செய்திகள்

பாலாற்றில் வெள்ளப் பெருக்கு: கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை

3 ஆண்டுகளுக்கு பிறகு

பாலாற்றில் வெள்ளப் பெருக்கு:

கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை

காஞ்சிபுரம், நவ.27–

3 ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருப்பதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, 3 ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், அந்த தண்ணீர் பாலாற்றில் இணைந்து தற்போது கரைபுரண்டு செல்வதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆந்திரம் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளால் கடந்த பல ஆண்டுகளாகவே வறண்டு கிடக்கும் பாலாற்றில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றின் இருகரைகளையும் தொட்டபடி சுமார் 47 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்வது இம்மாவட்ட மக்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகம் மாநிலம் சிக்பெல்லாபூர் மாவட்டம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு, கர்நாடகத்தில் 93 கிலோ மீட்டரும், ஆந்திரம் மாநிலத்தில் 33 கிலோ மீட்டரும் பாய்ந்து வாணியம்பாடி அருகே புல்லூர் என்ற இடத்தில் தமிழகத்துக்குள் நுழைகிறது. தமிழகத்தில்தான் அதிக அளவாக 222 கி.மீ. தூரம் பயணித்து காஞ்சிபுரம் மாவட்டம், வயலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பல்வேறு தடுப்பணைகள் கட்டியதால் திருப்பத்தூரில் மாவட்டத்தில் தொடங்கி வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் வரை பாலாறு வறண்டு மணல் மேடுகளாகவே காட்சியளித்து வந்தது. இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு தமிழகம், ஆந்திர மாநிலங்களில் பெய்த கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, ஆந்திரம் தடுப்பணைகளையும் கடந்து தமிழகத்திற்குள் பாலாற்றில் தண்ணீர் வந்ததுடன், இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அதனை விவசாயிகளும், பொதுமக்களும் பூஜைகள் செய்து வரவேற்றனர்.

அதன்பின்னர் 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பாலாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பாலாற்றின் துணை நதிகளால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், அந்த தண்ணீர் பாலாற்றில் இணைந்து தற்போது கரைபுரண்டு சென்று கொண்டுள்ளது. வினாடிக்கு 47 ஆயிரம் கன அடி வீதம் இரு கரைகளையும் தொட்டபடி பாலாற்றில் தண்ணீர் செல்வதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பாலாற்றின் இரு கரையோரங்களிலும் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

தற்போது வாலாஜாபேட்டை அடுத்த பாலாற்று அணைக்கட்டு பகுதியில் கிளை கால்வாய் வழியாக சுமார் 4 ஆயிரம் கன அடி நீர் காவேரிப்பாக்கம் ஏரிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சோளிங்கரில் 25 செ.மீ. மழை பெய்துள்ளது. தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் 27 ஏரிகள் முழுக்கொள்ளவை எட்டியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *