நாடும் நடப்பும்

மோடி அலை தொடர்கிறது , கம்யூனிஸ்டுகள் நிலை உயர்கிறது: காங்கிரஸ் புதிய தலைமைக்கு ஏங்குகிறது!

பீகார் தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டும் உண்மைகள்

மோடி அலை தொடர்கிறது, கம்யூனிஸ்டுகள் நிலை உயர்கிறது:

காங்கிரஸ் புதிய தலைமைக்கு ஏங்குகிறது!

துபாயில் நடந்த 13 வது ஐபிஎல் டி20 இறுதி ஆட்டத்தில் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, எளிதாக முதல்முறை இறுதி சுற்றுக்கு நுழைந்து விட்ட டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி விட்டது.

எந்த பரபரப்புமின்றி முடிந்த இறுதி ஆட்டத்திற்கு முக்கியமான காரணம் ரோஹித் சர்மாவின் அசத்தலான அதிரடி ரன் குவிப்பாகும். இவரது வெற்றி வேட்கைக்கு துணை நின்றது பந்து வீச்சாளர் டிரண்ட் போல்ட் ஆகும். அவர் வீசிய நான்கு ஓவர்களில் முப்பரே ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை எடுத்து விட்டார்.

அதே நாளில் பீகார் தேர்தல் முடிவுகள் படுபரபரப்பாகவே வெளிவந்தது.

இறுதி வாக்குச்சாவடி எண்ணிக்கை வரை தேசிய ஜனநாயக கூட்டணியா? மகா கூட்டணியா? என்ற கடும் போட்டி நிலவியது. ஒருவழியாக இரவு 11 மணிக்கு பிரதமர் மோடி ஏற்படுத்திய தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தள முதலமைச்சர் வேட்பாளர் நிதீஸ்குமார் தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

லல்லு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் இறுதி சுற்று வரை எதிர்த்து வலுவான நிலையில் இருந்ததால் இழுபறி நிலை கடைசி நிமிடம் வரை இருந்தது. அதற்கு காரணம் அவர்கள் ஏற்படுத்திய மகா கூட்டணி தான்!

இறுதியில் பாரதீய ஜனதா கூட்டணி 125 இடங்களை பிடித்து விட்டது. மகா கூட்டணியால் 110 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது.

இந்த வெற்றி பாரதீய ஜனதாவிற்கு மகிழ்ச்சியை தரும் என்பதில் சந்தேகமே இல்லை. தற்போது பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகள் 12 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது. அவை அருணாசலம், அசாம், கோவா, குஜராத், இமாச்சலம், கர்நாடகா, மத்திய பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தர்காண்ட் ஆகும். இவற்றுடன் 13 வது மாநிலமாக பீகார் சேர்ந்துள்ளது.

இம்முறை பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதீய ஜனதாவிற்கு 121 இடங்களில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது. ஆளும் ஐக்கிய ஜனதாதளம் 122 இடங்களில் நின்றது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் தொடர் வெற்றி

இந்த கூட்டணி இட ஒதுக்கீடு விவகாரத்தில் கிடைக்காத கோபத்தால் மறைந்த மத்திய அமைச்சர் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் தனித்து நின்றது. அவர்களது சார்பில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக அதாவது 121 இடங்களில் வேட்பாளரை நிறுத்தவில்லை. ஆனால் நிதிஸ் கட்சிக்கு எதிராக 122 இடங்களிலும் போட்டி போட்டது. ஆனால் ஒரு இடத்திலும் ஜெயிக்கவில்லை.

121 இடங்களில் பாரதீய ஜனதா 73 இடங்களில் வென்றது. 122 இடங்களில் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. மொத்த 243 இடங்களில் இதர கூட்டணி கட்சிகளும் 8 இடங்களை பிடித்து விட்டதால் மட்டுமே நிதீஸ் குமாரால் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடிந்துள்ளது.

ஆக, ஐக்கிய ஜனதா தளம் தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்து நடத்திய ஆட்சிக்கு மதிப்பெண் தரும் வகையில் தீர்ப்பு வெறும் 43 இடங்கள் தான் என்பது கிட்டத்தட்ட தோல்வி என்பது தானே உண்மை! 35 சதவிகித மதிப்பெண் தரப்பட்டு இருக்கிறது! அதாவது ஆளும் கட்சியால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களில் 35 சதவிகிதம் பேர் மட்டும் வென்றுள்ளனர்.

இவர்கள் தோல்வியில் இருக்கும் வாக்கு வித்தியாசத்துடன் பாஸ்வான் கட்சியின் வாக்குகள் சேர்க்கப்பட்டால் வெற்றி இலக்கை குறைந்தபட்சம் 90 சதவிகித இடங்களில் பிடித்து இருக்கக் கூடும்!

பாரதீய ஜனதா வேட்பாளர்கள் வெற்றி சதவிகிதம் 61 சதவிகிதமாக இருப்பது பிரதமர் மோடியின் ஆட்சி திறனுக்கும் நற்பெயருக்கும் கிடைத்திருக்கும் வெகுமதியாகும்.

மகா கூட்டணியின் சறுக்கல் ஏன்?

எதிர் அணி ஏற்படுத்திய மகா கூட்டணியில் லல்லுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 144 இடங்களில் போட்டியிட்டது. சோனியா, ராகுல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியோ 70 இடங்களில் போட்டியிட்டது. சென்ற முறை காங்கிரஸ் போட்டியிட்டது 40 தொகுதிகளில் மட்டும் தான்! உடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் 29 இடங்களில் போட்டியிட்டன.

லல்லு கட்சியின் வெற்றி சதவிகிதம் 53 சதவிகிதமாக இருக்கிறது. அவர்கள் 144 இடங்களில் 76 இடங்களை வென்று விட்டனர்.

உண்மையில் லல்லு கட்சியின் வெற்றியான 76 இடங்கள்தான் அம்மாநில சட்டசபையில் மிக அதிக இடங்களை வென்ற கட்சியாகும்!

காங்கிரஸ் கட்சியோ 70–ல் 19 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. அவர்களது வெற்றி சதவிகிதம் வெறும் 28 சதவிகிதம் என்பதை தேசிய கட்சியான காங்கிரஸ் உணர்ந்தாக வேண்டும். ஒரு வேளை முந்தைய 2015 தேர்தல் ஒதுக்கீடான 40 இடங்களில் மட்டும் காங்கிரஸ் போட்டியிட்டு இருந்தால், லல்லு கட்சியே ஆட்சியை முழு மெஜாரிட்டியுடன் பிடித்து இருக்கக்கூடும் என்று தேர்தல் நிபுணர்கள் கருத ஆரம்பித்து விட்டனர். இந்த கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் நின்ற 29 இடங்களில் 18 இடங்களை வென்று 52% வெற்றி சதவீதத்தை பெற்றுள்ளனர்.

இது கம்யூனிச சக்திகளுக்கும் மகிழ்ச்சியான செய்தி தான்! அவர்கள் வென்ற சீட்டுகள் தேசிய பாரதீய ஜனதா கட்சியை வீழ்த்திய இடங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆக பாரதீய ஜனதாவின் செல்வாக்கால் பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடித்து விட்டார்கள் தேசிய ஜனநாயக கூட்டணி.

எதிர்த்த மகா கூட்டணியோ தேசிய காங்கிரஸ் கட்சியின் மீது இருக்கும் அதிருப்தியினால் ஆட்சியை பிடிக்க இறுதி சுற்று வரை போராடியும் தோற்றுவிட்டது.

அடுத்த சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் தமிழகம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் கூட்டணிகள் உருவாக இருக்கும் நிலையில் பீகார் தேர்தல் முடிவு பாரதீய ஜனதாவிற்கும் கம்யூனிச சக்திகளுக்கும் வலிமை தந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *