சென்னை, பிப். 2–
எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் பற்றி சமூக ஊடகத்தில் பொய்யான செய்தி வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நிறுவனத்தின் சார்பில் சைபர் கிரைம் போலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவிகள் ஒவ்வொருவரும் பாதுகாப்பு கருதி ஆண் நண்பர் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், ஆண் நண்பருடன் அதை புகைப்படமாக எடுத்து அனுப்ப வேண்டும் என்றும், அப்படி செய்யாதவர்கள் கல்வி நிறுவனத்தில் அனுமதிக்க முடியாது என்று நிறுவனத்தின் பதிவாளர் பெயரில் சமூக ஊடகத்தில் தகவல் பகிரப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான செய்தியாகும்.
நிறுவனத்தின் மூலம் பதிவாளர் பெயரில் மாணவ – மாணவியருக்கு அனுப்பப்படும் நிறுவன சுற்றறிக்கை கடிதத்தில் உள்ள தகவலை நீக்கி விட்டு யாரோ அதில் நிறுவனத்தின் பெயருக்கும் புகழுக்கும் கலங்கம் ஏற்படுத்தும் வகையில் இப்படி பதிவு செய்து சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளனர்.
எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பெயருக்கும் புகழுக்கும் பொதுமக்களிடம் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இப்படி தகவல் வெளியிட்டவர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது