெறும் பாலப் பணி கரும்புக் கடையிலிருந்து ஆற்றுப்பாலம் வரை நில எடுப்பு உட்பட ரூபாய் 265 கோடி மதிப்பில் சுமார் 2 கிலோமீட்டர் நீளத்திற்கு நீட்டிப்புச் செய்ய ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளது, விரைவில் பணிகள் தொடங்கும். லாலி ரோடு சந்திப்பில் சுமார் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் செயல்பட உள்ளது.

துடியலூர் – -கோவில்பாளையம் சாலையில் துடியலூர் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. கோவை மேற்கு வட்டச் சாலை சுமார் 35 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூபாய் 320 கோடி மதிப்பீட்டில் அமைக்க நில எடுப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது, நில எடுப்புப் பணிகள் முடிவுற்றவுடன் சாலைப் பணிகள் தொடங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *