நாடும் நடப்பும்

ஆன்லைன் வர்த்தகர்களுக்கு மத்திய அரசின் விழாக்கால போனஸ்!

நாட்டின் தனிநபர் வருமானம் உயர ‘உழைப்புக்கேற்ற ஊதியம்’ என்ற சித்தாந்தம் மாறிவிட்டது. செலவு செய்பவர்கள் அதிகரித்தால் நாட்டின் பொருளாதாரம் புதிய ஊக்கம் பெறும் என்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளதை தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் சமீபத்திய பல்வேறு சலுகை அறிவிப்புகள் உறுதிப்படுத்துகிறது.

முன்பெல்லாம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை விடுமுறை சலுகை அதாவது Leave travel concession (LTC) தரப்பட்டது. ஆனால் கொரோனா பெரும் தொற்றால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வெளியூர்களுக்கு யாரும் செல்லவே முடியாத சூழ்நிலை இருப்பதால் அந்த ஊழியர்கள் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு அவர்கள் சந்தோஷப்படவே நிதி அமைச்சர் புது அறிவிப்புகள் வெளியிட்டு இருக்கிறார்.

அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு எல்டிசி தொகைக்கு பண அட்டை (கேஷ் வவுச்சர்) அளிக்கப்படும். இந்த பண அட்டை மூலம் உணவுப் பொருள் அல்லாத ஜிஎஸ்டி செலுத்திய பொருட்களை வாங்கலாம். அதாவது 12%க்கும் அதிகமான வரிவிதிப்பு வரம்பில் உள்ள பொருட்களை வாங்கலாம். இந்த பொருட்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையிலான பரிவர்த்தனை மூலம் வழங்கப்படுவதாக இருக்கவேண்டும். பொருட்களை ஜிஎஸ்டி பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும். இந்தப் பண அட்டையை அடுத்த ஆண்டு மார்ச் 31ந் தேதி வரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஊழியர்களுக்கு எல்டிசி சலுகை அளிப்பதன் மூலம் அரசுக்கு ரூ.5,675 கோடி செலவாகும். அதேபோல பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் பணியாளர்களுக்காக ரூ.1,900 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல மாநில அரசுகளும் எல்டிசி சலுகை அளிக்கின்றன. அந்த வகையில் மாநிலங்கள் ரூ.9 ஆயிரம் கோடி வரை சலுகையை அறிவித்தால் எல்டிசிக்கு மொத்தமாக ரூ.19 ஆயிரம் கோடி வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதனால் என்ன நன்மை? ஆன்லைன் வர்த்தகம் குறிப்பாக அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஆடை, ஆபரண நிறுவனங்களின் ஆன்லைன் விற்பனை அதிகரிக்கும்.

குறிப்பாக பொருட்கள் வாங்க முடியாது என்பதை பார்க்கும் போது ஆடை, ஆபரணங்கள், மின்சாரப் பொருட்களுக்கு புது ஆர்வம் ஏற்பட்டு விற்பனை அமோகமாக இருக்கப் போகிறது.

சமூக விலகல் காரணமாக கடைவீதிகளுக்கு செல்லமுடியாத நிலையில் பல்வேறு கடைகள் இரவில் சீக்கிரமே மூடப்பட்டு விடுகிறது. ஓடிக்கொண்டிக்கும் ஏ.சி, அலங்கார விளக்குகளுக்கான மின்சார செலவு மற்றும் ஊழியர்களுக்கான தினச் சம்பளத்திற்கு இணையாக விற்பனை ஏதுமில்லா நிலையில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு வந்தால் கடையை மூடிவிட்டு வீட்டிலேயே இருக்கலாம் என்று வெளிப்படையாகவே கூறி வருகிறார்கள்.

பெரிய மால்களில் உள்ள கடைகளுக்கு மாத வாடகை மிக அதிகமாகும்! நுகர்வோர் அதிகம் வராத நிலையில் திணறிக் கொண்டிருக்கிறார்கள். மழையில் பூத்த காளான்கள் போல் நகரம் எங்கும் செல்போன் கடைகள் இருப்பதை பார்க்கின்றோம். அவர்களுக்கும் மாத வாடகை மற்றும் ஊழியர்கள் சம்பளத்திற்கு போதிய வர்த்தகம் இருக்கிறதா? என்பது கேள்விக்குறியாகவே தான் இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசு ஆன்லைன் வர்த்தகத்திற்கு விசேஷ ஏற்பாடுகள் செய்து ஊக்குவிப்பது சமூக விலகல் அக்கறை கொண்டவர்கள் வரவேற்கிறார்கள். ஆனால் பேரம் பேசி வியாபாரம் செய்ய விரும்பும் மத்திய ரக நுகர்வோருக்கு இந்தப் பரிசுக் கூப்பன்கள் டிஜிட்டல் கார்டாக மட்டும் கிடைத்திருப்பது சிறு வியாபாரிகளுக்கு வருத்தமான ஒன்று என்று தான் தோன்றுகிறது.

அப்படி தர நினைக்கும் தொகையை வரி நீங்கலாக முன்பே பிடித்தம் செய்து விட்டு வங்கி கணக்கில் தந்து இருந்தால் நுகர்வோர் செலவு அதிகரிப்பை கொண்டு விழாக்கால கோலாகலம் சிறு, மத்திய வியாபாரிகள் வாழ்வில் புது வசந்தத்தை தந்து இருக்கக்கூடும்.

தற்போதைய நிலையில் கோடிகளில் புரளும் பல்வேறு முன்னணி ஆன்லைன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு விசேஷ போனஸ் தந்து இருப்பது தான் உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *