செய்திகள்

டெல்லி விவசாயிகள் போராட்டம்: அவதூறு செய்தி வௌியிட்டவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு

புதுடெல்லி, பிப். 4–

விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு பின் போலி செய்திகளை பரப்பிய சமூக ஊடக கணக்குகளுக்கு எதிராக டெல்லி போலீசார் 4 வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டெல்லியில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மற்றும் அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திக்ரி மற்றும் சிங்கு உள்ளிட்ட எல்லைகளில் நடந்து வரும் இந்த போராட்டம் 71வது நாளாக இன்றும் தொடருகிறது.

குடியரசு தினத்தன்று விவசாயிகள் எல்லையில் இருந்து டெல்லி நோக்கி டிராக்டர்களில் பேரணியாக சென்றனர். இந்த சம்பவத்தில், போலீசாரின் அனுமதியை மீறி அவர்கள் செங்கோட்டையை அடைந்தனர்.

அதன்பின் மத கொடி ஒன்றை செங்கோட்டையில் ஏற்றினர். இந்த சம்பவத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்ற 80க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக போலீஸ் துறையில் உயர்மட்ட அளவில் அதிகாரிகளாக பணிபுரிவோர் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர் என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின.

200க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் ராஜினாமா செய்தனர் என்ற போலி செய்தியை, பழைய வீடியோவை கொண்டு பதிவிட்ட ராஜஸ்தானின் சுரு நகரை சேர்ந்த ஓம் பிரகாஷ் தேத்தர்வால் என்பவரை போலீசார் கைது செய்தனர். கிசான் அந்தோலன் ராஜஸ்தான் என்ற பெயரில் முகநூல் கணக்கு ஒன்றை ஓம் பிரகாஷ் தொடங்கியுள்ளார். அதில், கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பரில் எடுத்த மற்றொரு மாநிலத்தின் காவல் அதிகாரிகளின் பழைய வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

இந்த வீடியோவை, டெல்லி விவசாயிகள் போராட்டத்துடன் இணைத்து, டெல்லி போலீசார் அதற்கு எதிர்வினையாற்றியது போல் சித்தரித்துள்ளார். இந்த சம்பவத்தில் ராஜஸ்தானின் பரத்பூரை சேர்ந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுபற்றி போலீசார் கூறும்பொழுது, விவசாயிகளின் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு பின் போலி செய்திகளை பரப்பிய சமூக ஊடக கணக்குகளுக்கு எதிராக டெல்லி போலீசார் 4 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கும்படி கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட பல்வேறு நபர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *