செய்திகள் முழு தகவல்

தவறுகளில் பாடம் கற்பதே வெற்றிக்கு சரியான வழி!

குடிமைப் பணிகளுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பு, இளைஞர்களின் மிகப்பெரும் குறிக்கோளாகவும் கனவாகவும் இருக்கிறது. அந்தளவுக்கு உயர்ந்த பணியாக இருக்கும் இப்பணிக்குத் தேர்ச்சி பெறுவது அத்தனை எளிதானதல்ல. மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வும் திட்டமிடலும் இருந்தால்தான் இத்தேர்வில் தேர்ச்சி பெற முடியும்.

அந்த வகையில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபீனா, அண்மையில் குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சிபெற்று, குடும்பத்துக்கு பெருமை தேடித்தந்தது மட்டுமின்றி, குமரி மாவட்டத்தின் முதல் ஐபிஎஸ் அதிகாரியாக மாறி, கன்னியா குமரிக்கே பெருமையை சேர்த்து உள்ளார். அவர் இந்த அரியாசனத்தை அடைய, கடந்து வந்த பாதையும் பாடுகளும் என்ன?

இது குறித்து பிரபீனா கூறியுள்ள கருத்துகள், மற்ற இளைஞர்களுக்கும் அவரவர் துறையில் சாதிக்க வழிகாட்டியாக இருக்கும் தானே… வாருங்கள் அவர் என்ன கூறுகிறார் என்பதை நாமும் கேட்போம்…

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் மங்களநடை நான் பிறந்த ஊர். தந்தை பிரேமசந்திரன், காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்து ஓய்வுபெற்றவர். தாயார் ரெஜினா ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. எனது சகோதரர் டால்பின் பிரேம், இறகுப் பந்து பயிற்சியாளர். இது தான் எங்கள் குடும்பத்தின் பின்னணி.

முதல் தூண்டுகோள்

எங்கள் பகுதியிலேயே பள்ளிப் படிப்பை முடித்த நான், மதுரை தியாகராசர் கல்லூரியில் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தேன். ஆனால், பணிகளுக்கான வளாகத் தேர்வை புறக்கணித்தேன். ஏனெனில், நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வயதிலேயே என் எண்ணத்தில் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற விதையை என் மனதில் ஊன்றியவர் பங்குத்தந்தையாக இருந்த பீட்டர் ஆனந்த். அவர்தான் நீ ஐஏஎஸ் ஆகனும்; எனக்கு வயசான பிறகு ஒருநாள் நான் உன்னை கலெக்டரா பார்க்கனும் என்று கூறினார்.

அது மனதில் உந்திக்கொண்டே இருந்ததால், என்னோடு படித்தவர்கள் எல்லாம் வளாகத்தேர்வு மூலமே பணி கிடைத்து செல்லும்போது, நான் மட்டும் எந்த நேர்முகத்தேர்விலும் கலந்து கொள்ளாமல் இருந்தேன். வேலைக்குச் சென்றுவிட்டால், குடிமைப் பணித் தேர்வில் பங்கேற்று மக்கள் சேவை செய்யும் எனது சிறுவயது கனவு நனவாகாது என்பதால், அப்போதே நான் எனது தேர்வுக்கான தயாரிப்புகளைத் தொடங்கினேன்.

கோயம்புத்தூரில் உள்ள ஓர் அகாதெமியில் சேர்ந்து குடிமைப் பணித் தேர்வுக்கு தயாரானேன். தொடர்ந்து முதல் 3 முறையும் தேர்வில் தோல்வியே கிடைத்தது. அப்போது எனது பெற்றோரும், குடும்பத்தினரும் எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்து நம்பிக்கை ஊட்டினர். பின்னர் சென்னை அடையாறில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்தேன். புத்துணர்ச்சியுடன் மனம் தளராமல் பயிற்சியைத் தொடர்ந்தேன். எனது முயற்சிக்கு பலன் கிடைத்தது.

தோல்வியின் போது, வெற்றிபெற்றவர்களின் வழிமுறைகளை ஆய்ந்து, படிப்பதை எப்படி வெளிப்படுத்துவது என்று கண்டறிந்தேன். அதனால் 4ஆம் முயற்சியில் வெற்றிபெற்று ஐ.ஆர்.டி.எஸ் (IRTS – The Indian Railway Traffic Service) தேர்வானேன். ஐ.ஆர்.டி.எஸ். பயிற்சியில் இருக்கும்போதே 5 வது முறையாக தேர்வு எழுதி, அதில் 445ஆவது இடம் கிடைக்க, ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வானேன் என, தனது தொடர் போராட்டத்தை கூறி உள்ளார்.

மாணவர்களுக்கு வகுப்பு

இந்த வெற்றியைப் பெற நாளொன்றுக்கு சுமார் 10 முதல் 12 மணி நேரம் வரை படிப்பு, மாதிரித் தேர்வுகள் என தேர்வுக்கு பயிற்சி பெற்றதோடு, தான் பயிற்சி பெற்ற அகாதெமியில் உள்ள மாணவர்களுக்கு வகுப்புகளையும் எடுத்துள்ளார். மேலும், தன்னுடன் பயிலும் தனது நண்பர்களுடன் இணைந்து குழுவாக படிப்பது, குழு விவாதம் என தங்களின் நேரத்தை செம்மையாக முழுமையாகப் பயன்படுத்தியுள்ளார்.

நாள் முழுவதும் படிப்பு, படிப்பு என இருக்காமல் மாலை வேளையில் 1 மணி நேரம் ஓதுக்கி நடைப்பயிற்சி, விளையாட்டுகள் என தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வார்களாம். இன்று ஓர் ஐபிஎஸ் அதிகாரியாகி இருக்கும் பிரபீனா, குடிமைப் பணித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தனது அனுபவங்களைப் பகிர்கிறார்.

இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் முதலில் ஓன்றை புரிந்து கொள்ள வேண்டும். லட்சக்கணக்கானோர் எழுதும் இத்தேர்வில் வெற்றிபெற கடின உழைப்பு மட்டும் போதாது. திட்டமிட்ட நேர்த்தியான உழைப்பும் அவசியம். தன்னம்பிக்கையோடு வெற்றியை மனதில் கொண்டு போராடினால் மட்டுமே நினைத்தது நடக்கும்.

தவறுகளில்தான் பாடம்

முதல் முயற்சியிலேயே இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை மிகமிக குறைவு. அதற்காக தளர்ந்து விடக்கூடாது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டே இருக்கவேண்டும். வாழ்க்கையில் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்கவேண்டும். நமக்கு முன் தேர்வுக்குத் தயார் ஆனவர்கள், நமக்குப் பிறகு தயார் ஆகிறவர்கள் என அனைவரிடமும் கற்றுக்கொள்ள ஏதேனும் இருக்கும். அதனை நாமும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

தவறுகளில் இருந்து பாடம் கற்கவும், எப்போதும் நேர்மறை எண்ணங்களுடன் வாழவும் கற்றுக் கொண்டாலே போதும் இத்தேர்வை எளிதில் வெல்லலாம். பெண்கள் தங்கள் சிக்கல்களை மட்டும் பேசிக் கொண்டு இருக்காமல், நடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரங்களை நோக்கி பெண்கள் வரவேண்டும் என்று இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை சிந்தனைகளை விதைக்கிறார் 27 வயதான பிரபீனா ஐபிஎஸ்.

குறிப்பாக, பிள்ளைகளை பெற்றோர்கள் எதிலும் கட்டாயப்படுத்தாமல், வழிகாட்ட வேண்டும் என்றும், வாழ்வில் பெற்றோரின் எண்ணங்கள் எதையும், பிள்ளைகள் மேல் திணிக்காமல் சுதந்திரம் தந்து, பக்க பலமாக இருக்க வேண்டும் என்றும் பிள்ளைகளை நம்புங்கள், அவர்களையும் நம்ப உதவி செய்யுங்கள் சாதிப்பார்கள் என்று வலியுறுத்தி உள்ளார்.

வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை இழக்காமல் விடா முயற்சியுடன் போராடினால், லட்சியத்தை கட்டாயம் அடைய முடியும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு பிரபீனா ஐபிஎஸ் என்றால் மிகையில்லை.

–மா. இளஞ்செழியன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *