சிறுகதை

அப்பாவைக் காணோம் | ராஜா செல்லமுத்து

Spread the love

வழக்கம் போல ஒரு வருடம் முடிந்து புதுவருடமும் அன்று இரவு பன்னிரெண்டு மணிக்குப் பிறந்தது. ஊரெல்லாம் பட்டாசு, உற்சாகம் என சந்தோசத்தில் மூழ்கிக் கிடக்க வேளாங்கண்ணன் வீடு மட்டும் வெறிச்சோடிக்கிடந்தது. – அவன் வீட்டிற்கே மேலே ‘சர்’ எனப் பறந்து போன ராக்கெட் வெடி ‘பட்’ என வெடித்து அவன் வீட்டின் மேலேயே விழுந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கிடந்த பாத்திரங்களை ஒழுங்குபடுத்தாமலே உட்கார்ந்திருந்தாள் சுமித்ரா, இரண்டு கைகளையும் இறுகக் கட்டிக் கொண்டு எதையோ வெறித்துப் பார்த்தபடியே இருந்தான் வேளாங்கண்ணன். குழந்தைகள் இரண்டும் யாரையும் லட்சியம் செய்யாமலேயே எதையோ எடுத்து விளையாடுவதும் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதுமாய் இருந்தனர். இப்படியே எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது.

‘‘ஏங்க.. இப்படியே ஒக்காந்திருந்தா.. என்ன அர்த்தம்..? வருசப்பொறப்பு, ஏதாவது வாங்கிட்டு வாங்களேன் குழந்தைங்க இப்ப ஏதாவது சாப்பிடணும்னு கேப்பாங்களே..’’ என்று சுமித்ரா சொல்லவும் மனைவியை நிமிர்ந்து பார்த்தான் வேளாங்கண்ணன்.

‘‘நாம என்னங்க பண்ண முடியும்.. – உங்க அப்பா ஏன்..! இப்படி பண்ணினார்..?’’ உங்க அப்பா இப்பிடியா செய்வாரு… காணாமப்போயி இன்னைக்கோட ரெண்டு மாசத்துக்கு மேல ஆச்சு – எங்க போனாரு.. எப்பிடி யிருக்காரு.. எந்த தகவலும் இல்லியே..!ஒரு பெரிய மனுசன் செய்ற வேலையா இது..! இது ரொம்பவே தவறுங்க.. அவரால நாம தான் இப்ப ரொம்ப கஷ்டப்படுறோம்..’’ – என்று வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போனாள் சுமித்ரா.

‘‘கொஞ்சம் பேசாம இருக்கியா..? அவர் எங்க போனாரு..? ஏன் போனாருன்னு.. எனக்கு மட்டும் தெரியுமா என்ன..? வேணாம் சுமித்ரா – அவரப்பத்தி தப்பா பேசாதே.. அவர பத்தி ஒனக்கு என்ன தெரியும்.. எங்க அப்பா இன்னொரு சாமி மாதிரி.. எவ்வளவு கஷ்டப்பட்டு எங்கள வளர்த்தவருன்னு தெரியுமா..? எங்க அம்மா போனதில இருந்து அவரோட மனநிலை சரியாயில்லாம இருந்தது நெசம். அவர நாம பார்க்கப் போனது தப்புதான். என்ன செய்வேன் விதி அப்படி ஆயிடுச்சு என்று புலம்பினான் வேளாங்கண்ணன். அப்படியே உட்கார்ந்திருந்தாள் சுமித்ரா. விளையாடிட்டு இருந்த குழந்தைகள் ஓடி வந்தனர்.

‘‘அம்மா.. தாத்தா எங்க…?’’ என்று குழந்தைகள் கேட்டனர்.

‘‘சும்மாயிருங்க… பேசாம இருக்க மாட்டிங்களா..?’’ என்று அவள் வார்த்தைகளில் வெறுப்பை உமிழ்ந்தாள்

‘‘ஏன் பிள்ளைகள இப்பிடி திட்டுற..? இப்பிடித்தான் அப்பாவையும் திட்டியிருப்பன்னு நினைக்கிறேன்..’’ என்றான் வேளாங்கண்ணன் .

‘‘நான் ஏங்க திட்டுறேன்..அவர மாமா மாதிரி பாக்கலீங்க..எங்க அப்பா மாதிரி தானே பாத்துக்கிட்டேன்..அத நான் சொல்லி உங்களுக்கு தெரியணும்னு அவசியமில்லன்னு நினைக்கிறேன்..’’ – என்று சுமித்ரா சொல்ல அப்போதும் குழந்தைகள் சுமித்ராவைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தனர்.

‘‘இங்க வாங்க..இப்பிடி உட்காருங்க.. என்ன வேணும்..?’’ என்று குழந்தைகளிடம் வேளாங்கண்ணன் கேட்க

‘‘ தாத்தா எங்க..? இப்ப எங்களுக்கு தாத்தா வேணும்..’’ என்று குழந்தைகள் வேளாங்கண்ணனிடம் கேட்டனர்.

இதைக் கேட்டதும்

வேளாங்கண்ணனுக்கு என்னவோ போலானது.

‘‘அப்பா.. எங்க போனிங்கப்பா..உங்களுக்கு என்னாச்சு- எங்கள விட்டுட்டு எங்க போனீங்க..? உங்களுக்கு என்னாச்சு.. எத மனசில நெனச்சீங்க..? எங்கள விட்டுட்டு போக உங்களுக்கு எப்படி மனசு வந்தது..? அப்பா.. நீங்க சாப்பிட்டிங்களா..? தூங்குனீங்களா..? எங்க படுக்குறீங்க..? யார் கூட பேசுவீங்க..? சின்ன வயசுல நான் இல்லாம சாப்பிட மாட்டீங்களே..! என்ன முதுகுல தூக்கி வச்சிட்டு உப்பு மூட்டை ஏத்தி விளையாடுவீங்களே.. – உங்களோட கைய பிடிச்சிட்டுதானே நான் தூங்குவேன் – நான் கல்யாணம் பண்ணுனா கூட என்னைய இன்னும் ஒரு குழந்தையா தான் நினைப்பீங்களே ..- எப்பிடிப்பா.. எங்கள விட்டுப்போக உங்களுக்கு மனசு வந்தது..? கொஞ்ச நேரம் கூட பசி பொறுக்க மாட்டீங்களே..! – சரியா நேரா நேரத்துக்கு சாப்பிடுறீங்களா..? அப்பா -உங்களுக்கு என்னப்பா பிரச்சினை – நீங்க இல்லாம இந்த வீடே வெறிச்சோடிக் கெடக்கு. உங்க பேரன் பேத்திகளெல்லாம் உங்கள எங்கன்னு கேக்குறாங்க.. நான் என்ன சொல்லி அவங்களுக்கு ஆறுதல் சொல்லுவேன் அப்பா.. நீங்க எங்க இருந்தாலும் உடனே வாங்கப்பா .. நீங்க இல்லாம எங்களால சாப்பிட முடியல. தூங்க முடியல- எங்களுக்கு சாகணும் போல இருக்குப்பா, வேணாம்பா.. நாங்க எந்த தப்பு செஞ்சிருந்தாலும் மன்னிச்சிட்டு ஒடனே வாங்கப்பா.. நீங்க இல்லாத வீடு ரொம்பவே வெறுமையா இருக்குப்பா..’’ என்று வேளாங்கண்ணன் அழ குடும்பமே சேர்ந்து அழுதனர்.

‘‘அப்பா.. நாங்க எந்தத் தப்பு செஞ்சிருந்தாலும் எங்களை மன்னிச்சிருங்கப்பா..நீங்க இல்லாம எங்களால வாழ முடியாதுப்பா.. எங்க இருந்தாலும் வந்திருங்கப்பா.. அப்பா..’’- என்று வேளாங்கண்ணன் புலம்பினான்.

அவனோடு சேர்ந்து குடும்பத்தினர் அனைவருமே அழ ஆரம்பித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *