நாடும் நடப்பும்

வேதியியலில் சாதிக்கும் பெண் விஞ்ஞானிகள்

சென்ற வாரம் அறிவிக்கப்பட்ட நோபல் பரிசுகளில் வேதியியல் அதாவது கெமிஸ்ட்ரிக்கு இரு பெண் விஞ்ஞானிகள் பெயர் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு மகளீர் ஆய்வு திறமைக்கான அங்கீகாரம்! அது மட்டுமின்றி வரலாற்றுப் பக்கங்களையப் புரட்டி பார்க்கவும் வைக்கிறது.

வேதியியலுக்கான நோபல் பரிசுக்கு 2 பெண் விஞ்ஞானிகள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 பெண் விஞ்ஞானிகள் மட்டுமே இந்தத் துறையில் நோபல் பரிசை வென்றுள்ளனர்.

இந்தாண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு இமானுல் சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் ஏ.டவுனா ஆகிய இரு பெண் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேதியியலுக்காக இதுவரை 5 பெண்கள் மட்டுமே நோபல் பரிசு வென்றுள்ளனர். மேரி கியூரி, அவரது மகள் ஐரீன் கியூரி, டோரத்தி குரோபூட் ஹாட்கின், அடா யோனத், பிரான்சஸ் எச்.ஆர்னால்ட் ஆகியோர் அந்த விருதைப் பெற்றுள்ளனர்.

கடந்த 1935–ல் தனது 35வது வயதில் வேதியியல் விஞ்ஞானி பிரெட் ஜோலியட் நோபல் பரிசு பெற்றார். இவர் மேரி கியூரியின் மகள் ஐரீன் கியூரியின் கணவர் ஆவார். இதன் மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேரி கியூரி, அவரது கணவர் பியூரி கியூரி, மகள் ஐரீன் கியூரி, மருமகன் பிரட்ரிக் ஜோலியட் ஆகிய 4 பேர் நோபல் பரிசு வென்று பெருமை சேர்த்துள்ளனர். மேலும் இளம்வயதில் (35 வயது) நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையை பிரட்ரிக் ஜோலியட் பெற்றார்.

நோபல் பரிசுக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் டவுனாவும் ஜெர்மனியைச் சேர்ந்த இமானுல் சார்பென்டியரும் இணைந்து மேற்கொண்ட மரபணு மாற்றம் குறித்த ஆய்வுக்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இருவரும் மரபணுத் தொழில்நுட்பத்தில் சிஏஎஸ் – 9 எனும் மரபணு மாற்றக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதுவரை 111 ஆண்டுகளில் 183 பேருக்கு வேதியியல் பிரிவில் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 1916, 1917, 1919, 1924, 1933, 1940, 1941, 1942 ஆகிய ஆண்டுகளில் முதலாம் மற்றும் 2–ம் உலகப் போர் காரணமாக நோபல் பரிசு வழங்கப்படவில்லை.

லைனல் பாலிங் என்பவர் வேதியியல் அமைதிப் பிரிவுகளில் நோபல் பரிசுகளை வென்றுள்ளார். அப்போது இந்தப் பரிசு யாருக்கும் பகிர்ந்து அளிக்கப்படாமல் லைனல் பாலிங்குக்கு மட்டுமே வழங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் மகா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு துறை கல்வித்துறையாகும். தற்போது கல்லூரியின் நுழைந்திருக்கும் புதுமுகங்களுக்கு இவையெல்லாம் மிகப் புது அனுபவமாகவே இருக்கும்.

ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு ஓரளவு பழகிக்கொண்டு புதிய ஆன்லைன் கல்வி முறையை ஏற்றுக் கொண்டு விடுவார்கள். ஆனால் ஆரம்பம் முதலே நேர்முக வகுப்பு பாணியில் கற்று படித்து வந்தவர்கள் இனி கல்லூரிகள் துவக்க நாளில் அதுவும் விஞ்ஞானப் படிப்பு மேற்கொள்பவர்களுக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கத்தான் செய்கிறது.

இதே நிலை 1920–க்கு முன்பு அமெரிக்கா சந்தித்தது! அப்போது முதலாம் உலகப்போர் மெல்ல முடிவுக்கு வர, ‘பிளேக்‘ என்ற தொற்று காரணமாக சர்வ நாசத்தை எதிர்கொண்டிருந்த காலக்கட்டத்தில் கல்வித்துறை பாதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தான் அமெரிக்கா ஓர் முக்கியமான முடிவை எடுத்தது. அதன்படி எல்லா பெரிய தொழில் நடத்தும் குழுமங்களும் கல்வித் துறைக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதாகும்.

சுயநல நோக்குடன் சில தொழிலதிபர்கள் தங்களுக்குத் தேவையான ஊழியர் படையை உருவாக்கிக் கொள்ள இத்திட்டத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.

பல்வேறு நிறுவனங்கள் ஆராய்ச்சிகளின் பலனை லாப நோக்கில் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் கல்வித் துறையில் ஓர் சூறாவளி புயலாய் புரட்சி ஏற்பட்டது.

அந்தப் புரட்சியின் விளைவாகத்தான் இதுவரை அமெரிக்காவில் 336 விஞ்ஞானிகள் நோபல் பரிசை தட்டிச் சென்றுள்ளனர். அதில் 71 விஞ்ஞானிகள் வேதியியல் விஞ்ஞானத்தில் நோபல் பரிசை வென்றுள்ளனர்.

சங்க காலம் முதலே நம் நாட்டிலும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்துள்ளது. பல அரிய கண்டுபிடிப்புகளையும் உலகிற்கு தந்துள்ளோம். ஆனால் தகவல் சேகரிப்பு, பகிர்தல் விவகாரங்களில் மிகவும் பின்தங்கி இருப்பதால் நமது ஆய்வுகளின் சிறப்பை நாமே புரிந்து கொள்ளாது இருக்கிறோம்.

இனியாவது ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளின் மகிமையை உணர்ந்து செயல்படுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *